பக்தர் ஒருவருக்குச் சில சந்தேகங்கள். பகவானிடம் தெளிவு பெறுவதற்காக வினா எழுப்பினார்.
பக்தர் : நான் முன் ஜென்மத்தில் எப்படி இருந்தேன், என்னவாக இருந்தேன் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?
பகவான் : முன் ஜென்மங்களைப் பற்றி விசாரிக்கும் முன் இப்போது உமக்கு இருக்கும் ஜென்மம் உண்மையா? இப்போது உமக்கு ஜென்மம் எது என்று பார்க்கலாமே! நம் எல்லாரிடமும் உள்ள குறை என்னவென்றால், கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம், எதிர் காலத்தில் எப்படி இருப்போம் என்று தெரிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால் கடந்த காலத்தைப் பற்றியோ, வரப்போவதைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. நிகழ்வது தெரியும். நேற்றும், நாளையும் இன்றைய தினத்தைப் பொறுத்தே உள்ளன. நேற்றை, அப்போது இன்று என்றே அழைத்தோம். நாளையும் இன்று என்றே நாளைக்குச் சொல்வோம். ஆக, அதற்கு இறந்த காலமும், எதிர்காலமும் இல்லை. நிகழ்காலத்தின் உண்மை இயற்கையை, நிரந்தர, சாஸ்வதமான இருப்பைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நிகழ்காலத்தைப் பொறுத்தே, சென்றகாலம், வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் நிகழ்கின்றபோது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும், நிகழ்காலம் என்ற ஒன்றே இம்மூன்றுமாம். ஆகையால் இப்போதே தன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் சென்ற கால, வருங்கால ஆராய்ச்சிகள் செய்வது, ஒன்று என்னும் முதல் எண்ணை விட்டுவிட்டு எண்ண முயல்வது போல்தான் ஆகும்.
பக்தர் : எப்போதும் மௌனமாக இருப்பது நல்லதா?
பகவான் : மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை. பக்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.
No comments:
Post a Comment