Sunday, April 9, 2017

வால்மீக்

அடர்ந்த காடு. பல விதமான மிருகங்கள் வசிக்கும் வனம். இங்குதான் கொள்ளைக்காரன் வாடபாடன், தன் குடும்பத்துடன் வசித்துவந்தான்.

காட்டின் நடுவே உள்ள ஒற்றையடிப் பாதையைப் பயன்படுத்தித்தான் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு வணிகர்கள் செல்வார்கள்.

அப்படியாக வரும் மக்களிடம் கொள்ளையடிப்பதே வாடபாடனின் தொழில். இவனைத் திருத்தி உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர விரும்பினார் திரிலோக சஞ்சாரி நாரதர். அவரும் வணிகர் வரும் வழியில் வந்தார். வாடபாடனும் கூரிய கத்தியுடன் அவர் மீது பாய்ந்தான்.

“என்னிடம் இருப்பது இந்த வீணை ஒன்றுதான். இதனால் உனக்குப் பயன் ஒன்றும் இல்லை ஆனால் உன்னிடம் கேட்பதற்கு எனக்கொரு கேள்வி இருக்கிறது” என்றார் நாரதர்.

அசிரத்தையாக, “என்ன கேள்வி?” என்றான் வாடபாடன்.

“நீ கொள்ளை அடித்துச் செல்வதெல்லாம் யாருக்கு?” என்றார் அவர்.

“என் பெற்றோர், மனைவி மக்கள் ஆகியோருக்கு” என்றான் வாடபாடன் அலட்சியமாக.

“இதனால் பாவம் ஏற்படும் தெரியுமா?” என்றார் நாரதர்

“அதனால் என்ன?” வாடபாடன் பதில் இது.

“யாருக்காக இந்த பாவங்களைச் செய்கிறாயோ அவர்கள் இதில் பங்கு கொள்வார்களா?” என்று கேட்டார் நாரதர்.

“நிச்சயமாக” என்றான் வாடபாடன்.

“அப்படியென்றால் கவலை ஒன்றும் இல்லை. நீ போய் அவர்களிடமே கேட்டு உறுதி செய்துகொண்டு வா. உயர்ந்த ரத்தினம் தருகிறேன்” என்று நாரதர் சொல்லி முடிப்பதற்குள் பிடரியில் குதிகால் பட, தன் வீட்டை நோக்கி ஓடினான் வாடபாடன். வீட்டுக் கதவைத் தட்டினான். மொத்தக் குடும்பமுமே ஓடிவந்து கதவைத் திறந்தது.

“என்ன கொண்டுவந்தீர்கள்” என ஆவலாகக் கேட்டார்கள். வாடபாடன் நாரதர் கூறியவாறு, “என் பாவத்தில் பங்குகொள்வீர்களா?”

எனக் கேட்க, அவர்கள், எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. நாங்கள் பாவத்தில் பங்குகொள்ள முடியாது என்று மறுத்துவிட்டனர். துவண்டுபோனான் வாடபாடன். நாரதரிடம் திரும்பி வந்தான். அவன் மனம் துவண்டிருப்பதை

அவனது நடையிலேயே கண்டுகொண்டார் நாரதர்.

“இந்தப் பாவத்திலிருந்து மீள்வது எப்படி என்று தெரியவில்லையே” என்று நாரதரைக் கேட்க, அதற்குத் தான் வழி சொல்வதாகக் கூறி அவனை நாரதர் தேற்றினார். “ராமா என்று சொல்” என்றார்.

அவனுக்கு ராம நாமத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அருகில் இருந்த மரத்தைப் பார்த்தார் நாரதர். இது என்ன என்று கேட்டார் மரம் என்றான் அதில் உள்ள கடைசி எழுத்தை நீக்கி மரா, மரா என்று வேகமாகச் சொல்லிக்கொண்டே இரு என்றார்.

சில மணித் துளிகளிலேயே, மரா, மரா என்பது ராம, ராம என மாறி, ராமபிரானின் திருநாமத்தைக் குறித்தது.

ஆண்டுகள் பல சென்றன. அதே வனத்தில் அமர்ந்த வாடபாடன் மீது கரையான்கள் புற்று கட்டிவிட்டன. அங்கு வந்த சிலர் புற்றை இடிக்க, அதிலிருந்து இறையொளி பொருந்திய நிலையில் வாடபாடன் வெளியே வந்தான். சமஸ்கிருத மொழியில் `வால்மீக்` என்றால் கரையான் புற்று என்று பொருள். அதிலிருந்து வெளியே வந்ததால், வால்மீகி என்று பெயர் பெற்றார் வாடபாடன்.

தவத்தில் பெற்ற தரிசனத்தின் பயனாய் கள்வன், கவிஞர் ஆனார். ராமனின் கதையைக் காவியமாக எழுதினார். அயணம் என்றால் வழி. ராமன் சென்ற வழி என்பதை ராம புராணம் கூறுவதால், இந்த இதிகாசத்திற்கு ராமாயணம் எனப் பெயர் உண்டாயிற்று. கொள்ளையையும் கொலையையும் தொழிலாகக் கொண்டவன், ராம நாமத்தை ஜபித்ததால் அழியாப் புகழ் கொண்ட இதிகாசமான ராமாயணத்தை இயற்றிய பெரும் கவிஞன் ஆனார். இது ஸ்ரீராமநாமத்தின் அருட்பெரும் கருணை என்பது ஐதீகம்.

உங்கள்  வேலைபொழுதுகளிலும் கிடைக்கும் ஒய்வு  நேரங்களில்  ஸ்ரீராம ஸ்ரீராம என சொல்லி நம் பாவத்தினை இல்லாமல் செய்திடுவோம் .

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...