Wednesday, July 11, 2012

சாதுக்களோடு பழகினால்…



         நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், “மகான்களை அண்டி இரு…’ என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும்.
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… “இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே… அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்…’ என்று எண்ணி, மேடை மீதிருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி இருப்பதை கண்டான்…
       “ஓஹோ… இந்த சாதுவின் சமாதிக்கு அருகில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத்துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது…’ என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருந்தான்.
            புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட்கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
       “ஆஹா… இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக்களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது…’ என்று நினைத்தான். அன்று முதல் சாதுக்களை தேடிப் போய், அவர்களது பக்கத்தி லேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
          அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர்களுடனே பழக வேண்டும். கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...