Friday, January 8, 2016

திருமுடியையே விளக்குத் திரியாக்கியவர்!



  வடவெள்ளாற்றின் தென்கரையில், இருக்குவேளூர் எனும் தலத்தில் மக்களின் பேரன்பைப் பெற்று வாழ்ந்து வந்தார் கணம்புல்ல நாயனார். இவர்,  சிவனருட் செல்வர். சிவபக்தியால், ஈசன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்கு நெய்விளக்கேற்றுவதற்கான பணிகளை செவ்வனே செய்து வந்தார்.  

கோயில்கோயிலாகச் சென்று, விளக்கேற்றுவதையே வாழ்க்கையாகக் கொண்டவர், கொஞ்சம் கொஞ்சமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் விளக்கேற்றும் திருப்பணியை விடவில்லை இவர்! நிலங்களையும் வீடுகளையும் மாடுகளையும் விற்று காசாக்கி, அதை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று, விளக்கேற்றி தொழுதார்.

தில்லை எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். நடராஜர் பெருமானின் அழகில் சொக்கிப் போய் அங்கேயே, அந்த ஊரிலேயே தங்கினார். அருகில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று நெய்விளக்கேற்றி மகிழ்ந்தார். கையில் இருந்து காசு கரைந்தது.

  பிறகு, வனத்துக்குச் சென்று, கணம்புல் எனும் ஒருவகை புல்லை அறுத்து, அதை அப்படியே திரியாக்கி விற்கும் வேலையில் இறங்கினார். ஒருகட்டத்தில் அவை விற்கவே இல்லை. அந்தத் திரிகளைக் கொண்டு, விளக்கேற்றினார். ஆனால் எரிய வைத்த சில விநாடியிலேயே திரி அணைந்தது. இதைக் கண்டு நொந்து அழுதவர், அந்த முடிவுக்கு வந்தார். நிற்காமல் எரியவேண்டும் என்பதற்காக விளக்கில் தன் திருமுடியை, தலையை வைத்தார்.  அவரின் தலையில் மெள்ள மெள்ள தீப்பற்றத் துவங்கியது.

  விளையாட்டு போதும் என முடிவுக்கு வந்த சிவபெருமான், திருப்புலீச்சரம் எனும் தலத்தில் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். ஆட்கொண்டார்.
  கணம்புல்ல நாயனார் என்று உலகளவும் சிவபக்தர்களால், போற்றப்படுகிறார்!

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...