Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, February 4, 2020

சியாமளா தண்டகம்

காளிதாசன் பல இடங்களுக்கு நடந்து சென்றவன். பல மன்னர்களை பல தேசங்களில் சந்தித்து பரிசு பாராட்டு பெற்றவன். பல பண்டிதர்களை வென்றவன். கவிதையுலகில் காவிய உலகில் முடிசூடா மன்னன். 

ஒருநாள்  பகலில் எங்கோ பட்டை தீர்க்கும்  வெயிலில்  மாட்டிக்கொண்ட காளிதாசனுக்கு  தொண்டை வறண்டு தாகம் .. தண்ணீரை தேடினான்.  சற்று தூரம் சென்றது ஒரு கிராமம் வந்தது. அதில் ஊர்க்  கோடியில் ஒரு கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் சேந்திக்  கொண்டிருந்ததைப்  பார்த்ததும்  நெஞ்சு வறட்சியும்  தாகமும்  அவளை நோக்கி செல்ல வைத்தது.   

''அம்மா  கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?''
''ஆஹா  தருகிறேன்.. நீ  யாரப்பா?''
 இவள்   பார்த்தால்  நிரக்ஷர குட்சிபோல் இருக்கிறாளே. இந்த படிக்காத பட்டிக்காட்டு பெண்ணிடம் தனது பாண்டித்யம் பற்றி  எதற்கு சொல்லவேண்டும்.  அவசியமே இல்லையே என்று நினைத்த காளிதாசன்  ''அம்மா  நான் ஒரு  யாத்ரீகன்' என்றான்.

'அதென்னப்பா  அப்படி சொல்கிறாய்?  இந்த உலகத்திலேயே   ரெண்டே ரெண்டு  பேர் தானே யாத்ரீகர்கள். ஒருவன் சூரியன் மற்றவன் சந்திரன்.  இவர்கள் தானே  காலையில் எழுந்ததிலிருந்து மாலை மறையும் வரை  ஒருவன்,  இரவில் எழுந்தது முதல் மறுநாள் விடியற்காலை வரை  இன்னொருவன் என்று விடாமல் குறித்த நேரத்தில்   ஒருவர் மாற்றி இன்னொருவர் யாத்திரை செய்பவர்கள்.
''சரிம்மா,  அப்படியென்றால் நான் ஒரு  விருந்தாளி, அதிதி என்று வைத்துக் கொள்ளேன். என்றான் காளிதாசன் .
''தம்பி, நீ ஏதோ அர்த்தம்  புரியாமல் நீ ஒரு அதிதி என்கிறாய் .   இந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு பேர் தான்  அதிதி.விருந்தாளிகள் .  வந்து போய்விடுபவர்கள்.   இளமையும்  செல்வமும் தான் அது . நிரந்தரமில்லாதவை''  என்றாள்  அந்த பெண். 

காளிதாசன் திகைத்தான்.  ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.  ஒரு நாட்டுப்புற பெண்ணுக்கு இவ்வளவு அறிவா?  இவளை மேலும் சோதிக்க அடுத்து தன்னை யார் என்று எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன்   ''அம்மா  அப்படி யென்றால்  நான்  ஒரு ''பொறுமைசாலி'' என்று வைத்துக் கொள் '' என்றான்.

அவள் சிரித்தாள். நீ விவரம் தெரியாதவனாக  இருக்கிறாயே. இந்த உலகில் ரெண்டே ரெண்டு தான் பொறுமைக்கு இலக்கணம். ஒன்று பூமி, அகழ்வாரை தாங்கும் நிலம். தன்னை ஆழ தோண்டினாலும் இடம் கொடுப்பது.  மற்றொன்று  விருக்ஷம், மரம்.  வெட்டுபவனுக்கே, கல்லால் அடிப்பவனுக்கே   நிழலும் கனியும் கொடுப்பது. நீ அப்படி ஒரு பொறுமைசாலியா?  சொல்வதானால் ஏதாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். நீ யார் சொல்?'' என்றாள்  அந்த பெண். 

காளிதாசன் யோசித்தான். தனது திறமையை உபயோகிக்க ஆரம்பித்தான்   ''அம்மா  நான் இந்த உலகிலேயே  ரொம்ப பிடிவாதக்காரன்  சளைக்காதவன் '  புரிந்துகொள் ' என்றான் காளிதாசன்.

குடத்து நீரில் எடுத்து கொஞ்சம் அவன் மேல் தெளித்து சிரித்தாள் அந்த பெண்.  உனக்கு உலகிலேயே பிடிவாதமாக  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து செயல்படுவது ரெண்டு  தான் என்று தெரியாதா ?  ஒன்று நமது நகங்கள், மற்றது தலை முடி.   வெட்ட வெட்ட  துளிர்த்து வளர்பவை.ஓயாமல் தொடர்ந்து இப்படி செய்பவை. நீ  அவ்வளவு பிடிவாதக்காரன் என்று என்னை நம்ப சொல்கிறாயா?''  என்றாள்  அவள்.

கோபம் வந்துவிட்டது காளிதாசனுக்கு.   உரக்க  அவளிடம் சொன்னான்  ''சரி சரி  நீ என்னை உலகிலேயே சிறந்த  ஒரு முட்டாள் என்று எடுத்துக்கொள்'' என்றான். அதற்கும் அவள் தயாராக  பதில் வைத்திருந்தாள் .

''அப்பனே  உலகில் ரெண்டு முட்டாள்கள் தான் சிறந்தவர்கள். ஒன்று ஞானமில்லாமல், திறமையில்லாமல் ஆளும் ஒரு அரசன்.  இன்னொருவன்  அவனது அடிவருடி மந்திரி. அரசன் எது சொன்னாலும் செய்தாலும் ஆமாம் சாமி  போட்டுக்கொண்டு  அவனையே புகழ்ந்து கொண்டு  அவன் பின் செல்பவன்.  உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லையே''  என்றாள் .

''அம்மா  என்னை மன்னித்துவிடு. நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன். நீ யார் என்று  என்னை கேட்டாய்  எனக்கு பதில் தெரியவில்லை,  இப்போது நான் கேட்கிறேன் உன்னை . இவ்வளவு சாதுர்யமாக எனக்கு பதில் சொன்ன நீ யாரம்மா? '' அவள் காலில் விழுந்தான் காளிதாசன்.  எழுந்திரப்பா என்று அவனை தொட்டெழுப்பியவள் முகத்தை பார்த்த  காளிதாசன் அங்கே அந்த பெண்ணை காணவில்லை, சாக்ஷாத் சரஸ்வதி தேவியே புன்னகைத்து நின்றாள்.   இரு  கை கோர்த்து கும்பிட அவனை பார்த்து 
''காளிதாஸா நீ அறிஞன், நீ யார் என்று உன்னை உணர்ந்தால் நீ ஒரு  சாதாரண மனுஷ்யஜீவன்   என்று புரிந்து கொள்வாய்.'' என்ற வாக்தேவி மறைந்தாள்.    அப்போது உருவானதே   காளிதாசனின் சியாமளா தண்டகம். 

நாம்  சாதாரண ஜீவன்கள்  ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு  அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும். சதா இந்த சிந்தனை இருந்தால் அதுவே  பகவான் மேல் பக்தியை வளர்க்கும். அறிவை வளர்க்கும்.


Wednesday, January 22, 2020

எமனின் சாமர்த்தியம்

ஒருவருக்கு தேதி குறித்து விட்டால்? அந்த தேதியில் அவர் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்வார்கள்!

அப்படி ஒரு சிற்பிக்கு எமன் தேதி குறித்து விட்டார்! அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரிந்து விட்டது!

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை!

எமன் ஒருமுறைதான் பாசக்கயிறை வீசுவார்! அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்!

அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிற்பி ஒரு யுக்தி செய்தார்!

தன் திறமையை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார்! 

எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்து விட்டு அதன் நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக் கொண்டு விட்டார்!

எமன் வந்தார், பார்த்தார்! சற்றே திகைத்துப் போனார்!

மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு மட்டும்தான் சிலைகள் என்பதை யூகித்துவிட்டார்!

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு நேர்த்தி!

தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே?

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது!
யோசித்தார்; ஒரு யோசனை வந்தது!

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், "அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது! என்னாலேயே எது சிலை எது மனிதன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே?" இப்படி சொல்லி விட்டு மூன்று சிலைகளையும் எமன் உன்னிப்பாக கவனித்தார்!

அவர் எதிர்பார்த்தது நடந்தது!

நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது!

தற்பெருமைதான், வேறென்ன? சடாரென வீசினார் கயிற்றை!

கெடுத்தது எது?

நான் என்ற தேகாபிமானத்தில் வீழ்ந்து விடுவதுதான் கொடுமை!

ஈகோ, எதிர்பார்ப்புகள், புகழுக்கு மனம் இலயித்துப் போவது தான் மனித மனதின் பலவீனம்!

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...