Tuesday, July 31, 2012

அரசின் அலட்சியம்

 
அரசின் அலட்சியம்: 6.6 மில்லியன் டன் கோதுமை வீணாகும் அபாயம்!

நாட்டில் ஒருபக்கம் ஒருவேளை உணவுக்காக ஏழை,எளிய மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில், மறுபுறம் இந்த மழைக்காலத்தில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6.6 மில்லியன் டன் கோதுமை அழுகி சேதமடையும் அபாயம் இருப்பதாக பதைபதைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே உணவு தானியங்களை இருப்பு வைக்க இந்திய உணவுக்கிடங்குகளில் போதுமான இடமில்லாமல், திறந்தவெளியில் அவற்றை கொட்டிவைப்பதால் பல லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் வீணாவதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியானது.இதனையடுத்து,உச்ச நீதிமன்றம் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது.

மேலும் வீணாகும் உணவு தானியங்களை நலிந்த பிரிவினருக்கு இலவசமாக கொடுக்க முடியுமா? என்பது குறித்து பரிசீலிக்குமாறும்,அத்தகைய நலிந்த பிரிவினர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் உணவு தானியங்களை இலவசமாகவெல்லாம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்ட மத்திய அரசு,இதற்காக உச்ச நீதிமன்றத்திடமிருந்து கண்டனங்களை வாங்கிக்கட்டிக்கொண்டபோதிலும், மேற்கொண்டு இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தது.

இந்நிலையில்” நாடு முழுவதும் உள்ள உணவுக்கிடங்குகளில் இடம் கிடைக்காமல், வீதிகளில் கோதுமையையும், நெல்லையும் கொட்டி வைத்திருக்கின்றனர்.சாக்கு பைகள் கூட இல்லாமல் அரசாங்கம் இருக்கிறது.இதைத் தடுக்க,உருப்படியான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை!” என கடந்த மே மாதம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டின.

இதற்கு அப்போது பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,”சணலால் தயாரிக்கப்படும் சாக்கு பைகள் தான், உணவு தானியங்களை போட்டு சேமித்து வைப்பதற்கு உரிய சரியான வழி.பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைத்தால், தானியங்கள் கெட்டுவிடும் நிலை இருக்கிறது.துரதிஷ்டவசமாக சாக்கு பைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால், தானியங்களை போட்டு வைக்க முடியாத நிலை காணப்படுகிறது.இந்நிலையை சரி செய்ய, வெளிநாடுகளில் இருந்து சாக்கு பைகளை இறக்குமதி செய்யலாமா என்று அரசாங்கம் பரிசீலித்து வருகிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மாதங்கள் இரண்டு கடந்துவிட்ட போதிலும்,மத்திய அரசு இதுவரை இப்பிரச்னையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக, இந்த மழைக்காலத்தில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6.6 மில்லியன் டன் கோதுமை அழுகி சேதமடையும் அபாயம் இருப்பதாக மத்திய உணவுத் து்றை அமைச்சர் கே.வி. தாமஸே ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்,”சுமார் 6.6 டன் கோதுமை பஞ்சாப்,மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கிடங்குகளில் உரிய பாதுகாப்பாற்ற முறையில் திறந்தவெளியில் கிடக்கிறது.
மழைக்காலத்தில் இவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முன்னுரிமை நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் கால இடைவெளிவிட வேண்டும் என்றும்,தேவைக்கேற்ப மட்டும் உணவு தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இப்போதைக்கு அரசின் உணவு தானியக்கிடங்குகளின் கொள்முதல் திறன் 64 மில்லியன் டன்னாக உள்ள நிலையில்,அதற்கும் கூடுதலாக 82.3 மில்லியன் டன் கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இடமில்லாத காரணத்தால் 27 மில்லியன் டன் கோதுமை திறந்தவெளியில்,பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கும்,வெளிச்சந்தைகளுக்கும் வழக்கமாக அனுப்பவதிலிருந்து, கூடுதலாக 8 மில்லியன் டன் தானியங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஆனாலும் எஞ்சியிருக்கும் தானியங்களை மழைக்காலத்தில் பாதுகாக்க வேண்டும்.ஆனால் அரசின் கடந்த கால நடவடிக்கைகள் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...