தன்னுடைய கருத்துக்களால் உலகெங்கும் புகழ் பெறும் முன் துறவி, ஒரு திருவோடு
ஏந்திய துறவியாக இந்தியா முழுவதும் சுற்றினார். இன்றைய ராஜஸ்தான்
பகுதியில் அவர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம்.
ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி
கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங்
ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய
பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது
பிடிக்கவில்லை. மன்னர் சுவாமிஜியைச் சந்தித்தால் நல்லது என்று எண்ணினார்
திவான். எனவே அவருக்கு, ‘ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது
இங்கே உள்ளார்’ என்று எழுதினார். மன்னர் மறுநாளே திவானின் வீட்டிற்கு வந்து
சுவாமிஜியைச் சந்தித்தார்.
மன்னர் வந்து சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்.
மன்னர்: ‘சுவாமிஜி, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன்.
உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி
பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்?’
சுவாமிஜி: ‘மகாராஜா, நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு எவ்வளவோ
இருக்கின்றன, அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதென்று
ஆங்கிலேயர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?’
சிறிதும் தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
மன்னர்: ‘ஏன் என்பதற்கு குறிப்பாக எந்த காரணத்தையும் சொல்ல முடியாது.
எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.’
சுவாமிஜி: ‘அதுபோல்தான்; எனக்கு இது பிடித்திருக்கிறது. நான்
பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.’
சிறிது நேரத்திற்குப் பிறகு மன்னர், ‘சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில்
எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி என்னவாகும்?’ என்று கேட்டார். இதைக்
கேட்கும்போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி செய்வது போன்ற தொனியில்
கேட்டார். அவர் கேட்டவிதம் சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.
சுவாமிஜி: ‘நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.’
மன்னர்: ‘இல்லை சுவாமிஜி, எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும்
மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில்
துன்பப்படுவதுதான் என் தலை விதியா?’
சுவாமிஜி: ‘நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ வேண்டும்.
அதுதான் நல்லது’
இந்தப் பதிலை அங்கிருந்தயாரும் எதிர்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ
வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர். அவர் மன்னருக்கு தகுந்த விளக்கம் அளிப்பார்
என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக்
கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த
ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.
சுவாமிஜி: ‘இந்தப் படத்தில் இருப்பது யார்?’
திவான்: ‘அது மன்னரின் படம்.’
சுவாமிஜி திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய
வைத்தது.
சுவாமிஜி: ‘திவான்ஜி, இந்தப் படத்தின்மீது துப்புங்கள்.’
அனைவரும் அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல்
‘துப்புங்கள் திவான்!’ என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான்
அசையவில்லை. உடனே சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து, ‘திவான்
இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற வேறு யாராவது ஒருவர் முன்வாருங்கள். இந்தப்
படத்தில் அப்படி என்ன தான் உள்ளது? வெறும் காகிதம் தானே! இதன் மீது
துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச் செய்ய முன்வரவில்லை. அனைவரும்
சுவாமிஜியையும் மன்னரையும் மாறி மாறி பார்த்தபடி திகைத்து நின்றனர்.
அப்போது சுவாமிஜி மீண்டும் திவானிடம், ‘என்ன, அப்படியே நிற்கிறீர்களே!
இந்தப் படத்தின் மீது துப்புங்கள்’ என்று அழுத்தமாகக் கூறினார். அதன்
பிறகும் திவானால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; பதைபதைத்தவாறே
நடுங்கிய குரலில்,
திவான்: ‘சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டு தானா
சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது என்னால் எப்படி துப்ப
முடியும்?’ என்று கேட்டார்.
சுவாமிஜி: ‘இருக்கட்டுமே! மன்னரின் படம் தானே, மன்னர் அல்லவே! இந்தப்
படத்தில் மன்னர் உயிருணர்வுடன் இல்லையே! இது வெறும் காகிதத் துண்டு.
மன்னரின் எலும்போ சதையோ ரத்தமோ இதில் இல்லை, இது பேசுவதில்லை, நடப்பதில்லை,
மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை. இருந்தாலும் இதன் மீது துப்ப
நீங்கள் யாரும் முன்வர மறுக்கிறீர்கள். ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில்
மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன் மீது துப்பினால்
மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.’
இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார்:
‘பாருங்கள் மகாராஜா! இந்தப் படம் நீங்கள் அல்ல. ஆனால் ஒரு விதத்தில் இது
நீங்களே. அதனால் தான் இதன் மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி
கொண்ட உங்கள் சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு
வருகிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு கொடுக்கின்ற மரியாதையை அவர்கள்
இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும்
செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை வழிபடுகின்ற பக்தர்களின் விஷயமும் இது தான்.
அவர்கள் வழிபடுகின்ற உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை
நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான் யாத்திரை செய்துள்ளேன். எந்த
இந்துவும், “ஏ கல்லே, உன்னை வணங்குகிறேன். ஓ மண்ணே , எனக்கு அருள் செய்”
என்று வழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த, பேரானந்த
வடிவான முழுமுதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும்
அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அருள் புரிகிறார்.’
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
No comments:
Post a Comment