Saturday, July 14, 2012

காங்கிரஸ் உருவாக்கிய மாடர்ன் இந்தியா!


காங்கிரஸ் உருவாக்கிய மாடர்ன் இந்தியா!
பலமான, மதச்சார்ப்பற்ற, சுதந்திரமான, நவீன இந்தியாவை உருவாக்குவதும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களின, நலனைக் கருத்தில்கொண்டு பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதுமே எனது அரசின் இலட்சியம்என்று அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முழங்கியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

அவருடைய முழக்கம் முடிந்துவிடவில்லை, “காங்கிரஸ் என்பது சாதாரண அமைப்பல்ல, அதுவே நவீன இந்தியாவை படைத்தது. காங்கிரஸைப் போன்ற ஒரு கட்சி இந்தியாவிற்கு மிகவும் தேவைப்படுகிறது. காங்கிரஸ் பலம்பெறும்போதெல்லாம் இந்தியா பலம்பெறுகிறதஎன்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நோக்கமஎன்னவென்று அதன் அகில இந்திய காரிய கமிட்டியைக் கூட்டத்தில் இந்த அளவிற்கு பிரதமரும், அக்கட்சியின் தலைவர் சோனியாவும், அவருடைய அரசியல் வாரிசு ராகுல் காந்தியும் (இரண்டு ஹிந்துஸ்தான்கள் உள்ளன என்று கண்டுபிடித்துள்ளார்) பேச வேண்டிய நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.

ரூ.71,000 கோடி செலவில் நடத்தப்பட்ட 19வது காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல், 2ஜி செல்பேசி சேவை நடத்த விடப்பட்ட ஏலத்தில் நடந்த ரூ.1,40,000 கோடி ஊழல், மராட்டியத்தில் கார்கில் போரில் வீர மரணமுற்றவர்களின் குடும்பங்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை தங்களது சொந்த பந்தங்களுக்கு பகிர்ந்தளித்த ஊழல் என்று எத்திசை நோக்கிலும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் வாசம் மனங்கமழ்ந்துகொண்டிருக்க, “காங்கிரஸே நவீன இந்தியாவை உருவாக்கியதஎன்று இந்நாட்டுப் பிரதமர் பேசுகிறார் என்றால், இந்த நாட்டு மக்களை சிந்தனையேதும் அற்றவர்கள் என்று அவர் நினைக்கின்றார் என்றுதான் பொருளாகிறது.

காங்கிரஸ் பலம் பெற்றால் இந்த நாடு பலம் பெறுமஎன்று கூறுகிறார். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 405 இடங்களில் வெற்றி கிடைத்தது. இந்த நாட்டின் முதல் பிரதமர் நேரு இருந்தபோது கூட எந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் அத்தனை இடங்களில் வெற்றி பெற்றதில்லை. அவ்வளவு பெரிய வெற்றியைக் காங்கிரஸிற்கு மக்கள் அளித்தனர். ஆனால் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி என்ன சாதித்தார்?

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் செய்தார். இந்தியாவின் பாதுகாப்பை தரமான பீரங்கிகளை வாங்கி உறுதி செய்ய வேண்டிய இடத்தில், அந்த வாங்குதலில் ஒரு பங்கைப் பெற்றார். அந்த ஊழலின் முக்கிய குற்றவாளியை தப்பவிட இன்றுவரை காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது. ஹெச்டிடபுள்யூ நீர்மூழ்கி ஊழல், ஃபேர்பாக்ஸ் ஊழல் என்று நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் ஊழல் மனம் வீசியது. வீழ்ந்துவிட்ட தனது பெருமையை தூக்கி நிறுத்த இலங்கைப் பிரச்சனையில் மூக்கை நுழைத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு, அவர்கள் ஒப்புக்கொள்ளாத ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு ஆப்பு வைத்தார். போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். அந்த நிறுவனத்தின் அதிபர் ஆண்டர்சனன் ராஜீவ் சம்மத்ததுடனேயே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இப்படி பலமாக இருந்தபோது பல சாதனைகளைச செய்த்ததனால் அடு்த்த நடந்த தேர்தலில், அதற்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களில் பாதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதுதான் காங்கிரஸ் பலமான இருந்து இந்த நாட்டிற்காக சாதித்தது.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் பெற்ற வெற்றியில் தேர்தல் நடத்தி பெரும் வெற்றி பெற்ற இந்திரா காந்தி, தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அவசர நிலை பிரகடனம் செய்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தார். அவருடைய மகன் சஞ்சயின் சாம்ராஜ்யம் இன்றுவரை பேசப்படுகிறது. அடுத்து நடந்த தேர்தலில் வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோற்றது இந்திரா காங்கிரஸ்.

எனவே காங்கிரஸ் கட்சி பலமான இருந்த காலத்திலெல்லாம் நாடு பலவீனமாக (இப்போது இருப்பதுபோல) இருந்ததே தவிர, என்றைக்கும் பலமாக இருந்ததில்லை. இந்த விவரமெல்லாம் இந்தியாவில் யாருக்குத் தெரியும் என்ற ஒரு மயக்கத்தில் பிரதமர் உளறியிருக்கிறார்.

அடித்தட்டு மக்களின் வாழ்நிலை என்ன?

1991இல் ராஜீவ் படுகொலையால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அதுவரை கடைபிடித்துவந்த அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையை கைவிட்டுவிட்டு, பாதை மாறியது. ராஜீவ் காந்தியால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பி.வி.நரசிம்மராவ் நாட்டின் பிரதம மந்திரியானார்!

பொருளாதார நிபுணராக அறியப்பட்டிருந்த மன்மோகன் சிங் நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். இவர்தான் இந்தியாவின் பொருளாதாரத்தை சுதந்திர பாதக்குத் திறந்தவிட்டவர். புதிய பொருளாதார கொள்கை என்றழைக்கப்பட்ட தாராளமயமாக்கலை கொண்டுவந்து அந்நிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அந்த பெருமையைப் பெற்ற மன்மோகன் சிங், இன்று இந்தியாவின் பிரதமராக 8வது ஆண்டாக நீடிக்கிறார்.
ஆனால், அவரே சமீபத்தில் கூட நாடாளுமன்றத்தில் கூறியபடி, 1991ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையை அடுத்த வந்த ஆட்சிகள் (ஜனதா தளம்ஆட்சி உட்பட) கடைபிடித்தன. இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெற்றதாக கூறுகிறார். நாட்டின் உற்பத்தி அதிகரித்தது, வரி வருவாய் அதிகரித்தது, அரசின் திட்டச்செலவுகள் அதிகரித்தன. ஆனால் சராசரி இந்தியனின், மன்மோகன் சிங் குறிப்பிடும் அந்த அடித்தட்டு மக்களின் (…especially those at the bottom of the pile) வாழ்நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?


1990
ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையில் 60 விழுக்காடு. அதே ஆண்டில், அதாவது பிரபல பொருளாதார மேதை மன்மோகன் சிங் இந்த நாட்டில் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியபோது, இந்தியாவின் மக்கள் தொகையில் 51 விழுக்காடு வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்தனர். மன்மோகன் சிங் கூறியபடி, தாராளமயமாக்கலால் இந்த நாடு முன்னேறியிருக்கிறதா என்று பார்த்தால், அடுத்த 15 ஆண்டுகளில் (2005இல்) சீனாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் தொகை 16 விழுக்காடாக குறைந்தது, இந்தியாவில் 41.6 விழுக்காடாக ஆனது. விழுக்காட்டு ரீதியாக குறைந்திருப்பதுபோல் தெரிந்தாலும், மக்கள் தொகை உயர்வையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, 1990ஆம் ஆண்டில் இருந்ததை விட 2 கோடி மக்கள் கூடுதலாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் சீனா 47.5 கோடி பேரை வறுமைக் காட்டிற்கு மேல் கொண்டுவந்துள்ளது!

நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகைக் கணக்கு என்ன என்பதில் கூட குழப்பம் உள்ளது. பொருளாதார நிபுணர் எஸ்.டி.டெண்டுல்கர் தலைமையிலான நிபுணர் குழுவின் மதிப்பீட்டின்படி, 37 விழுக்காடு இந்திய மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.

நாளுக்கு 1.25 டாலருக்கும் (ரூ.56.13)குறைவான வருவாய் உள்ளவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று கூறி, அதனடிப்படையில் இந்தியாவின் 45.6 கோடிப் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளார்கள் என்று உலக வங்கி கூறியுள்ளது. நாளுக்கு 1.35 டாலருக்கும் குறைவான வருவாய் உள்ளவர்களை கணக்கீடு செய்து இந்தியாவில் 62.2 கோடிப் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளார்கள் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி கூறுகிறது. எல்லாவற்றையும் கூட்டி, ஒரு சராசரி மதிப்பீடு செய்து பார்த்தால், பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க, அடித்தட்டு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கை வகுப்பதாக கூறுகிறார் மன்மோகன் சிங்!

இந்திய உணவுக் கழக கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை வறுமையில் வாடும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மனிதாபிமானத்தோடு கூறிய அறிவுரையை செயல்படுத்த முடியாது என்று கூறிய இந்தப் பிரதமர், அடித்தட்டு மக்களின் நலன் பற்றி பேசியுள்ளார். அடித்தட்டு மக்களின் நலன் இவர்களின் பொருளாதார மனதில் இருந்திருந்தால் ஜார்க்கண்டிலும், சட்டீஸ்காரிலும், ஒரிசாவிலும் பழங்குடியின மக்கள் கிளர்ந்தெழுந்திருப்பார்களா?

பலமான, மதச்சார்ப்பற்ற நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மையத்தில் ஆட்சியில் இருந்தபோதுதானே பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் மதக் கலவரம் வெடித்தது? இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது 10 ஆயிரம் சீக்கியர்களை டெல்லியில் படுகொலை செய்தது எந்தக் கட்சி? எனவே, மதச்சார்பின்மையை இக்கட்சி ஆட்சியில் இருந்தபோது சரியான கடைபிடித்திருந்தால் இந்த நாட்டின் சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருக்குமா?

காஷ்மீர் பிரச்சனை, வட கிழக்கு மாநிலங்களில் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்த் தகராறுகள், எல்லைத் தகராறு என்று எதையாவது தீர்த்துள்ளதா காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும்? பலமான நாட்டை பலவீனப்படுத்தும் சிக்கல்களல்லவா இவை யாவும்?

ஆக, காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்கு சாபமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் சரியான அரசியல் மாற்று உருவாக காரணத்தால் இந்த நாட்டு மக்கள் அதன் சுயநல, ஊழல் நிறைந்த, குடும்ப ஜனநாயக அரசியலை சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரத்தைப் பற்றியும் மன்மோகன் சிங் பேசியுள்ளார். மக்கள் எப்போதும் அச்சத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டில் சுதந்திரமாக யாராவது இருக்கிறார்கள் என்றால் அது காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், அவர்களோடு சேர்ந்துக்கொண்டு இந்த நாட்டை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் பெரும் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களுமே. வேறு எவரும் இல்லை.

காங்கிரஸ் உருவாக்கிய மாடர்ன் இந்தியாஇதுதான்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...