Friday, October 23, 2015

தியாக வீரத்திருமகள் குயிலி



சசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. அனால் வீரத்திருமகன் முத்துவடுகத்தேவர் இதை எதிர்த்தார். இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்கைச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

வீரத்தாய் குயிலி

சிவகங்கையை மீட்க படையெடுத்து வேலுநாச்சியார் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். அப்போது பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும்பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும் வைத்திருந்தார். வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப்பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை. அப்படி குயிலி என்னதான் செய்தார்? வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித் திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார். அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் ''ஓ, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று வினவினார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ''தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன். பணம் வேண்டாம்'' என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார். இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள். நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
 
குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார். நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார். முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக்கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின. வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன.
 
விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அப்போது ஒரு மூதாட்டி வேலுநாச்சியாரிடம், "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என வினவினார். "எங்களிடம் இத்தனை அக்கறையோடு பேசும் நீங்கள் யார்?" எனக் கேட்டார் வேலுநாச்சியார். பதில் கூறாமல் மூதாட்டி நழுவ முற்பட சின்னமருது மிகக் கடுமையாக வாள்முனையில் நிறுத்திக் கேட்டார். அப்போது அம்மூதாட்டி தன்னுடைய வெண்மையான தலைமுடியை விலக்கி ஒப்பனையைக் கலைந்து காட்டினார். அவர் வேறு யாருமில்லை, குயிலிதான். சிவகங்கையின் நிலவரம் அறிய மாறுவேடத்தில் சென்று வந்ததாகவும் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பணிந்து நின்றார். வேலு நாச்சியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குயிலியைப் பாராட்டியதோடு குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங் களோடு வேலுநாச்சியாருடன் உள்ளே நுழைந்தனர். போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் வாட்களைச் சுழற்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்தப் போர் இதுவரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங் களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகிக் கொண்டிருந்தது.
 
அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படை களுக்குச் சென்று கொண்டிருந்தன. தோல்வி தவிர்க்க முடியாதது என்கிற நிலை வேலுநாச்சி யாருக்கு ஏற்பட்டது. என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் ஓர் உருவம் தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது. மறுநிமிடம் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. கை வேறு, கால் வேறு, தலை வேறு, உடல் வேறு, என அவ்வுருவம் சுக்கு நூறாகிப் போனது. ஆயுதக் கிட்டங்கியின் அழிப்பு வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆயிரக் கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலு நாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான். வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியைக் கொண்டாடத் தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். குயிலி கண்டறிய முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தார். ஆம் ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது வேறு யாருமில்லை, குயிலியே. சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்கு குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...