நெல்லையில் இருந்து மேலப்பாளையம் வழியே சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ளது பத்தமடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ. தொலைவில் உள்ளது கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலம். இங்கே சிவனாரின் பெயர் ஸ்ரீகனகசபாபதி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீசுந்தராம்பிகை!
ஒருகாலத்தில், கட்டாரிமங்கலம் முதலான இந்தப் பகுதிகளை ஆட்சி செய்தவர் வீரபாண்டியன் எனும் சிற்றரசன். மணற்படைவீட்டை ஆட்சி செய்த முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னனின் உறவினர் இவர். செப்பறையில் உள்ள நடராஜரைப் போல தன்னுடைய ஊரிலும் இருக்கவேண்டும் என விரும்பினான். அதன்படி நமசிவாய ஸ்தபதி என்பவர் தாமிரத்தைக் கொண்டு சிலை செய்யும் பணியில் இறங்கினார்.
கட்டாரிமங்கலத்துக்கு ஒன்று, நெல்லையப்பர் கோயிலுக்கு ஒன்று என செய்யச் சொன்னான். சிலை முழுமை பெற்றதைக் கண்ட வீரபாண்டியன், இப்படியொரு அழகுச் சிலை வேறு எவருக்கும் செய்யக்கூடாது என நினைத்து, சிற்பியின் கைகளை வெட்டினான். இரண்டு சிலைகளில் ஒன்று கட்டாரிமங்கலத்துக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு சிலையை எடுத்துவரும்போது, ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, நீரில் சிக்கிக் கொண்டது. வெள்ளம் வடிந்ததும் அந்த ஊர்மக்களின் கண்களில் பட... தென்கரையில் வைத்து வழிபட்டார்கள்!
அன்றிரவு மன்னனின் கனவில் வந்த இறைவன், கரையில் உள்ள இடத்தில் கோயில் கட்டு என அருளினார். என கரிசூழ்ந்தமங்கலத்தில் கோயில் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.
தென்காளஹஸ்தி எனப் போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம் இது. அம்பாள் சுந்தராம்பிகை, பெயருக்கு ஏற்றார்போல, அழகு ததும்பக் காட்சி தருகிறாள். தோஷங்கள் நீக்கி அருளும் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!
கோயில் நேரம் :
காலை 6 முதல் 9 வரை.
மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை.
- வி.ராம்ஜி
No comments:
Post a Comment