Tuesday, April 18, 2017

தாந்தியா தோபே

இது ஏதோ உண்ணும் உணவுப்பண்டம் என்றோ நெடுஞ்சாலை ஒர தாபாக்கள் எனப்படும் மோட்டல்கள் பெயரோ என எண்ண வேண்டாம்...
நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆம்! நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மாவீரன் தாந்தியா தோபே. இவன் ஒரு க்ஷத்திரியன் அல்ல. பிரம்மவர்த்தம் அரண்மனையில் கணக்கராக இருந்த ஒரு பிராமணனின் பிள்ளை. மகாபாரதத்தில் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனைப் போல இவனும் பிறப்பால் பிராமணன், வீரத்தால் க்ஷத்திரியன்.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். பிரம்மவர்த்தம் அரண்மனையில் தான் கடைசி பேஷ்வா பாஜிராவ் வாழ்ந்து வந்தார். தனக்கு மகன் இல்லை என்பதால் நாராயணபட் என்பவரின் மகனான நானாவை தத்து எடுத்துக்கொண்டார். அரண்மனையில் நானா இளவரசன் என்றால், இந்த தாந்தியா தோபே இளவரசனின் தோழன்.
பிரம்மவர்த்தம் அரண்மனையில் நானா, தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் ஆகியோர் இளமையில் வீர விளையாட்டுக்களைத் தான் விளையாடி வந்தனர். ஆயுத சாலையில் இருந்த ஆயுதங்களை எடுத்து இவர்கள் பயிற்சி பெற்றது, பின்னாளில் ஆங்கில கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிட பெருமளவில் உதவி செய்தது.
தாந்தியா தோபே அரண்மனையில் கணக்கெழுதும் குமாஸ்தாவாகத் தொடங்கினாலும், யுத்தக் கலையைப் பயின்று மாவீரனாகவும், சிக்கலான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய அறிவாற்றல் பெற்றவனாகவும், ராஜதந்திரியாகவும் அவனால் திகழ முடிந்தது. நல்லோர் சேர்க்கை,  சூழ்நிலை ஆகியவை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பதை தாந்தியாவின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பாஜிராவ் தன் பரிவாரங்களுடன் ஆலோசனை நடத்தும் சமயம் அவர்கள் விவாதிக்கும் விஷயத்துக்கு நல்லதொரு தீர்வை தாந்தியா கொடுத்து சில சமயங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். தர்க்க சாஸ்திரம் அந்த நாளில் நம் நாட்டில் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த தர்க்க சாஸ்திரத்தில் தாந்தியாவுக்கு இயற்கையிலேயே நல்ல பயிற்சி இருந்தது.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். சிப்பாய் கலகத்தை மத்திய இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி ஆங்கிலேயருக்கு மிகுந்த துன்பம் கொடுத்தவர்.
தாந்தியா தோபேயைப் பற்றி ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் சொல்கிறார்:   “புரட்சிப் படைக்குத் தலைமை தாங்குபவர் சாமான்யர் அல்ல. ஐரோப்பாவில் யுத்தக் களத்தில் தங்கள் திறமையைக் காட்டி போர் புரிந்த ஆங்கில தளபதிகளையெல்லாம் தாந்தியா எந்தவித பயமோ, தயக்கமோ இன்றி எதிர்த்து மோதியிருக்கிறார். திறமையான ஒரு தளபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பமும், தீரமும், செயல் திறனும் பெற்றிருந்தார் தாந்தியா தோபே. எதிரியின் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.”
1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர். அந்தக் களத்தில் ஜான்சி ராணிக்கும், நானா சாகேப்புக்கும் சேனாதிபதியாகத் திகழ்ந்த தாந்தியா தோபே தூக்கில் இடப்பட்ட நாள் தான் இந்த ஏப்ரல் 18.
அவர் மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்கவைத்துக் கொண்டார். அதற்குள் இந்த செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.
1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்...
தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஒரு அறைகூவல் விடுத்தார். "அடிமைச்சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெற வேண்டும். பீரங்கியின் வாயில் தெறிக்கும் குண்டில் என் தலை சிதற வேண்டும்; அல்லது தூக்குக் கயிற்றில் என் கழுத்து முறிய வேண்டும்" என்றார்.
தூக்கில் இடுதவற்கு முன்பு, அந்தக் கயிறைத் தானே கழுத்தில் எடுத்து  மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டு இருந்த நாற்காலியை தம் காலால் எட்டி உதைத்தார் ஈடு  இணையற்ற பாரத தாயின் வீர புதல்வன்..
அவரது உயிர் அற்ற உடல், அந்த நாள் முழுவதும் தொங்கிக் கொண்டு இருந்தது. அங்கே இருந்த இராணுவ வீரர்கள், ஆங்கிலத் தளபதிக்குத் தெரியாமல் சல்யூட் செய்தார்கள். பொதுமக்கள் அவர் உடலில் இருந்த தலைமுடியின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய், பொக்கிசமாகப் பாதுகாத்தார்கள்.
இத்தகைய வீரத்திருமகன் உயிர்நீத்த நாள் ஏப்ரல் 18.
அந்த தூக்கு மரத்தில் அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது; பாரதம்  ஒரு வீரப் புதல்வனை இழந்தது. செய்தி கேட்டு தேசபக்தர்கள் எல்லோருமே கதறி அழுத காட்சியை இன்று நாம் மனக்கண்களால் தான் பார்க்க முடியும்.
வாழ்க தேசபக்தன் மாவீரன் தாந்தியா தோபேயின் புகழ்.!
மறக்கடிக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூர்வோம்....

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...