நவரத்தின மணிகள் மண்ணில் ஒளி வீசுகின்றன. நீரானது, அலை மோதுகின்றன. தனது ஜுவாலை நாக்கை நீட்டி ஆடுகிறது நெருப்பு. காற்று, தென்றலாகவோ புயலாகவோ வீசுகிறது. வானில், மின்னல் தன் ஒளியைக் காட்டுகிறது. இப்படி பஞ்ச பூதங்களிலும், ஒரு வகை நடனம் நிகழ்வதைக் காணலாம்!
உயிர்களின் ஒவ்வொரு அசைவும் ஆடல்வல்லானின் அசைவால் நிகழ்கின்றன. அணுகூட அசைவற்று இருப்பதில்லை. இயக்கம் என்பதே இந்த உலகின் மாபெரும் அறிவியல் தத்துவம். இதை வெளிப்படுத்தும் இணையற்ற இறை வடிவம்... ஸ்ரீநடராஜர்!
இறைவன் தன் அடியார்களைப் பாதுகாத்து, அரக்கர் முதலிய எதிர்ப்பு ஆற்றல்களை வென்று, வெற்றிக் களிப்பால் ஆடிய நடனங்கள், தாண்டவங்கள் எனப் போற்றப்படுகின்றன.
சிவனார், ஆனந்த தாண்டவம் (தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் தாண்டவம்), சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம் (சண்ட தாண்டவம்), திரிபுர தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என ஏழு வகை தாண்டவம் நிகழ்த்தியுள்ளார் என்கின்றன சைவ நூல்கள்! இவை அனைத்துக்கும் முதன்மையும் முழுமையுமாகத் திகழ்வது ஸ்ரீநடராஜர் தோற்றம்!
உடுக்கை ஏந்திய திருக்கரம், ஆன்மாக்களின் வினைகளுக்கு ஏற்ப உலகை சிருஷ்டிக்கிறது. அபயத் திருக்கரம், எல்லா உயிர்களையும் காத்தருள்கிறது. நெருப்பு ஏந்திய திருக்கரம் மலத்தை சம்ஹாரம் செய்கிறது. ஊன்றிய திருப்பாதம் மறைப்பு (திரோபாவம்), தூக்கிய திருவடி அருளல் (அனுக்ரஹம்) என ஐந்தொழில்களை விளக்குகின்றன!
- வி.ராம்ஜி
No comments:
Post a Comment