அழிந்து போகும் பொருள் சிறிதளவைப் பெற்றுக் கொண்டு அழியாப் புகழையும், வீடுபேற்றையும் நமக்குக் கொடுப்பதை உணர்த்துகிற வடிவமே பிட்சாடனர் வடிவம்! உலகையே ரட்சிக்கும் ஈசன், பிச்சை எடுப்பவராக ஏன் வருகிறார்?
தாருகாவனத்தில் முனிவர்கள் குடும்பத்தோடு கடும் தவம் புரிந்தனர். இறைவனை அடைய உண்மையான வழி எது என அவர்கள் அறியவில்லை. அதை உணர்த்த பிட்சாடனராக வடிவெடுத்தார் ஈசன். அவரின் அழகில் மனதைப் பறிகொடுத்த முனி பத்தினிகள், தம்மை மறந்து ஆடைகள் நெகிழ, அவர் பின்னே சென்றனர். முனிவர்களிடையே மோகினி வடிவில் திருமால் தோன்றினார். மோகினியின் அழகில் மயங்கி, முனிவர்கள் தவச் சாலைகளை விட்டு, அவள் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிட்சாடனர் பின் செல்வதையும், தாங்கள் மோகினி பின் செல்வதையும் ஒரு கட்டத்தில் உணர்ந்தனர். ஆவேசத்துடன் ஆபிசார வேள்வி நடத்தினார்கள். யாகத்தில் இருந்து சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் என வெளிப்பட, அவற்றை பிட்சாடனர் மீது ஏவினார்கள். விலங்கின் தோல்கள் ஆடைகளாகவும் பாம்பு அணிகலனாகவும் முயலகன் தன் திருவடிக்குக் கீழேயும் கொண்டு, கர்வம் சத்ரு என்பதை உணர்த்தினார் ஈசன்!
இடது காலை ஊன்றி, வலது காலை வளைத்து நடந்து வருகிறார் பிட்சாடனர். நான்கு கரங்கள். முன் வலக்கரத்தில் உள்ள அருகம்புல்லால் மானை ஈர்த்தும் பின் இடக்கரங்கள் ஒன்றில் உடுக்கை ஏந்தியும், மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும், முன் இடக்கரத்தில் கபாலம் ஏந்தியும் காட்சி தருகிறார்.
ஆடையாக பாம்பையே அரையில் அணிந்துள்ளார். நெற்றிப் பட்டமும், முக்கண்ணும் கொண்டு திகழ்கிறார். அவர் தலை ஜடாமண்டலத்துடனும் வலக் காலில் வீரக்கழலும் உள்ளன. பாதுகைகளாக விளங்கும் வேதங்கள். பிச்சைப் பாத்திரமான கபாலம் ஏந்திய கை, தொப்பூழ் (உந்தி) வரை நீண்டிருக்கும். இது கட்க முத்திரையில் உள்ளது. உடுக்கை கொண்ட வலக் கை, காது வரை நீண்டு ஓங்கி விளங்கும்.
உடுக்கை ஒலி- உலக உற்பத்தி. திரிசூலம்- அழித்தல். மானுக்குப் புல் அளித்தல்- அருள் புரிதல். குண்டோதரனை அடக்கி ஆளுதல்- மறைத்தல் தொழில். கபாலம் ஏந்தி நிற்பது- காத்தல் தொழில். அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனையாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் இருப்பதாகத் தெரிவிக்கின்றன சிவபுராண நூல்கள்!
- வி.ராம்ஜி
No comments:
Post a Comment