Monday, July 23, 2012

மருத்துவ உலகை மாற்றப் போகும் எக்ஸ்.என்.ஏ.!


பரிணாமத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களின் உயிர் வாழ்தலுக்கு அடிப்படையானவை டி.என்.ஏ மற்றும் அர்.என்.ஏ.! டி.என்.ஏ. என்பது டீ ஆக்ஸிரைபோ நியூக்ளிக் ஆசிட். ஆர்.என்.ஏ. என்பது ரைபோ நியூக்ளிக் ஆசிட். இவை இரண்டும் உயிரணுக்களின் உள்ளே தகவல் பரிமாற்றம் செய்யும் வேதியியல் மூலக்கூறுகள்.
உயிர் வாழ்தலுக்கு அடிப்படையான இரண்டு அம்சங்களை கொண்டவை இந்த மூலக்கூறுகள். ஒன்று, மரபணுத் தகவல்களை சேகரித்து, அவற்றை ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கொண்டு செல்லும் மரபியல் அல்லது மரபுவழிச் செயல்பாடு. மற்றொன்று, டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளின் அடிப்படையில் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிச் செயல்படும் அல்லது பரிணமிக்கும் திறன்.
ஆனால், டி.என்.ஏ. மற்றும் அர்.என்.ஏ. தவிர்த்த வேறு வேதியியல் மூலக்கூறுகளால் மரபியல் மற்றும் பரிணாமச் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என்பதுதான் மருத்துவ உலகில் நீண்டகாலமாக விவாதத்தில் இருந்துவரும் முக்கியமான கேள்வி.
இந்த கேள்விக்கு விடை சொல்ல வந்துவிட்டது, எக்ஸ்.என்.ஏ. அல்லது சீனோ நியூக்ளிக் ஆசிட் என்றழைக்கப்படும் ஒரு புதிய வேதியியல் மூலக்கூறு! இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து இதனை உருவாக்கியிருக்கிறார், அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜான் சாபுட்!
எக்ஸ்.என்.ஏ. வகையைச் சேர்ந்த 6 செயற்கை நியூக்ளிக் ஆசிட் பாலிமர்கள், மரபுப்பொருளான டி.என்.ஏ.வுடன் தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பது உலகில் முதல்முறையாக நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்.என்.ஏ. அல்லது ஆன் ஹைட்ரோ நியூக்ளிக் ஆசிட் எனும் ஒரு வகையான எக்ஸ்.என்.ஏ.வுக்கு உயிரியல் நிகழ்வுகளில் பயன்படும் விதத்தில் பரிணமிக்கும் திறனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிர்களின் தோற்றம் குறித்த புதிய கருத்துகளை முன்வைக்கும் இந்த ஆய்வு, மூலக்கூறு மருத்துவத்துக்கான பல புதிய பயன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, புதிய வகையான நோய் கண்டறியும் மருத்துவக் கருவிகள் மற்றும் பயோ சென்சார்களை உருவாக்கத் தேவையான நியூக்ளிக் ஆசிட் ஆப்டாமர்களை எக்ஸ்.என்.ஏ.க்களை கொண்டு உருவாக்க முடியும்.
ஏனென்றால், டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. கொண்டு உருவாக்கப் படும் தற்போதுள்ள நியூக்ளிக் ஆசிட் ஆப்டாமர்களை உடலிலுள்ள இயற்கையான என்சைம்கள் அழித்து விடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், எக்ஸ்.என்.ஏ.க்கள் கொண்டு உருவாக்கப்படும் நியூக்ளிக் ஆசிட் ஆப்டாமர்களை இந்த என்சைம்களால் அழிக்க முடியாது. இதன்மூலம் மிகவும் சக்தி வாய்ந்த பயோசென்சார் மற்றும் நோய் அறியும் கருவிகளை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!
உடலியக்கத்துக்குத் தேவையான புரதங்களை, 20 வகையான அமினோ அமிலங்களைக் கொண்டு உற்பத்தி செய்ய, ஆர்.என்.ஏ. மூலக்கூறு மிகவும் அவசியம். ஆனால், இந்த ஆர்.ஏன்.ஏ. எதிலிருந்து உருவாகிறது என்பது குறித்து இதுவரை ஒன்றும் தெரியவில்லை!
டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ.வின் பண்புகளை உடைய எக்ஸ்.என்.ஏ.வில் இருந்து ஆர்.என்.ஏ. உருவாகி யிருக்கலாம் என்கிறது ஒரு கோட்பாடு. எக்ஸ்.என்.ஏ. தொடர்பான தற்போதைய ஆய்வுகளும் இதைத்தான் வழிமொழிகின்றன.
ஒரு சர்க்கரை மூலக்கூறு, ஒரு டிரை பாஸ்பேட் முதுகெலும்பு மற்றும் நான்கு வகையான நியூக்ளிக் ஆசிட்கள் என மூன்று விதமான வேதியியல் மூலக்கூறுகளால் ஆனவைதான் டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. இந்த மூன்று வேதியியல் மூலக்கூறுகளைக் கொண்டு HNA, CeNA, LNA, ANA, FANA மற்றும் TNA என்றழைக்கப்படும் 6 விதமான எக்ஸ்.என்.ஏ.க்களை உருவாக்கும் திறனுள்ள புதிய பாலிமரேஸ் என்சைம்களை உருவாக்கினார் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி பில் ஹாலிகர்.
இயற்கையில் உயிரணுக்களின் உள்ளே நிகழும் இந்த உயிரியல் நிகழ்வை, சோதனைக்கூடத்தில் நிகழ்த்திக் காட்டிய பெருமைக்குரிய ஹாலிகர் இந்த ஆய்வின் மூத்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக உயிர்களின் தோற்றம் குறித்து விஞ்ஞான உலகம் இதுவரை அறிந்திராத பல புதிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த எக்ஸ்.என்.ஏ. ஆய்வு. அதுமட்டுமில்லாமல், நோய்களைக் கண்டறியும் புதிய கருவிகள் மற்றும் சக்தி வாய்ந்த பயோசென்சார்களை உருவாக்கவும் இந்த எக்ஸ்.என்.ஏ.க்கள் பெரிதும் உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...