Tuesday, May 9, 2017

தர்மம் தழைக்க தரும ராஜா

பெரும்பனை, இட்டமொழி, திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது பெரும்பனை. இவ்வூரில் அமைந்துள்ளது தருமராஜா கோயில். இது பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியிலிருந்து கருப்பையா நாடார் குடும்பம் பிழைப்பு தேடி பெரும்பனை ஊருக்கு வந்துள்ளனர்.
பெரும்பனை முன்னொரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்ததால் இந்த ஊர் பெரும்பண்ணை என்றே அழைக்கப்பட்டதாகவும் அது மருவி பெரும்பனை என்று அழைக்கப்படலாயிற்று என்றும் கூறுகின்றனர். ஈத்தாமொழி கருப்பையாவின் குல தெய்வம் பொன்னார மாடனும்,
சாஸ்தாவும் ஆகும். கருப்பையா நாடார் தனது குடும்பத்துடன் ஊருவிட்டு வரும்போது அவரது குலதெய்வமும் அவர்களுடன் வந்துவிட்டது. இதையடுத்து தனது குலதெய்வங்களுக்கு பிடிமண் கொண்டு வந்து பெரும்பனையில் கோயில் அமைத்துள்ளார்.
ஊரிலிருந்து வரும்போது தருமர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுடன் திரௌபதியும் சேர்ந்திருக்க கூடிய வரைபடம் ஒன்றினை கொண்டு வந்து வீட்டுச் சுவரில் மாட்டி வைத்துள்ளார்.
வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள் பகலில் கருப்பையா நாடார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது கனவில் தோன்றிய தருமர், என்னை நம்பிய உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் அருள்பாலிக்க விரும்புகிறேன். ஆகவே, எனக்கு கோயில் கட்டி பூஜை செய் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி கருப்பையா நாடார், தனது மகன் பண்டார நாடார் மூலம் 1927ம் ஆண்டு அவர்களது சாஸ்தாங்கோயிலிலேயே தருமருக்கு கோயில் கட்டினார்.அக் கோயில் தருமராஜா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நடுவில் மூர்த்தி சாமி உள்ளார்.
இவர் பொன்னார மாடன் சாஸ்தாவாக கருதப்படுகிறார்.
பஞ்ச பாண்டவரோடு திரௌபதி வீற்றிருக்கிற படம் தெற்கு பகுதியில் வடக்கு திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி பெருமாள்சாமி, ராமசாமி,
பரமசிவம் போன்ற தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, குந்திதேவி, பெருமாள், ராமசாமி, ஜானகி,
பரமசிவம், சுடலைமாடன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் தினசரி பூஜைகள் இல்லை. வாரத்தில் வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மாலை நேரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது.
வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் ஆவணி மாதம் 3வது வெள்ளிக்கிழமைகளில் கொடை விழா நடைபெறுகிறது.
வியாழக்கிழமை இரவு குடியழைப்புடன் தொடங்கும் கொடைவிழா, ஞாயிறு மாலை சாப்பாடு எடுப்பு என்ற
நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது. இக்கோயிலைச் சார்ந்தவர்கள் பழங்காலத்திலேயே தூத்துக்குடி,
பண்டாரபுரம், அச்சம்பாடு, ரெட்டங்கிணறு, நன்னிகுளம், பேய்குளம் போன்ற ஊர்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
கொடை விழாவின்போது இங்கு வந்து வரி கொடுத்து விழாவில் பங்கேற்கின்றனர். பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை பெற்றுக் கொண்டாலும் அதை வரியாக கருதவில்லை.
ஆண்டு தோறும் சைவ கொடைவிழா நடத்தும் இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடா வெட்டி கொடை நடத்துகின்றனர். தருமருக்கு கருத்த கிடா,
பீமனுக்கு அடிவயிற்றில் சிவப்பும் மேல் பகுதியில் வெள்ளை நிறமும் கொண்ட புள்ளப்போர் ஆடும், அர்ச்சுனனுக்கு அடி வயிற்றில் வெள்ளை நிறமும் மேல் பகுதியில் சிவப்பு நிறமும் கொண்ட ஆடு, நகுலனுக்கு சிவப்பில் வௌ்ளை புள்ளி போட்ட ஆடு,
சகாதேவனுக்கு சிவப்பு நிறத்தில் வெள்ளை புள்ளி போட்ட ஆடு, குந்தி தேவிக்கு செம்மறி ஆட்டுக்கிடா என பாண்டவர்களுக்கு பலி கொடுத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இவ்வாறு நிறம் பார்த்து ஆட்டுக்குட்டியை வாங்கி வளர்த்து பலி கொடுக்கத்தான் மூன்று ஆண்டுகள் எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பலியிடப்படும் ஆடுகளை சமைத்து அடுத்தவேளை பூஜையின்போது சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
பண்டார நாடார் சாமி ஆடி வந்தார். அவருக்கு பின்னர் அவரது மகன் ராமர் சாமி ஆடுகிறார்.
கொடை விழாவின்போது சாமி ஆடும் அவர் பீமனுக்கு ஆடும்போது கையில் கதாயுதமும், அர்ச்சுனனுக்கு ஆடும்போது வில்லும், நகுலனுக்கு ஆடும்போது தண்டாயுதமும் கொண்டு சாமி ஆடுவார்.
இக்கோயிலில் கொடைவிழாவின்போது மேளம் பயன்படுத்துவதில்லை, அதற்கு பதிலாக வில்லிசை மட்டுமே பாடப்படுகிறது. முதலில் சாஸ்தா பிறப்பும்,
அடுத்து பாண்டவர்கள் கதையும் பாடப்படுகிறது. பின்னர் சுடலைமாடன் கதையை பாடிய பின்னர் கோயில் அமைந்த கதையையும் கதைப்பாடலாக பாடுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கொடை விழா நிறைவாக வாழி பாடுதல் நடக்கிறது. அப்போது கொடை விழா நடத்தியவர்கள், வரி கொடுத்தவர்கள்,
நன்கொடை அளித்தவர்கள் மற்றும் ஊரிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின்றி செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று வாழ்த்தி பாடுகின்றனர்.
சாஸ்தாவுக்கும், ராமருக்கும் சைவ படையல் படைக்கப்படுகிறது.
மூன்று நாள் கொடைவிழாவில் சனிக்கிழமை காலை ராமருக்கும், ஜானகி அம்மனுக்கும் திருமண வைபோக பூஜை நடத்தப்படுகிறது. அது முடிந்த பின் கருப்பட்டியும்,
வாழைப் பழமும் சேர்த்து பக்தர்களை நோக்கி வீசுகின்றனர். அதை பக்தர்கள் ஆவலோடு ஓடிச்சென்று வாங்கிக் கொள்கின்றனர்.
இதில் பிரசாதம் கிடைக்காதவர்களுக்கு கடைசியில் அவர்களை தேடிக்கொண்டு கொடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதை தருமச் சாப்பாடு என்கின்றனர்.
இக்கோயிலில் எல்லா தெய்வ சந்நதியிலும் திருநீறு கொடுத்தாலும், திரௌபதி, குந்தி தேவி சந்நதிகளில் குங்குமமும்,
ராமர் சந்நதியில் திருமண்ணும் வழங்கப்படுகிறது. சுடலைமாடன் சந்நதியில் திருநீறு பூசும் பக்தர்கள், ராமர்சந்நதியில் திருநாமம் இட்டுக் கொள்கின்றனர்.
சாதி, மதவேறு பாடின்றி அனைவரும் இக்கோயில் விழாவில் பங்கேற்கின்றனர். இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம் செல்லும் வழியில் இட்டமொழியிலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தருமராஜா கோயில் என்றும் பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

Tuesday, May 2, 2017

சத்தியம் வத (உண்மையே பேசு)

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.
சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.
இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பேன்.

அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.
திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)
நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பதவிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை.

“எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

                - என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...