எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோய் மனித சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எச்.ஐ.வி என்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். தொடக்கத்தில் உடல் ரீதியிலான தொடர்புகளான உடல் உறவு போன்றவற்றால் மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும் என்று நம்பப்பட்டு, பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட பல வழிகளால் எய்ட்ஸ் பரவுகிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.
தகாத உறவுகளில் ஈடுபடுவோருக்கு பிறப்பது தவிர வேறு ஒரு பாவமும் அறியாத அவர்களின் சந்ததிகளும் எய்ட்ஸ் நோய்க்கு பலியாவது மிக மிக கொடுமையானது. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்பின்போது எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்படாமல் இருந்தாலும், சுமார் 15 சதவீத குழந்தைகள் ஆரம்பகால குழந்தைப்பருவத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.
அது எப்படி?
எச்.ஐ.வி. வைரஸ் தாய்ப்பாலுக்குள் பரவும் தன்மையுள்ளது. இதனால் எச்.ஐ.வி. வைரஸால் தாக்கப்பட்ட தாய்மார்களுடைய தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புக்கு பின்னர் எய்ட்ஸ் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
`ஆனால், தாய்ப்பாலில் இருக்கும் ஏதோ ஒரு வேதியியல் பொருளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் வைரஸால் தாக்கப்பட்ட உயிரணுக்களை கொல்லும் திறன் இருக்கிறது. மேலும், மனித நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களை உடைய எலியின் மீதான பரிசோதனையில், எச்.ஐ.வி பரவுதலை தடுக்கும் திறனும் தாய்ப்பாலுக்கு இருக்கிறது’ என்னும் ஆச்சரியமான முடிவுகளை முன்வைக்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஏஞ்சலா வால் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரின் இந்த அரிய கண்டுபிடிப்பு, எய்ட்ஸ் நோய்க்கான ஒரு நல்ல தீர்வு விரைவில் கிட்டிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
தாய்ப்பாலின் மருத்துவக் குணம் தொடர்பான முந்தைய ஆய்வுகளில், தாய்ப்பாலுக்கு வைரஸ்களை கொல்லும் திறன் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த வைரஸான எச்.ஐ.வி.யை கொல்லும் திறனும், எச்.ஐ.வி. பரவுதலை தடுக்கும் ஆற்றலும் தாய்ப்பாலுக்கு இருக்கிறதா என்பது பற்றி இதுவரை தெரியாமல் இருந்தது.
இதனைக் கண்டறிய, அமெரிக்க ஆய்வாளரான ஏஞ்சலா வால், மனித எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மற்றும் தைமஸ் திசுக்களை உடைய ஒரு எலியை உருவாக்கினார். அந்த எலிகளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் வாய்வழியாக செலுத்தப்பட்டபோது அவற்றுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஆனால் அதே எலிகளுக்கு எச்.ஐ.வி கலந்த தாய்ப் பால் கொடுக்கப்பட்டபோது எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை.
இதன் மூலம், எச்.ஐ.வி கிருமிகளை கொல்லும் திறன் தாய்ப்பாலுக்கு இயற்கையிலேயே உண்டு என்பது நிரூபணமாகிறது என்கிறார் இந்த ஆய்வினை மேற்பார்வையிட்ட மூத்த ஆய்வாளர் விக்டர் கார்சியா.
தற்போது தாய்ப்பாலில் உள்ள எச்.ஐ.வி. கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்ட அந்த விசேஷமான வேதியியல் மூலக்கூறினை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளதாம். அந்த மூலக்கூறு கண்டுபிடிக்கப்படும் வேளையில், உடல் உறவு மூலம் ஏற்படும் எச்.ஐ.வி தொற்றினைக் கூட தாய்ப்பாலில் இருக்கும் அந்த விசேஷ மூலக்கூறினை வைத்து தடுத்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தாய்ப்பாலுக்கு எச்.ஐ.வி. தொற்றினை தடுக்கும் ஆற்றல் இருக்குமானால் தாய்ப்பால் கொடுக்கப்படும் சில குழந்தைகளுக்கு ஏன் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது?
பிளவுபட்ட முலைக் காம்புகளில் இருந்து குழந்தைகள் பாலை உறிஞ்சும்போது தாயினுடைய ரத்தத்தில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ்கள் குழந்தைகளின் உடலுக்குள் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுபோன்ற மறைமுகமான சில காரணங் களாலும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிரான மருத்துவப்போர் முழுவீச்சுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை நாம் மட்டுமல்லாது, நம்மைச் சார்ந்த சமூகத்தினருக்கும் புரிய வைத்து பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment