சிவன் கோயில்களில், சோமாஸ்கந்தரைத் தரிசித்திருப்பீர்கள்.
புலித்தோலும் பட்டாடையும் அணிந்தபடி, அமர்ந்த திருக்கோலத்தில், இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டபடி காட்சி தருவார் சிவபெருமான். பின் வலது கரத்தில் மழு, பின் இடது கரத்தில் மானும், முன் வலக்கரம் அபயமுத்திரையுடனும் முன் இடக்கரம் வரத முத்திரை தாங்கியும் இருக்கும்! ஜடா மகுடம் தாங்கி, சர்ப்பத்தையும் கங்கணங்களையும் காதில் குண்டலங்களையும் அணிந்திருப்பார்!
சிவனாரின் இடது பக்கம் உமையவள். இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடித்தபடி உட்கார்ந்திருப்பார். வலது கரத்தில் தாமரை வீற்றிருக்கும். இடது கரம் சிம்மஹரண முத்திரை அல்லது ஆசனத்தில் ஊன்றியபடி இருக்கும்! இவர்களுக்கு நடுவே குழந்தையாக குமரன். அல்லது அன்னையின் மடியில் அமர்ந்திருப்பார். இதை சோமாஸ் கந்த வடிவம் என்பர்.
இதேபோல் இன்னும் பல வடிவங்களைத் தெரிவிக்கின்றன ஆகம நூல்கள்! சிவன், அவர் மனைவி உமையவள், மைந்தன் முருகக் கடவுள் ஆகியோரை ஒன்று சேர வழிபடுவதற்காக, அமைந்த வடிவம் இது!
அம்மை, அப்பன், அப்பனுக்கே பாடம் சொன்ன ஞானகுரு சுப்பையன் ஆகிய மூவரையும் வணங்கச் சொல்லியும் வணங்கினால் வளம் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றன ஞானநூல்கள்!
No comments:
Post a Comment