கண்ணபிரானை நேரில் தரிசித்து கவிபாடிய அருளாளர்களில் வடநாட்டு ஜெயதேவருக்கு இணையானவர் ஊத்துக்காடு வேங்கடகவி. இவருடைய பிறப்பைப் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. ராமச்சந்திர வாதூலர் பரம்பரையில் வந்தவர் இவர். தந்தையிடமே ஆரம்ப இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். எனினும், ஊத்துக்காடு வேங்கடகவிக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணனே குருவாக இருந்து அருள்பாலித்ததாகக் கூறுவர். தஞ்சை அரசர்களின் மானியமாக ஒன்பது கிராமங்கள் ராமச்சந்திர வாதுலருக்கு அளிக்கப்பட்டது. இவரது தந்தையார் ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர். தானதர்மம் செய்தில் ஆர்வம் உள்ளவர் என்பதை ""ஏழைக்கு இரங்கும் ராமச்சந்திர அய்யன் எப்போ வருவாரோ அரசரடிக்கு என்று நாட்டுப்புறப்பாடல்கள் குறிப்பிடுவதைக் காணலாம். ஒன்பது கிராமத்து மக்களுக்கும் திருமண சடங்குக்காக ஒரு தாலியும், பொன்னும் அளிப்பதை இவரது முன்னோர்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். ராமச்சந்திர வாதுலருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் வேங்கட சுப்பிரமணியன்.
வேங்கடகவியின் குடும்பம் சிறிது சிறிதாக பொருளாதார வளத்தை இழந்தது. ஒன்பது கிராமங்களும் அவரது குடும்பத்தை விட்டுச் சென்றன. இதன்பின், வேங்கடகவி தவயோகியாக வாழ்ந்த கிருஷ்ணயோகி என்பவரைத் தேடி நீடாமங்கலம் காட்டிற்குச் சென்றார். அவரே, தன்னுடைய தாய்மாமன் என்ற உண்மையை உணர்ந்தார். ஆனால், கிருஷ்ணயோகியோ வேங்கடகவியை சிஷ்யனாக ஏற்க மறுத்தார். இதன்பின், தன் தாயின் ஆசியுடன் ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணனை தன்னுடைய மானசீக குருவாக ஏற்று தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ""இன்று முதல் உமக்கு யாமே குருவானோம். கோயிலின் ஈசான மூலையில் உள்ள துளசி மாடத்தருகே உமக்கு இசை ஞானத்தைப் போதிப்போம் என்பதைக் கேட்டு அதிசயித்தார். இந்நிகழ்வை, ""கூடப் படித்தவன் குசேலன்- ஆடற்கொடுத்து வைத்தவன் காளீயன்- பகவத் கீதை கேட்டான் விஜயன்- சங்கீர்த்தனம் கேட்டவன் அடியேன் என்ற பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
வேங்கடகவிக்கு நீலமேக சியாமளனாக கண்ணன் பலமுறை நேரில் வந்த காட்சி அளித்தார். கண்ணனின் அருளால் மனித இயல்புகளான ஆசை,கோபம், காமம் ஆகிய துர்குணங்கள் மறைந்தன. வயிற்றுப்பசிக்கு மட்டும் சிறிதளவு உணவை, அன்னதானம் இடும் ஊட்டுப்பறைகளில் பெற்று வாழ்ந்தார். ஒருசமயம் தஞ்சை மன்னன் வயிற்றுவலியால் அவதிப்பட்டான். செய்வினைக்கோளாறால் ஏற்பட்ட நோய் என்று சொல்லி மந்திரவாதி ஒருவன் மன்னனை ஏமாற்றி வந்தான். இவ்விஷயத்தை அறிந்த வேங்கடகவி, அரண்மனைக்கு சென்றார். வழியில் பல்லக்கில் மந்திரவாதி வந்து கொண்டிருந்தான். பல்லக்கை தூக்குபவர்களுடன் வேங்கடகவியும் சேர்ந்து அரண்மனைக்குள் நுழைந்தார். கண்ணனைப் பாடி மன்னனின் வயிற்றுவலியை முற்றிலும் போக்கினார். மற்றொரு சமயம் நாதஸ்வர வித்வான் பெரிய ருத்ராதிபிள்ளைக்கு, வேங்கடகவியின் தெய்வீக இசையைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இசையின் கடினவழிமுறைகளில் ஒன்றான ஸ்ரீருத்ர சப்தமான கனம் வழியில் அவர் பாடிக் கொண்டிருந்தார்.
ருத்ராதிபிள்ளை அவரின் ராகத்தை மறைந்திருந்து கேட்டு, அதை நாதஸ்வரத்தில் வாசித்துக் காண்பித்தார். வேங்கடகவி அவரைப் பாராட்டி ஆசி அளித்தார். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருவிழாவில் வெண்ணெய்த்தாழி சேவைவிழா நடந்து கொண்டிருந்தது. அவ்விழாவை தரிசிக்க தனவந்தர் ஒருவர, ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தார். கூட்டத்தில் சிறுவன் காணாமல் போனான். தனவந்தர் தவித்துக் கொண்டிருந்தார். பஜனைக்கோஷ்டியினருடன் பாடிக் கொண்டு வந்த வேங்கடகவி தனவந்தரிடம் இரக்கம் கொண்டார். கண்ணபிரானைத் தியானித்து, ""கண்ணா! எழுந்திரும் பிள்ளாய்! என்று பாடினார். வேங்கடகவி பாடத் தொடங்கியதும், எங்கோ உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் எழுந்து ஓடி வந்தான். அச்சிறுவனைக் கண்ட தனவந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திருக்கண்ணபுரத்தில், அபிராமி என்ற நங்கை பரதநாட்டியக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். காசி சென்று, அங்குள்ள அரண்மனை நாட்டியக்காரி சித்ராவளியுடன் போட்டியில் பங்கேற்று தோற்றாள். ஒருமுறை, திருக்கண்ணபுரம் கோயிலுக்கு வந்த வேங்கடகவியைக் கண்டு தன் வருத்தத்தை தெரிவித்தாள். அவர் அவளுக்கு நடனத்தில் "லய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து மீண்டும் காசிக்கு அனுப்பி வைத்தார். அவள் சித்ராவளியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினாள். வேங்கடகவியின் தொடையில் கண்ணன் இருந்ததால், ஆயுள்முழுவதும் தாளம் போட்டு பாடியதில்லை. திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார். இவர் பாடிய பாடல்களில், "தாயே யசோதா, "காயாம்பூ வண்ணனே, "ராஜ விலாஸம், "புல்லாய் பிறக்க வேணும், "அலை பாயுதே போன்றவை இன்றும் இசைமேடைகளில் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுபவையாகும். இவருடைய இறுதிக்காலம் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.