Showing posts with label Temples. Show all posts
Showing posts with label Temples. Show all posts

Saturday, August 4, 2018

நஞ்சு பொய்கை!

ஆறாத புண்ணை ஆற்றும் பாண்டவர்கள் தண்ணீர் குடித்த நஞ்சு பொய்கை!

குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை. இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும் அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறது. காலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள். சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது. பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. மருண்டுபோன மான் திக்குத்தெரியாமல் ஓட்டம்பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார். பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர். வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர்.

அனைவருக்கும் தாகம் ஏற்பட்டதால் எங்கிருந்தாவது தண்ணீர் எடுத்துவரும்படி நகுலனிடம் தருமர் கூறினார். தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது  அசரீர் ஒலித்தது. "இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீர் பருகலாம்" என்றது அசரீரி. சுற்றும்முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான். ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது "உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்" என்றது.

''முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான். மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். "தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று பீமனிடம் தருமன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. 'எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்?' என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன். தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. "என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்" என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் "இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார்.

எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன். இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன். தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில் "மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்" எனக் கேட்டது.
''நகுலனை எனக்குத்  திருப்பிக்கொடுங்கள்'' என தருமர் வேண்டினார். "யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்" என அசரீரி கேட்டது.

அதற்கு தருமன், "என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள். நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல" என்றான்.

தருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார். "தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்" என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார் தர்மதேவன்.

தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது.  சர்வேஸ்வரன்அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.

மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

சொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது, "சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள். ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது. மகாகவிஷ்ணு, லட்சுமி தேவியும் நின்றகோலத்தில் காட்சியளிக்கின்றனர். வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள். இக்கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது. நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள். எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எநக்ச் சேதாரமும் ஏற்படவில்லை. நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது" என்றார்.

பொய்கையைப் பார்த்தவண்ணம் வினைதீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. பொய்கைக் கரையில் யமதர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. நவகிரக சந்நிதி, மகாவிஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மகாவிஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.

"விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது. பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்" என்கிறார் கோயில் பூசாரி ராமன்.

எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?

நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம். சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும் தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம். அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது. சொத்தவிளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.

Sunday, July 8, 2018

தலையெழுத்தை மாற்றும் தலைக்காடு சிவன்


  மைசூரு    அருகில்     தலைக்காடு   என்ற  இடத்தில்  சிவபெருமான்  கோயிலொன்று   உள்ளது.   இங்கே சிவபெருமான்   "வைத்தியநாதன்"   என்ற பெயரில்  லிங்க வடிவில்  காட்சியளிக்கிறார்.  முற்காலத்தில்  "சோமதத்தர்"   என்ற   முனிவர்  கைலாய பதவியைப்  பெற விரும்பி சிவபெருமானை  நோக்கி   வழிபட்டாராம். இவரது   கனவில் தோன்றிய சிவன்,  'சோமதத்தனே!கஜாரண்யம் என்னும் காட்டிற்கு சென்று என்னை பூஜித்து   வந்தால்  உன் எண்ணம் நிறைவேறும், என்றாராம்.  ஆனால்  முனிவரால் தவம் செய்ய முடியாதவாறு   யானைகள் இடையூறு செய்யவே, முனிவரும் ஒரு யானையாக மாறி  அக்காட்டில்  தவம் செய்தாராம். ஒருநாள் தலா, காடன் என்னும் இரண்டு வேடர்கள்,யானை  என நினைத்து   முனிவரைப் பிடிக்க குறி வைத்தனராம்.  ஆனால், குறி தவறிய அம்பு அருகிலுள்ள புற்றில் பாயவே   அதிலிருந்து  இரத்தம் பீறிட்டதாம். அப்போது அசரீரியாக, 'வேடர்களே! இந்த புற்றில் லிங்க வடிவில் நான் இருக்கிறேன். அம்புபட்ட என் மேனியில் ஏற்பட்ட காயம் தீர மூலிகை மருந்திடுங்கள்'  என்றாராம் சிவபெருமான்.

                  வேடர்களும் அப்படியே செய்ய, சிவன் நேரில் காட்சியளித்து வேடர்களுக்கும், யானையாக இருந்த முனிவருக்கும் கைலாய பதவியளித்தாராம். . சிவபெருமான்   இத்தலத்தில் 'வைத்தியநாதராக வீற்றிருக்கிறார்.   புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியதால்,  இங்கே   சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. சிவலிங்கத்தின் பாணத்தில் சிவபெருமானின் முகம் கவசமாக உள்ளது. ஐந்து தலை நாகாபரணத்தை சூடியிருக்கும் இவரை தரிசித்து தீர்த்தத்தைக்  குடித்தால், நீண்டகால நோயும் தீரும். 'மிருத்திகா' என்னும் புற்றுமண்  இங்கே  பிரசாதமாக தரப்படுகிறது.

                பெருமாள் கோயில் போல   தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் சொர்க்க வாசல் உள்ளது.   எனவே  இங்கே  வந்து  சிவபெருமானை    வழிபடும்  பகதர்களின்    தலையெழுத்து மாறி,    நல்வாழ்வு அமையும் என்பது  ஐதீகம்.   கோபுர வாசல் தவிர 'கைலாய வாயில்' எனப்படும் சொர்க்கவாசலும் இக் கோயிலில்   உள்ளது. பொங்கலன்று சுவாமியும், அம்பாளும்   காளை   வாகனத்தில்  இராஜகோபுரத்தின் வழியாக உலா செல்வர். கோயிலுக்கு திரும்பும் போது சொர்க்க வாசல் வழியாக உள்ளே நுழைவர்.

                  அம்பிகை மனோன்மணி என்ற  பெயரில்   இரு கைகளில் தாமரை மலரைத் தாங்கி நிற்கிறாள்.   சக்தி கணபதி, பத்ரகாளி, கமடேஸ்வரர், அபய வெங்கட்ரமணர், மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் பஞ்சலிங்க சன்னதி வெளிப்பிரகாரத்தில் உள்ளது. சொர்க்கவாசலுக்கு எதிரே சுதையால் ஆன நந்தி உள்ளது. கோயிலில் சிற்பியாகப் பணியாற்றிய நாககுண்டலாச்சாரி தன் பெயரைக் குறிப்பிடும் விதத்தில் பாம்பாலான கல் சங்கிலியை உருவாக்கி உள்ளார். கோயில் அருகில் கல்யாணி தீர்த்தம் உள்ளது. தலக்காட்டைச் சுற்றி காவிரியாறு நான்கு திசைகளிலும் வளைந்து திரும்புகிறது.
   
             இவ்வூரின் கிழக்கில் சூரியன் வழிபட்ட அர்க்கேஸ்வரர், மேற்கில் அர்ஜுனன் வழிபட்ட மல்லிகார்ஜுனேஸ்வரர், வடக்கில் பிரம்மா வழிபட்ட சைகதேஸ்வரர், தெற்கில் வாசுகி வழிபட்ட பாதளேஸ்வரர் கோயில்கள் உள்ளன. நடுவில் தலக்காடு வைத்தியநாதர் கோயில் உள்ளது.

            மூலவர் சன்னதி நுழைவாயிலின் இருபுறமும் நந்தி, மகாகாளர் என்னும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. நந்தி ஆண் கல்லினாலும், மகாகாளர் பெண் கல்லினாலும் வடிக்கப்பட்டுள்ளனர். நந்தியைத் தட்டினால் 'கண்டநாதம்' என்னும் மணியோசையும், மகாகாளரைத் தட்டினால் 'தாளநாதம்' என்னும் இனிய ஓசையும் கேட்கும். சிற்பக்கலைக்கு சான்றாக இது விளங்குகிறது.

                 இக்கோயிலில் விஜயகணபதி. என்ற பெயரில்  விநாயகர்,  குதிரையின் மீது போர் வீரர் போல வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் வெற்றி  கிடைக்கும். கல்வி முன்னேற்றத்துக்காக செம்பருத்திப்பூ வைத்து மாணவர்கள் வழிபடுவது இங்கே  வழக்கம். இந்த  குதிரை வாகனத்தின் கால்களை மறைத்து விட்டு பார்த்தால் மூஞ்சூறு போல காட்சி தருவது அதிசயமே.

Monday, June 26, 2017

கி.பி. 16-ஆம் நூற்றாண்டு சுவரோவியம்

காயல்பட்டினத்தில் அரேபிய குதிரை வியாபாரிகள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு சுவரோவியம் நாறும்பூநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் நெ
ல்லை மாவட்டம்

Tuesday, March 7, 2017

கொடிமரத்து சிறு நைனார் பள்ளி

கொடிமரத்து சிறு நைனார் பள்ளி, காயல்பட்டினம், உட்புறதோற்றம்!
சிற்பங்கள் கொண்ட தூண்கள் சிமென்டினால் மூடப்பட்டுள்ளன.
கர்ப்பகிருகம் மூடப்பட்டு ஆர்ச் வடிவ சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

Temples is now ???????

வேலூர் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது சைதானிபீபி தர்கா. Zoom see inside

Thursday, February 23, 2017

முன் ஜென்மம் நிஜமா?

பக்தர் ஒருவருக்குச் சில சந்தேகங்கள். பகவானிடம் தெளிவு பெறுவதற்காக வினா எழுப்பினார்.

பக்தர் : நான் முன் ஜென்மத்தில் எப்படி இருந்தேன், என்னவாக இருந்தேன் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

பகவான் : முன் ஜென்மங்களைப் பற்றி விசாரிக்கும் முன் இப்போது உமக்கு இருக்கும் ஜென்மம் உண்மையா? இப்போது உமக்கு ஜென்மம் எது என்று பார்க்கலாமே! நம் எல்லாரிடமும் உள்ள குறை என்னவென்றால், கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம், எதிர் காலத்தில் எப்படி இருப்போம் என்று தெரிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால் கடந்த காலத்தைப் பற்றியோ, வரப்போவதைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. நிகழ்வது தெரியும். நேற்றும், நாளையும் இன்றைய தினத்தைப் பொறுத்தே உள்ளன. நேற்றை, அப்போது இன்று என்றே அழைத்தோம். நாளையும் இன்று என்றே நாளைக்குச் சொல்வோம். ஆக, அதற்கு இறந்த காலமும், எதிர்காலமும் இல்லை. நிகழ்காலத்தின் உண்மை இயற்கையை, நிரந்தர, சாஸ்வதமான இருப்பைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நிகழ்காலத்தைப் பொறுத்தே, சென்றகாலம், வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் நிகழ்கின்றபோது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும், நிகழ்காலம் என்ற ஒன்றே இம்மூன்றுமாம். ஆகையால் இப்போதே தன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் சென்ற கால, வருங்கால ஆராய்ச்சிகள் செய்வது, ஒன்று என்னும் முதல் எண்ணை விட்டுவிட்டு எண்ண முயல்வது போல்தான் ஆகும்.

பக்தர் : எப்போதும் மௌனமாக இருப்பது நல்லதா?

பகவான் : மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை. பக்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

Saturday, January 23, 2016

ஐஸ்வரியம் தருவார் ஸ்ரீசௌந்தர பாண்டீஸ்வரர்!



  திருநெல்வேலியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்கரு வேலங்குளம். இங்கே சௌந்தரபாண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். அம்பாளின் பெயர் ஸ்ரீகோமதி அம்பாள்!

  கோயிலின் மகா மண்டபத்தில், பலகை ஒலியுடன் கூடிய சிறிய தூண்கள் பிரமிக்க வைக்கின்றன. அங்கே கல்தூண் ஒன்று சுழல்வது போல் அமைக்கப் பட்டிருப்பது கட்டட நுணுக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது. யாளி சிலையின் வாயில் ஒரு கல் உருண்டை, சுழல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர், புலிப்பாணி சித்தர் முதலானோர் இங்கு தவம் செய்து சிவதரிசனம் செய்துள்ளனர். இதைக் குறிக்கும் வகையில் இவர்களுக்கு சிலைகளும் இங்கு உள்ளன!

 மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திர நாளில், ஸ்ரீசிவகாமி அம்மைக்கும் ஸ்ரீநடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், சகல சௌந்தர்யங்களுடன் இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

- வி.ராம்ஜி

ஸ்ரீகனகசபாபதி கோயில்- கரிசூழ்ந்தமங்கலம்



நெல்லையில் இருந்து மேலப்பாளையம் வழியே சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ளது பத்தமடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ. தொலைவில் உள்ளது கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலம். இங்கே சிவனாரின் பெயர் ஸ்ரீகனகசபாபதி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீசுந்தராம்பிகை!

  ஒருகாலத்தில், கட்டாரிமங்கலம் முதலான இந்தப் பகுதிகளை ஆட்சி செய்தவர் வீரபாண்டியன் எனும் சிற்றரசன். மணற்படைவீட்டை ஆட்சி செய்த முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னனின் உறவினர் இவர். செப்பறையில் உள்ள நடராஜரைப் போல தன்னுடைய ஊரிலும் இருக்கவேண்டும் என விரும்பினான். அதன்படி நமசிவாய ஸ்தபதி என்பவர் தாமிரத்தைக் கொண்டு சிலை செய்யும் பணியில் இறங்கினார்.

  கட்டாரிமங்கலத்துக்கு ஒன்று, நெல்லையப்பர் கோயிலுக்கு ஒன்று என செய்யச் சொன்னான். சிலை முழுமை பெற்றதைக் கண்ட வீரபாண்டியன், இப்படியொரு அழகுச் சிலை வேறு எவருக்கும் செய்யக்கூடாது என நினைத்து, சிற்பியின் கைகளை வெட்டினான். இரண்டு சிலைகளில் ஒன்று கட்டாரிமங்கலத்துக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு சிலையை எடுத்துவரும்போது, ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, நீரில் சிக்கிக் கொண்டது. வெள்ளம் வடிந்ததும் அந்த ஊர்மக்களின் கண்களில் பட... தென்கரையில் வைத்து வழிபட்டார்கள்!

 அன்றிரவு மன்னனின் கனவில் வந்த இறைவன், கரையில் உள்ள இடத்தில் கோயில் கட்டு என அருளினார். என கரிசூழ்ந்தமங்கலத்தில் கோயில் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.

  தென்காளஹஸ்தி எனப் போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம் இது. அம்பாள் சுந்தராம்பிகை, பெயருக்கு ஏற்றார்போல, அழகு ததும்பக் காட்சி தருகிறாள். தோஷங்கள் நீக்கி அருளும் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

 கோயில் நேரம் :
  காலை 6 முதல் 9 வரை.
  மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை.

- வி.ராம்ஜி

Friday, January 8, 2016

மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்!



  செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவநினைப்பிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பக்தர்... பூசலார்!

    ஒருநாள் என் சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன? என்று தோன்றியது. ஆனால் கையில் காசு இல்லை. செல்வந்தர்களிடம் சிவ பக்தர்களிடம் பொருளுதவி கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதில் நொந்துபோனார்.   அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. ஒரு பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டத் துவங்கினார் பூசலார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்ட ஆரம்பித்தார்.  ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, சிவனாரை வேண்டி, மளமளவென வேலைகளை மனதுக்குள்ளேயே வேலைகளை முடுக்கிவிட்டார்.  கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார்.

  அதே வேளையில்... காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் ஆன ஆலயத்தைக் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறித்தான்.

  பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரேநாளாக அமைந்தது. அங்கே... சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது! மன்னனின் கனவில் தோன்றிய சிவனார், ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற முடியுமா? திருநின்றவூரில் என் பக்தர் ஒருவர் எனக்காக, அழகாக ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அங்கே நாளைய தினம் கும்பாபிஷேகம். நான் அங்கேதான் இருப்பேன். ஆகவே தேதியை மாற்ற முடியுமா?’’ என்று கேட்டார். 

அதைக் கேட்டு அதிர்ந்தான் மன்னன். ராஜாவான நாம் கட்டிய ஆலயத்தை விட, அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரே இறைவன் என சிந்தித்தவர், தன் படைகளுடன் திருநின்றவூருக்கு உடனே கிளம்பிச் சென்றான்.

 அங்கே,  அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை. ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலை’ என்று தெரிவித்தனர். அப்படியே விசாரித்தபடியே வந்தவர், பூசலாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்க, ‘ஆமாம், கோயில் கட்டி முடித்து, நாளைய தினம் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது’ என்றார். அதைக் கேட்டு குழம்பிய மன்னன், ‘அந்த ஆலயம் எங்கே’ என்று கேட்க, தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைக்க... அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினார்.

  பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஆலயம் எழுப்பினான். பூசலாரும் நாயன்மார்களில் ஒருவரானார்! திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள அந்தக் கோயிலின் இறைவன் ஸ்ரீஇருதயாலீஸ்வரர்!

ஸ்ரீநெல்லையப்பர் கோயில்



திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், டவுன் எனும் பகுதியில் உள்ளது நெல்லையப்பர் கோயில். ச்வாமி ஸ்ரீநெல்லையப்பர். அம்பாள் ஸ்ரீகாந்திமதி.

  ஏழை அந்தணர் உலர்த்தியிருந்த நெல், மழையில் நனைந்து விடும் நிலையில், சிவபெருமான் வேலியிட்டுக் காத்தருளினார். எனவே அவருக்கு ஊருக்கு நெல்வேலி என்றும் சிவனுக்கு நெல்லையப்பர் என்றும் பெயர் அமைந்தது. 32 தீர்த்தங்களைக் கொண்ட பிரமாண்டக் கோயில் இது! ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடிய திருத்தலம்!

மூங்கில் வனமாகத் திகழ்ந்ததால் வேணுவனம் என்றும் வேணுவனநாதர் என்றும் அமைந்தது. உலக மக்களுக்காக உமையவள் தவமிருந்து சிவனருளைப் பெற்றாள் இங்கே. எனவே காந்திமதி அன்னை சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்!

 நெல்லை வேலியிட்டுக் காத்த தலத்தில் வந்து வேண்டினால் நம்மையும் நம் சந்ததியையும் காத்தருள்வார் என்பது ஐதீகம்! கேட்கும் வரங்களை கருணையுடன் தந்தருள்வாள் காந்திமதி என்பது நம்பிக்கை. இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் காந்திமதி என்று பெயர் சூட்டுவது அதிகம்!

  கோயில் நேரம் :
 காலை 6 முதல் 12.30 வரை.
 மதியம் 4 முதல் இரவு 8.30 வரை.

திருமுடியையே விளக்குத் திரியாக்கியவர்!



  வடவெள்ளாற்றின் தென்கரையில், இருக்குவேளூர் எனும் தலத்தில் மக்களின் பேரன்பைப் பெற்று வாழ்ந்து வந்தார் கணம்புல்ல நாயனார். இவர்,  சிவனருட் செல்வர். சிவபக்தியால், ஈசன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்கு நெய்விளக்கேற்றுவதற்கான பணிகளை செவ்வனே செய்து வந்தார்.  

கோயில்கோயிலாகச் சென்று, விளக்கேற்றுவதையே வாழ்க்கையாகக் கொண்டவர், கொஞ்சம் கொஞ்சமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் விளக்கேற்றும் திருப்பணியை விடவில்லை இவர்! நிலங்களையும் வீடுகளையும் மாடுகளையும் விற்று காசாக்கி, அதை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று, விளக்கேற்றி தொழுதார்.

தில்லை எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். நடராஜர் பெருமானின் அழகில் சொக்கிப் போய் அங்கேயே, அந்த ஊரிலேயே தங்கினார். அருகில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று நெய்விளக்கேற்றி மகிழ்ந்தார். கையில் இருந்து காசு கரைந்தது.

  பிறகு, வனத்துக்குச் சென்று, கணம்புல் எனும் ஒருவகை புல்லை அறுத்து, அதை அப்படியே திரியாக்கி விற்கும் வேலையில் இறங்கினார். ஒருகட்டத்தில் அவை விற்கவே இல்லை. அந்தத் திரிகளைக் கொண்டு, விளக்கேற்றினார். ஆனால் எரிய வைத்த சில விநாடியிலேயே திரி அணைந்தது. இதைக் கண்டு நொந்து அழுதவர், அந்த முடிவுக்கு வந்தார். நிற்காமல் எரியவேண்டும் என்பதற்காக விளக்கில் தன் திருமுடியை, தலையை வைத்தார்.  அவரின் தலையில் மெள்ள மெள்ள தீப்பற்றத் துவங்கியது.

  விளையாட்டு போதும் என முடிவுக்கு வந்த சிவபெருமான், திருப்புலீச்சரம் எனும் தலத்தில் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். ஆட்கொண்டார்.
  கணம்புல்ல நாயனார் என்று உலகளவும் சிவபக்தர்களால், போற்றப்படுகிறார்!

ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மல்லேஷ்வரம், பெங்களூரு



1902ம் வருடத்தில் பெங்களூரு மல்லேஷ்வரம் பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வாலயம்  கட்டப்பட்டது. மைசூர் மகாராஜா அவரது நிலத்தையும், அதிகபட்ச நன்கொடையையும்  வழங்கினார். பஞ்சராத்திராகம சாஸ்திர விதி முறைப்படி இவ்வாலயம் கட்டப்பட்டது. வேத மந்திரங்கள்,  தமிழ் வேதங்கள் முழங்க இங்கே பூஜைகள், ஆராதனைகள் நடைப்பெறுகின்றன.

நூறு வருடத்திற்கு முன்பு கருங்கல்லால் கட்டப்பட்ட ஆலயம் இது. எல்லா விக்கிரகங்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டது. மூலவரின் சிலை ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. திருக்கடலூர் எனும் இடத்தில் ஒரு இடிப்பாடான கோவிலிலிருந்து இச்சிலை கொண்டு வரப்பட்டது.

அம்பேகாலு நவநீத கிருஷ்ணர் திருக்கோவில், தோட்ட மல்லூர், கர்நாடகா



பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் தவழ்ந்தப்படி காட்சி அளிக்கிறார். அதோடு, ஒரு கையில் வெண்ணை உருண்டையை(நவநீதம்) என்தியப்படி அறிய காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் மூலவர் ஸ்ரீ அப்ரமேய சுவாமி மற்றும் ஸ்ரீ அரவிந்தவல்லி தாயார் ஆவர்.

கர்நாடக சங்கீதத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த நனவீத கிருஷ்ணரை போற்றி 16ம் நூற்றாண்டில் "ஜகதோதாரணா"என்ற புகழ்பெற்ற பாடலை பாடினார்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இங்கே நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணை காப்பு சாற்றுவார்கள். பிறகு வெண்ணையை பிரசாதமாக பெற்றுகொள்வார்கள்.

காரையாறு ஸ்ரீசொரிமுத்தையனார் கோயில்



  நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியே செல்லும் பாதையில், சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது காரையாறு எனப்படும் சிங்கம்பட்டி. பொதிகைமலையில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது!

   வணிகர்கள், பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்லும் போதெல்லாம், வழியில் உள்ள பாறை ஒன்றில் குளம்படி பட்டு, ரத்தம் பெருகியது. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்து நிகழ... எல்லா வணிகர்களும் அந்த இடத்துக்கு வந்து என்னவாக இருக்கும் என யோசித்தனர். அப்போது, குருதி வருகிற பாறைக்குக் கீழே மகாலிங்க சுவாமி இருக்கிறார். அவருக்கும் கூடவே சொரிமுத்தையன், சங்கிலிமாடன், பிரம்மராட்சஷி முதலானவர்களுக்கும் சிலை அமைத்து வழிபடுங்கள்’ என அசரீரி கேட்டது. அதையடுத்து, இங்கே ஆலயம் அமைத்து வழிபடலானார்கள் என்கிறது ஸ்தல வரலாறு.

  சிவ பார்வதியின் திருமணத்தின் போது, தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என அனைவருக்கும் வடக்கே வந்து சேர, அதனால் தெற்கு தாழ்ந்தது. இதை சமன் செய்ய, சிவபெருமான் அகத்திய முனிவரை அங்கே அனுப்பினார். இங்கே, இப்போது கோயில் உள்ள இடத்தில் தங்கி, நித்ய அனுஷ்டானங்களைச் செய்தார் அகத்தியர். அப்போது சாஸ்தாவான அய்யனார், இங்கு சூட்சும வடிவில் இருப்பதை உணர்ந்தார். அவரையும் சேர்த்து வணங்கினார். அப்போது, அங்கே வானில் இருந்து மலர் சொரிந்தது. இதனால், மலர் சொரி முத்தையனார் என பெயர் அமைந்ததாக புராணம் தெரிவிக்கிறது.

  சக்தி வாய்ந்த அய்யனார். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்!

  கோயில் நேரம் :
  காலை 6 முதல் 10 மணி வரை.
  மாலை 5 முதல் 7 மணி வரை.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...