Saturday, January 23, 2016

கோதை பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை, ஸ்ரீவடபத்ர சாயி என்பார்கள். மிக பிரமாண்டமான, தொன்மையான, புராணப் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும் ஒன்று! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம். 108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று! எல்லாவற்றுக்கும் மேலாக, கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள், ஸ்ரீவில்லிபுத்தூரை!

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார்

ஒருநாள்... இறைவனுக்கு சார்த்தவேண்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், “கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு” என்றார்.
 
ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதைஆண்டாள், இறைவனையே நினைத்து ஏங்கினாள்.  இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். அதையடுத்து, பூப்பல்லக்கில் ஸ்ரீரங்கம் சென்று இறைவனோடு ஐக்கியமானாள். 

ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் பிரார்த்திக்க, இறைவனும் அதை ஏற்று இங்கே எழுந்தருளினார். வைணவர்களின் முக்கிய தலமாக இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது.
 
மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக , சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்புருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் ஆகீயோரின் உருவங்கள் இருக்கின்றன.
 
விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபட திறந்து வைக்கப்படுகின்றன.
 
திருப்பதியில் புரட்டாசி 3&வது சனிக்கிழமை பிரம்மோற் ஸவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது.
 
மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவிக்கிறார். 

விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்!
 
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்துபோனாராம். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று துவங்கி “திருப்பல்லாண்டு” பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், “நீரே பக்தியில் பெரியவர்” என வாழ்த்தினார்.
 
அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர்,  பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...