கர்சன் வில்லி என்பவர்
வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர். ஏராளமான
ஹிந்துப் பெண்கள் குழந்தைகள், குடும்பங்களின் இடப்பெயர்ச்சிக்கும்
இழப்புகளுக்கும் காரணமானவர்.
இவரை லண்டனில்
வைத்துக் கொலைசெய்ய வீர சாவர்க்கர், வ.வே.சு. ஐயர் போன்றோர் முடிவு
செய்தனர். நான் செய்கிறேன் என்று முன் வந்த இளைஞர் தான் மதன்லால் திங்கரா.
ஆனால் சாவர்க்கர் மறுத்தார். "நீ சிறு பையன். உன்னால் இயலாது. பிடிபட்டு
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டால் நீ நம் இயக்கத்தைக் காட்டிக்
கொடுத்துவிடுவாய். " என்றார். மதன்லால் மறுத்தார். எவ்வளவு கொடுமை
செய்தாலும் நம் இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றார்.
அதற்கு வீர சாவர்க்கர் சில சோதனைகளுக்கு உட்படுத்தினார்.
கண்களை மூடிக்கொண்டு, மனதைக் கல்லாக்கிகொண்டு. மதன்லாலின் நகக் கண்ணில்
ஊசியை ஏற்றினார். ஆனால் மதன் அசைந்து கொடுக்கவில்லை. முகத்தில் சலனமும்
இல்லை.
இவனின் மன உறுதிகண்டு வீர சாவர்க்கரே மிரண்டு போனார். பிறகு
திங்க்ராவிடமே இப்பொறுப்பை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கர்சன் வைலியை
லண்டனில் ஒரு விருந்தில் கண்டு மதன்லால் திங்கரா சுட்டக்கொன்றார். மூன்று
குண்டுகள் சுட்டு நான்காவது குண்டு சுடும் முன் அருகிலிருந்த மருத்துவர்
இவருடைய மணிக்கட்டைப் பிடித்துகொண்டார். மதன்லால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது மேற்படி மருத்துவர் "நான் இவனுடைய
மணிக்கட்டைப் பிடித்தபோது இவனுடைய நாடித்துடிப்பைக் கணித்தேன். கொலை
செய்துவிட்ட பதைபதைப்போ, பதட்டமோ துளியும் இல்லை. நாடி மிக நிதானமாக
இருந்தது. " என்றார். மதன் லால் கொடுத்த வாக்குமூலத்தில் லண்டன் மாநகரமே
கிடுகிடுத்தது. பிரிட்டிஷார் அரண்டு போயினர். லண்டன் பத்திரிகை அனைத்தும்
பக்கம் பக்கமாக திங்கராவைப் பற்றி எழுதின.
ஓல்டுபெய்லி நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப் பெற்ற கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு மதன்லால் திங்கரா கொடுத்த வாக்கு மூலத்தின்
ஒரு பகுதி வருமாறு:
"தேசாபிமானம்மிக்க இந்திய இளைஞர்களை, தூக்கிலிடப்படும், நாடு கடத்தப்படும் மிருகத்தனமான செய்கைக்கு வஞ்சந்தீர்த்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர் இரத்தத்தைச் சிந்த அன்று முயன்றேன் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றேன். இம்முயற்சியில் நான் எனது மனச்சாட்சியைத் தவிர வேறு யாரையும் கலந்து ஆலோசிக்கவில்லை. என் கடமையைத் தவிர வேறு யாருடனும் சேர்ந்து நான் சதியாலோசனை செய்யவுமில்லை. அன்னியரின் துப்பாக்கி முனை கொண்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டு மக்கள், நிராயுதபாணிகளான ஓர் இனத்தினருக்காகப் போராடுவது அடிக்கடி மறுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நிரந்தரமான போர் நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்."
"இந்து என்ற முறையில், நாட்டுக்கு இழைக்கப்படும் தீமையைக் கடவுளுக்குச் செய்யப்படும் அவமதிப்பாக நான் கருதினேன். அவனுடைய (தாய் நாட்டினுடைய) லட்சியம் ஸ்ரீராமரின் லட்சியம்; அவளுக்குச் செய்யும் சேவை ஸ்ரீகிருஷ்ணனுக்குச் செய்யும் சேவை. செல்வத்திலும் அறிவிலும் ஏழையான என்னைப்போன்ற ஒரு மகன், தன் தாய்க்கு அர்ப்பணம்செய்யக்கூடியது, தனது சொந்த இரத்தத்தைத் தவிரவேறு எதுவும் இல்லை. எனவே, அதையே அவளுடைய திருவடிகளில் அர்ப்பணஞ் செய்கிறேன்."
"இந்தியாவுக்கு இப்போது தேவைப்படும் படிப்பினை, எப்படி சாவது என்பதை அறிந்து கொள்வதே, இதைப் போதிப்பதற்குள்ள ஒரேவழி நாமே சாவதுதான். ஆகையால், நான் உயர்ந்த லட்சியத்திற்கு உயிரைக் கொடுத்துக் கீர்த்தியுடன் சாகிறேன்.
"கடவுளிடம் ஒன்றே ஒன்றுக்காகத்தான் பிரார்த்தனை செய்கிறேன். என் தாய்நாடு தன்னுடைய லட்சியத்தில் வெற்றியடைந்து மனிதவர்க்கத்தின்
நன்மைக்காகவும் கடவுளின் அருளுக்காகவும் சுதந்திரத்துடன் வாழத் தொடங்கும் வரையில், நான் இதே தாய்நாட்டின் மகனாகப் பிறந்து, இதே தெய்வீக லட்சியத்திற்காகத் திரும்பவும் சாக அருள வேண்டும். இதுவே என் பிரார்த்தனை. வந்தே மாதரம்."
முடிவில் திங்கராவுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக்கு முதல் நாள் இரவு வீர சாவர்க்கர் மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியோர் திங்கராவைப் பார்க்க வந்தனர். உனக்கு கடைசி ஆசை என்னவென்று கேட்டனர். அதற்கு மதன்லால் திங்கரா "எனக்கு ஒரு சீப்பும், முகம் பார்க்கும் கண்ணாடியும் வேண்டும்" என்று கேட்டார். ஏன் என்றதற்கு மதன்லால் சொன்னார் "நான் என்ன சாதாரணமாகவா சாகப் போகிறேன் ? இந்தியத் தாயின் பாதங்களில் மலராக அல்லவா விழப் போகிறேன். அப்போது நான் அழகாக இருக்க வேண்டாமா ?"
முடிவில் தூக்கு நிறைவேறும் போது முகத்தை மூட மறுத்து விட்டார். நான் என்
தாய் நாட்டை பார்த்துக் கொண்டேதான் இறப்பேன் என்று சொல்லி வீரசொர்க்கம்
புகுந்தார்.
No comments:
Post a Comment