வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் 1946 ஆகஸ்ட் 16 சாதரணமாகத்தான்
விடிந்தது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தெருக்களில் திரண்டு,
ஹிந்துக்களும் சீக்கியர்களும் திறந்து வைத்திருந்த கடைகளை மூடுமாறு
வற்புறுத்தத் தொடங்கினார்கள். பாகிஸ்தான் கோரிக்கையை நாங்கள்
ஆதரிக்கவில்லை. அதனால் நாங்கள் கடையை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று
ஹிந்து, சீக்கிய வியாபாரிகள் வாதித்தனர். உடனே கடைகளை நோக்கிக் கல் வீச்சு
தொடங்கியது. வெகு விரைவில் அது ஹிந்துக்களையும் சீக்கியர்களையும்
திட்டமிட்டுத் தாக்கும் கலவரமாக உருவெடுத்தது. எப்படியும் நேரடி நடவடிக்கை
தினம் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் தாக்குவதில் முடியும் என
எதிர்பார்த்த வங்காளிகளும் சீக்கியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால்
பதில் தாக்குதல் நடத்தி நிலைமையைச் சமாளித்தார்கள். ஆனால் அரசே முகமதியர்
பக்கம் இருந்ததாலும் பாதுகாப்பு கிட்டாததாலும் ஹிந்துக்களும்
சீக்கியர்களும் அதிக அளவில் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அடைய
நேரிட்டது.
ஒரே நாள் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நேரடி
நடவடிக்கை ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவிப்பதற்கு வசதியாக
நாலைந்து நாட்கள் நீடித்தது. ஆக்ரோஷமிக்க வங்காளிகளும் சீக்கியர்களும்
சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் திட்டமிட்டு வந்திரு ந்த
உள்ளூர் வெளியூர் கும்பல்களின் கைதான் மேலோங்கியிருந்தது. எனினும் வைசிராய்
வேவலுக்குக் கலவரம் குறித்து அறிக்கை அனுப்பிய சுரவர்த்தி அரசு, முகமதியர்
தரப்பில்தான் அதிகச் சேதம் எனத் தெரிவித்தது! வங்காளத்தின் ஆங்கிலேய
கவர்னர் இரு தரப்பினரிடையிலான மோதலில் வெள்ளையருக்குப் பாதிப்பு
வந்துவிடலாகாது என்பதற்காக ராணுவத்தின் பாதுகாப்பு வெள்ளையருக்குக்
கிடைக்கச் செய்வதிலேயே கவனமாக இருந்தார். சுரவர்த்தி அறிக்கையின் நம்பகத்
தன்மை குறித்து அவர் கவலைப்படவில்லை. வைசிராய் வேவல், சுரவர்த்தியின்
அறிக்கையை அப்படியே நகல் செய்து பிரிட்டிஷ் அரசின் இந்தியா மந்திரிக்கு
அனுப்பிவைத்தார்!
கல்கத்தாவில் கலவரம் அடங்கத் தொடங்கியதும்,
வங்காளத்தின் பிற பகுதிகளுக்கு அது பரவத் தொடங்கியது. முக்கியமாக முகமதியர்
அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் அது வேகம் எடுத்தது.
கிழக்கு
வங்காளத்தின் நவகாளி மாவட்டத்திற்கு இவ்வாறாகத்தான் கலவரம் போய்ச்
சேர்ந்தது. முஸ்லிம் லீக் அறிவித்த ஒரே நாள் நேரடி நடவடிக்கை தினம் ஆகஸ்ட்
16. ஆனால் நவகாளியில் அதைச் சாக்கிட்டு அக்டோபர் மாதம் ஹிந்துக்கள் மீதான
தாக்குதல் தொடங்கியது.
அன்றைய நவகாளி மாவட்டத்தில் எழுபது சதம்
முகமதியர், முப்பது சதமே ஹிந்துக்கள். கிறிஸ்தவர்கள் அன்று அங்கு
இல்லையென்றே சொல்லிவிடலாம். அது ஒரு வெறும் விவசாய பூமி. மாட்டு வண்டி
போக்குவரத்துகூடச் சொற்பம். படகுப் பயணம் அதிகம். எண்பது சத நிலம் ஹிந்து
நிலச் சுவான்தார்கள் வசம் இருந்தது. ஆனால் முப்பது சத ஹிந்துக்களும்
அவற்றுக்குச் சொந்தம் என்று எண்ணிவிடக் கூடாது. நிலப் பிரபுக்களின்
எண்ணிக்கை குறைவுதான். மக்களில் பெரும்பாலானவர்கள் குத்தகைதாரரும் விவசாயக்
கூலிகளும்தாம். உப தொழில்கள் செய்வோர் இரு சமயத்தவரிலும் இருந்தனர்.
பொதுவாக மாவட்டத்தில் முகமதியர் பெரும்பான்மையினராக இருப்பினும் பல
கிராமங்களில் ஹிந்துக்கள் கூடுதலாகவும் சில இடங்களில் சரிசமமாகவும்
இருந்தனர். ஹிந்து விவசாயக் கூலித் தொழிலாளரில் தலித்துகளே கூடுதல்.
அக்டோபர் மாத மையத்தில் நவகாளி மாவட்ட முகமதியர் ஹிந்துக்கள் மீதான தமது
தாக்குதலைத் தொடங்கினார்கள். மாவட்டத்தில் ஹிந்துக்களை இன அழிப்புச்
செய்துவிடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
வங்கப் பெரும் பஞ்சம்
என்று பெயர் பெற்ற, 1943 ல் நிகழ்ந்த கொடிய பஞ்சத்தின்போது நவகாளி நிலச்
சுவான்தார்கள் ஹிந்து, முகமதியர் என வேறுபாடு பாராமல் ஏழை விவசாயத்
தொழிலாளர் அனைவரிடமுமே நிர்த்தாட்சண்யமாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால்
முகமதிய விவசாயத் தொழிலாளர்கள் சமயத்தின் அடிப்படையில் நிலச் சுவான்தார்கள்
மீது தாக்குதலைத் தொடங்குமாறு தூண்டிவிடப்பட்டனர். அது விரைவில்
ஹிந்துக்கள் அனைவர் மீதுமான தாக்குதலாக விரிவடைந்தது. தலித்துகளின் சேரிகள்
கூடத் தீக்கிரையாக்கப் பட்டன!
வழக்கம் போல ஹிந்துக்களில் ஆண்கள்
கொடூரமாகக் கொல்லப்படுவதும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு இலக்காவதும்
தொடர்ந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவிமார் வலுக்கட்டாயமாக முகமதியராக மத
மாற்றம் செய்யப்பட்டு பலவந்த மணம் செய்விக்கப்பட்டனர்.
நவகாளியில்
ஹிந்துக்கள் மீதான படுகொலைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது காந்திஜி
கல்கத்தாவில்தான் இருந்தார். அங்கு அவர் சமரசப் பணிகளைச் செய்து
கொண்டிருந்த போது நவகாளியில் ஐம்பதாயிரத்திலிரிருந்து எழுபதாயிரம் வரையில்
ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று நவகாளி மாவட்டத்தின் மொத்த மக்கள்
தொகை இருபது முதல் இருபத்தைந்து லட்சம் வரை. அக்டோபர் மாதம் முழுவதும்
முகமதியரின் தாக்குதலுக்குப் பலியான பிறகு வெளி மாவட்ட ஹிந்துக்களின்
துணையோடு நவகாளி மாவட்ட ஹிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கத்
தயாரானபோது, பிரதமர் சுரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் மாதம் 6
ஆம் தேதி நவகாளி வந்து சேர்ந்தார், காந்திஜி. கிராமம் கிராமமாகப் பாத
யாத்திரை சென்று ஹிந்துக்களை சமாதானப் படுத்தலானார்.
முகமதியர்
தாக்கினாலும் ஹிந்துக்கள் திருப்பித் தாக்கலாகாது. அஹிம்சையே ஹிந்துக்களின்
ஆயுதம். முகமதியரால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை ஹிந்து இளைஞர்கள் மணம்
செய்துகொள்ளவேண்டும். வலுக்கட்டாயமாக முகமதியராக மதம் மாற்றப்பட்டவர்கள்
விரும்பினால் திரும்பவும் ஹிந்துக்களாகிவிடலாம். அவர்களை ஹிந்துக்கள்
ஏற்றுக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் காந்திஜி மக்களுக்குச் சொன்ன
அறிவுரைகள். தினமும் மாலையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தி சர்வ சமய
வேதங்களை ஓதச் செய்வார். குறிப்பாகக் குரானிலிருந்து அதிக வரிகள் படிக்கச்
செய்து முகமதியரை அமைதி வழிக்குத் திருப்ப முயற்சி செய்வார்.
பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கும்போது முகமதியர் ஓரமாக நின்று
கேட்டுவிட்டுக் கூட்டம் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஹிந்துக்கள்
மட்டும் கலைந்து செல்லாமல் பழி கிடப்பார்கள். காந்திஜி எழுந்து
செல்லும்போது அவர் பின்னாலேயே பய பக்தியுடன் செல்வார்கள்!
நவகாளியில்
மக்களை அமைதிப்படுத்த வந்த காந்திஜியோடு இருந்த குழுவினருள் திருமணமாகாத
ஒரு முகமதியப் பெண்ணும் இருந்தார். முகமதியர் அதிக எண்ணிக்கையில் இருந்த
நவகாளி கிராமத்திற்கு அவர் சென்று மக்களைச் சந்தித்தபோது ஹிந்துக்கள் தமது
வழிபாட்டுத் தலத்தில் பூஜை செய்து வந்த வாளை முகமதியர் கைப்பற்றிச்
சென்றுவிட்டதாகத் தெரிய வந்தது. உடனே அந்த வாள் எங்கு இருந்தாலும் அதனை
முகமதியர் ஹிந்துக்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த
முகமதியப் பெண் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த வாள் ஹிந்துக்களிடம்
ஒப்படைக்கப்பட வில்லை. முகமதியப் பெண் தமது கோரிக்கையை வலியுறுத்தி
உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.
நவகாளியில் முகமதியரைத் தமது
கோரிக்கையை ஏற்கச் செய்வதற்காக ஒரு முகமதியப் பெண் உண்ணாவிரதம்
தொடங்கினார்! அது இன்றைய காலை உணவுக்குப் பிறகு மாலைவரை மட்டுமே நடக்கும்
அடையாள உண்ணாவிரதம் அல்ல. கோரிக்கை ஏற்கப்படும் வரையிலான தொடர்
உண்ணாவிரதம்.
முகமதியர் மனம் மாறும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய
முகமதியப் பெண்மணியின் பெயர் அம்துஸ் ஸலாம். அம்துஸ் உண்ணாவிரதம்
நீடித்ததேயன்றி ஹிந்துக்களின் பூஜைக்குரிய வாள் வந்து சேர்ந்தபாடாயில்லை.
அம்துஸ் திரும்பத் திரும்பத் தமது கோரிக்கையை வலியுறுத்தினார். அம்துஸ்
உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து காந்திஜி அங்கு வந்துவிட்டார். அதன் பிறகு
முகமதியர் குற்ற உணர்வுடன் ஓர் உண்மையை வெளியிட்டனர்.
வாளைத் திரும்பக்
கொடுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஆத்திரத்தில் ஒரு குளத்தில் அது வீசி
எறியப்பட்டுவிட்டது. அதைக் கண்டெடுப்பது இயலாத காரியம். இதை அறிந்த பின்
அம்துஸ்ஸுக்கு வேறு வழி தெரியவில்லை. பிற சமயத்தவரின் வழிபாட்டு
சுதந்திரத்தில் இனி தலையிடுவதில்லை என வாக்குறுதியளிக்கும் ஒப்புதல் கடிதம்
எழுதி முகமதியர் அனைவரிடமும் அதில் கையொப்பமிடச் செய்து தனது
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார், அம்துஸ் ஸலாம்.
அறிவுத்
தெளிவுடன் துணிவும் மிக்க அந்த முகமதியப் பெண்மணியின் பெயர் நமது
சரித்திரப் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காது. அதனால் அவருக்கு என்ன
நஷ்டம்? இழப்பெல்லாம் நமக்குத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்குத் தலை
வணங்குவோம். காந்திஜி தமது ஹரிஜன் பத்திரிகையில் அம்துஸ் பற்றி
எழுதியிருக்கிறரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் காந்திஜியின் நவகாளி
யாத்திரை பற்றிச் செய்தி சேகரிக்க உலகின் பிரபல பத்திரிகைகளிலிருந்தெல்லாம்
நிருபர்கள் வந்திருந்தனர். அவர்களில் அமெரிக்காவின் ஷிகாகோ டெய்லி
நாளிதழின் தெற்கு ஆசிய நிருபர் பிலிப்ஸ் டால்போட் நவகாளி பற்றிய உண்மைத்
தகவல்கள் பலவற்றையும் தெரிவித்ததோடு இந்தச் செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்.
காந்திஜியின் வருகைக்குப் பிறகு நவகாளியில் கலவரம் ஓயலாயிற்று என்ற
போதிலும் அதற்குள் இன அழிப்பு என்று சொல்லும் அளவுக்கு மாவட்டத்தில்
ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். ஹிந்துக்கள் கூடுதலாக உள்ள
கிராமங்களில் முகமதியரைத் திருப்பித் தாக்குவது தவிர்க்கப் படுவதற்கே
காந்திஜியின் நவகாளி யாத்திரை பெரிதும் பயன்பட்டது. அக்டோபர் மத்தியில்
நவகாளியில் முகமதியர் தொடங்கிய இனக் கலவரத்தை அடக்கக் கல்கத்தாவிலிருந்து
நவம்பர் 6 ஆம் தேதிதான் காந்திஜியால் நவகாளி செல்ல முடிந்திருக்கிறது
என்பதைக் கவனிக்க வேண்டும். கல்கத்தாவில் 1947 தொடக்கத்தில் காந்திஜி
உண்ணாவிரதம் இருந்ததும் தேசப் பிரிவினையைத் தம்மால் தவிர்க்க இயலவில்லை
என்ற வேதனையில் சுய தண்டனையாக மேற்கொண்டதுதான். மேலும் பழி தீர்க்கமாட்டோம்
என ஹிந்துக்களிடம் உத்தரவாதம் பெறுவதற்காகவும் அவர் உண்ணா விரதம்
இருந்தார். பாகிஸ்தான் கோரிக்கையை முகமதியர் கைவிட வேண்டும் என்பதற்காக
அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை. ஏனெனில் உண்ணாவிரதம் என்கிற தமது வலிமை
மிக்க ஆயுதம் முகமதியரிடம் செல்லுபடியாகாது என்பதை அவர் நன்கு
அறிந்திருந்தார். அதேபோலத் தமது அஹிம்சைப் போராட்டம் ஆங்கிலேயரை மட்டுமே
வழிக்குக் கொண்டுவரும் என்பதைத் தாம் அறிந்திருப்பதாக அவரே ஒப்புக்
கொண்டிருக்கிறார். மனிதாபிமானம் சிறிதும் இல்லாத போர்த்துக்கீசியர்,
ஸ்பானியர்கள் போன்ற ஐரோப்பியர் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள் என
அவர் அறிந்திருந்தார்.
-மலர்மன்னன்
No comments:
Post a Comment