Saturday, August 4, 2018

நஞ்சு பொய்கை!

ஆறாத புண்ணை ஆற்றும் பாண்டவர்கள் தண்ணீர் குடித்த நஞ்சு பொய்கை!

குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை. இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும் அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறது. காலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள். சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது. பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. மருண்டுபோன மான் திக்குத்தெரியாமல் ஓட்டம்பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார். பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர். வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர்.

அனைவருக்கும் தாகம் ஏற்பட்டதால் எங்கிருந்தாவது தண்ணீர் எடுத்துவரும்படி நகுலனிடம் தருமர் கூறினார். தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது  அசரீர் ஒலித்தது. "இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீர் பருகலாம்" என்றது அசரீரி. சுற்றும்முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான். ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது "உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்" என்றது.

''முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான். மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். "தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று பீமனிடம் தருமன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. 'எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்?' என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன். தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. "என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்" என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் "இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார்.

எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன். இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன். தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில் "மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்" எனக் கேட்டது.
''நகுலனை எனக்குத்  திருப்பிக்கொடுங்கள்'' என தருமர் வேண்டினார். "யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்" என அசரீரி கேட்டது.

அதற்கு தருமன், "என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள். நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல" என்றான்.

தருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார். "தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்" என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார் தர்மதேவன்.

தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது.  சர்வேஸ்வரன்அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.

மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

சொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது, "சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள். ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது. மகாகவிஷ்ணு, லட்சுமி தேவியும் நின்றகோலத்தில் காட்சியளிக்கின்றனர். வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள். இக்கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது. நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள். எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எநக்ச் சேதாரமும் ஏற்படவில்லை. நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது" என்றார்.

பொய்கையைப் பார்த்தவண்ணம் வினைதீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. பொய்கைக் கரையில் யமதர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. நவகிரக சந்நிதி, மகாவிஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மகாவிஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.

"விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது. பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்" என்கிறார் கோயில் பூசாரி ராமன்.

எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?

நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம். சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும் தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம். அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது. சொத்தவிளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...