Friday, January 8, 2016

சிவவிளையாட்டில்... ‘பொன்மீன்!’



   சோழ தேசத்தில், காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் மிக முக்கிய நகரங்கள்! கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற கிராமம் இருந்தது. அங்கே, மீன் வியாபாரம் செய்தும் சங்கு, பவழம் முதலான பொருட்களை விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர் பலரும்! இப்படி ஆழ்கடல் வரை சென்று மீன்பிடித்தொழிலை செய்து வந்தவர்களில், அதிபத்தரும் ஒருவர்! வலையில் விழும் முதல் மீன்... சிவனாருக்கு என்று வாழ்ந்து வந்தார் அதிபத்தர்.

அதாவது, கடலில் இருந்து மீன் பிடித்து, கடலிலேயே விட்டுவிடுவார்! இவரின் பக்தியைக் கண்ட சிவனார், அதிபத்தரின் புகழை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார்.

  அடுத்தடுத்து வந்தது அதிபத்தருக்கு சோதனை. தினமும் ஆயிரக்கணக்கான மீன்கள் பிடித்தவரின் வலையில், மீன்களே  சிக்கவில்லை. ஒரெயொரு மீன் கிடைக்கும். அதையும் சிவநாமத்தைச் சொல்லி, கடலிலேயே விட்டுவிட்டு, வெறுங்கையுடன் கரை திரும்பினார். இதனால் வியாபாரமில்லை. பெருத்த நஷ்டம். சேர்த்து வைத்த செல்வமெல்லாம் கரைந்தன.

   ஒருநாள்... அதிபத்த நாயனாரின் வலையில், விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அந்தப் பொன் மீன் நவமணிகளால் இழைக்கப்பட்ட  செதில்களைப் பெற்றிருந்தது.  இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள்.

  ஆனால் அதிபத்தர் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘என் சிவபெருமானுக்கு இன்றைக்கு பொன் மீன் கிடைத்திருக்கிறது’ என்று ஆவல் கொண்டார். பொன் மீனை கடலிலேயே வீசினார். அதிபத்தரின் பக்தி கண்டு அனைவரும் சிலிர்த்தார்கள். அப்போது, வானில் பேரொளி தோன்றியது. சிவபெருமான் பார்வதிதேவியுடன் ரிஷபத்துடன் காட்சி தந்தருளினார்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...