Showing posts with label நீதிக்கதை. Show all posts
Showing posts with label நீதிக்கதை. Show all posts

Friday, November 1, 2019

முன்று வகை மனிதர்கள்

கிருபானந்த வாரியார் கூறியது

1. கஜ கர்ணம்🐘

2. அஜ கர்ணம்🐏

3. கோ கர்ணம்🐂

1. கஜகர்ணம் :

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !!

அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...

அவர்களை கஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்..

2. அஜகர்ணம் :

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும் !!!

அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...

அவர்களை அஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

3.கோகர்ணம்

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !!!

அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள்...

இவர்களை கோகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

Tuesday, October 29, 2019

ஞானியாக மாறிய அலெக்ஸாண்டர்

சிந்துநதி கரை வரை  வரை வந்துவிட்டு போரஸுடன் சண்டையிட்டு வெல்லமுடியாமல்   சமாதானமும் செய்த காலங்களில் மகா அலெக்சாண்டருக்கு இந்திய மதமான இந்துமதத்திலும் அதன் சாராம்ச தத்துவங்களிலும் பெரும் ஈடுபாடு உண்டாயிற்று,

அந்த காலத்து ரிஷி தண்டமில்ஸ் என்பவரை தன்னை காண அழைக்கின்றான். அவர் அன்று பெயர் பெற்ற ஞானியும் முனிவருமாயிருந்தார்.

(தண்ட முனி அல்லது தண்டம் வைத்திருக்கும் முனி என்பதே தண்டமில்ஸ் என கிரேக்கர்களால் அழைக்கபட்டது என்பார்கள்)

ஒரு நதிகரை மணலில் படுத்திருந்த தண்டமில்ஸிடம் அலெக்ஸாண்டரின் அடிபொடிகள் வந்து செய்தியினை சொல்கின்றன, மகா மன்னன் அழைத்தும் அசால்ட்டாக மறுக்கின்றார் ஞானி

"அவன் உலக அரசனாக இருக்கட்டும், அவன் கங்கையினை தாண்டி உலக முடிவுவரை வெல்லட்டும் , எனக்கென்ன வந்தது?

எனக்கு அவன் யார்?

அவன் ஒருநாள் சாகத்தான் போகின்றான், அவன் அரசு ஒழியத்தான் போகின்றது, பேராசையில் நாடு நாடாக அலையும் அவன் தன்னை உணராதவரை நிம்மதி அடையமாட்டான், சூரியனின் பாதை எல்லாம் அவன் வென்றாலும் அவனுக்கு நிறைவு வராது,  அவனை நான் சந்திக்கவரமாட்டேன் என சொல்" என திருப்பிசொன்னார்

வீரர்கள் சீறினர், சிரத்தை கொய்வோம் என்றனர் "சாவே மனிதனுக்கான விடுதலை, முடிந்தால் கொன்றுவிடு, நானோ நீயோ உன் அலெக்ஸாண்டரோ காலம் காலமாக இருக்க போகின்றோமா?"

செய்தி அலெக்ஸாண்டருக்கு செல்கின்றது, அவன் ஓடிவந்து பார்க்கின்றான், வந்தவன் தன் சந்தேகங்களை எல்லாம் கேட்கின்றான்.

புளூடார்ச் எனும் மேற்கத்திய வரலாற்று எழுத்தாளன் அந்த சந்திப்பை இப்படி சொல்கின்றான்

ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்

" உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்

  நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை
 
  பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?

   நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே

பகலா இரவா எது முதலானது?

பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது

   மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்

  இதுவரை காணாத மிருகத்தை
   
ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?

  மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது

  ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

  ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்

வாழ்வா சாவா எது கொடுமையானது?

வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?"

இந்த வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது

இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்

மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்

கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்

மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது நான்காம் வாதம்

மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்

நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்

வாழ்வு போராட்டம் மிக்கது கடினமானது அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே என்கின்றது 7ம் வாதம்

கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அசந்துவிடுகின்றான் அலெக்ஸாண்டர்

அவன் அசோகரை போல் மனம் மாறினான், போரை வெறுத்தான், அதன் பின் எந்த போரிலும் அவன் ஈடுபடவில்லை,

தன் ராஜ்யத்தை தன் வம்சத்துக்கு அல்லாமல் தளபதிக்கு பிரித்து கொடுக்கும் எண்ணம் அன்றே அவனுக்கு உதயமாயிற்று

பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில்  ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான், இந்த மாபெரும் ஞானம் கிரேக்கத்துக்கும் வேண்டுமென்றான், அந்த ரிஷியும் உடன் வந்தார்

அவரை அதன் பின்  சுவாமி ஸ்பைன்ஸ், சுவாமி காலன்ஸ் என்றும் பல பெயர்களில்    கிரேக்கத்தில் அழைத்தார்கள்

அந்த ஸ்பைன்ஸ் ஸ்வாமி பாபிலோனில் அலெக்ஸாண்டருக்கு முன்பே பாரசீகத்தில் இறந்தார், அதுவும் தன் சாவு வருவதை உணர்ந்தார்,

அக்கால ரிஷிகள் ஜலசமாதி, மண் சமாதி போல அக்னி சமாதியும் செய்வார்கள், எரியும் தீயில் இறங்கி வாழ்வை முடிப்பார்கள்

அப்படி அந்த ஸ்பைன்ஸ் முனிவரும் அலெக்ஸாண்டரின் படை வீரர்களிடம் விடைபெற்றார், அலெக்ஸாண்டரை பார்த்து சிரித்தார் அவனோ கலங்கி நின்றான்

அவரோ புன்னகைத்தபடி உன்னை விரைவில் பாபிலோனில் சந்திப்பேன் என சொல்லி தீயில் இறங்கினார்

அடுத்தவருடம் பாபிலோனில் இறந்தான் அலெக்ஸாண்டர்,

முனிவர் சொன்ன வார்த்தையின் பொருள் அதன் பின்பே கிரேக்கருக்கு புரிந்தது

இச்சம்பவம் கிரேக்க கதைகளிலும் புளூடார்ச் போன்ற பெரும் வரலாற்று எழுத்தாளர்கள் எழுத்திலும் உண்டு

அதை திட்டமிட்டு இங்கு மறைத்தார்கள் என்பதுதான் நிஜம்.

பெரும் சாம்ராஜ்யங்களை வென்று பெரும் பெரும் செல்வத்தை குவித்து மாபெரும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் கோட்டைகளையும் சேனையினையும் குவித்த அலெக்ஸாண்டரை தோற்கடித்து ஞானியாய் திரும்ப செய்தது இந்து தர்மம்

உலகில் எத்தனையோ மதங்களும் கலாச்சாரமும் தத்துவமும் சுவடே இல்லாமல் அழிந்தபின்பும் பன்னெடுங்காலமாக நிலைபெற்றிருகின்றது இந்துமதம்

எப்படி?

"நீதிமான் என ஒருவனை கண்டேனாகிலும் அந்த ஊரை அழிக்கமாட்டேன்" என பைபிளில் சொல்கின்றார் கடவுள்

Sunday, June 2, 2019

சலத்தால் பொருள்செய்து

பச்சை மண்ணால் செய்த பானையில் நீரை ஊற்றிவைத்து தாராளமாக அதைப் பாதுகாக்கலாம், சட்டரீதியாக ஒரு பிரசினையும் இல்லை - உச்சநீதிமன்றம்.

வஞ்சனையால் பொருள்சேர்க்கும் அரசின் பாதுகாப்பு, பச்சை மண்ணால் செய்த பானையில் நீரை ஊற்றிவைத்துப் பாதுகாப்பது போல - திருக்குறள்

'பானையும் நீரும் சேர்ந்து அழிதல் போல, அரசனும் அவன் ஈட்டிய பொருளும் சேரக்கெடும்' என்பதே எல்லா உரையாசிரியர்களும் இக்குறளுக்குக் கூறும் பொருள். இன்றைய காலகட்ட அரசியல் சூழலில் நடப்பது இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றே நாம் பொதுவாக எண்ணுவோம். ஆனால், குறளாசிரியர் இந்த உவமையில் இன்னும் ஆழ்ந்த ஒரு பொருளையும் வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதாவது, எந்த சுயகட்டுப்பாடும் இன்றி ஊழல் செய்து பொருள் சேர்க்கும் ஆட்சியாளர்கள் தன்னிச்சைப்படி சிதறும் நீர் போல. அவர்களைக் கட்டுப்படுத்தும் நீதிநெறிகளும், சட்டங்களும் கூட அதே போல பச்சைமண் பானையாக இருந்தால், ஒட்டுமொத்த சமூகமும் சீரழியும். மாறாக, அந்தச் சட்டங்களும் நெறிகளும் தர்மம், நியாயம் என்னும் நெருப்பில் சுட்டுக் கெட்டிப் படுத்தப் பட்ட பானையாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான பாதுகாப்பு.

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று.

[சலம் - வஞ்சனை [छल:] ; ஏமார்த்தல் - பாதுகாத்தல்]

Monday, March 25, 2019

கர்ணனும் கிருஷ்ணரும்

"என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

Sunday, March 24, 2019

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!!

விஞ்ஞானி ஒருவர்,
தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.
‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்’- என்றார் விஞ்ஞானி.

‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.

‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டோமே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது,

ஆம்நண்பர்களே,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால், பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

Friday, March 8, 2019

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .

" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது  சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

இதிலிருந்து என்ன புரிகிறது. ​யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்

Wednesday, July 4, 2018

பட்டினத்தாரின் ஊசி..

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர்
பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார்,அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக
முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக
தற்பெருமை பேசுகிறீர்களே….

ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.
          
வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்...

Tuesday, July 3, 2018

திறமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.

அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

நம்மை சுற்றி பல குரங்குகளும் சிங்கங்களும்  இருக்கலாம்,
அவற்றை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...