Wednesday, July 18, 2012

HIV கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை


ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதை அமெரிக்க ஆய்வின் முடிவுகள் உறுதிசெய்வதாக லான்செட் சஞ்சிகை தெரிவித்திருக்கிறது.
எச் ஐ வி தொற்றுக்குள்ளானவர்களின் நோய் முற்றி, எயிட்ஸ் நோயாக மாறாமல் தடுப்பதற்கு தற்போது ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் மாத்திரை வடிவில் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச் ஐ வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் துணை புரிகின்றன. இந்த ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் உயிர்வாழ முடியும்.
ஆனால் இந்த ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக இருப்பதால், ஒருவர் ஒருவேளைக்கு மூன்று முதல் ஐந்து மாத்திரைகள் வரை விழுங்கவேண்டியிருக்கிறது. இந்த மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு சாப்பிடத் தவறினால் எச் ஐ வி வைரஸ் மேலும் வலிமைந்து பாதிக்கப்பட்டவரை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.
இதற்கு மாற்றாக ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட்டாலே எச் ஐ வி நோயை கட்டுப்படுத்தலாம் என்கிற நிலையை தோற்றுவிப்பதற்காக குவாட் பில் என்று பரவலாக அறியப்படும் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் பயன்பாடு வழமையான ஆண்டிரெட்ரோவைரல் மாத்திரைகள் அளவுக்கு எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்துகிறதா என்பதற்கான ஆய்வுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டன.
இதுவரை மூன்று கட்டங்களை எட்டியுள்ள இந்த ஆய்வின் முடிவில், ஒரு நாளைக்கு ஒருமாத்திரை மூலம் எச் ஐ வி தொற்றை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவந்திருக்கிறது. இந்த மாத்திரை எளிமையானது, பாதுகாப்பானது பயனுள்ளது என்கிறார் இந்த ஆய்வில் பங்கேற்ற ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் துணைப்பேராசிரியர் பால் சாக்ஸ்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...