Saturday, February 23, 2019

அகத்தியப் பெருமான் அருளிய சிவதாச சித்தர்

சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர். அதை சிற்றூர் என்று சொல்வதை விட எந்த வசதியும் இல்லாத ஒரு கிராமம் என்று சொல்லலாம். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் குடியானவர்கள். விவசாயத்தை நம்பி வயிறு வளர்ப்பவர்கள். பண வசதி, படிப்பு வசதி எதுவும் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

அந்த சிற்றூரில் பிறந்தவன் சிவதாசன்.

அருகிலுள்ள பொட்டை வயலில், ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். வறுமையின் உச்சகட்டம் காரணமாக, அந்த ஏழு வயது சிவதாசனுக்கு பசிக்கு சரியான ஆகாரம் கிடைக்கவில்லை.

வீட்டில் பழைய சாதமும், "சாற்றமுது" என்று சொல்லப்படும் நீராகாரமும்தான் சிவதாசனின் உயிரை வளர்த்துக் கொண்டிருந்தன. நல்ல துணிமணி இல்லை. அவனது தலைமுடி எண்ணை பசியைக் கண்டு பல வருஷங்கள் ஆகியிருக்கும். வெறும் கோவணத்தோடுதான் அவன் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள், மதியவேளை! மரத்தின் நிழலில், அலுமினிய தூக்கில் வைக்கப்பட்டிருந்த பழைய சாதத்தை சாப்பிட சிவதாசன் சென்றபோது, கால் தடுக்கிக் கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அலுமினியத் தூக்கு உருண்டு, அதிலுள்ள சாப்பாடு எல்லாம் மண்ணில் கொட்டிவிட்டது.

இந்த சாப்பாட்டை விட்டால், இரவு ஒன்பது மணிக்குத்தான் கஞ்சியோ, கூழோ கிடைக்கும். பசி வயிற்றைக் கிள்ளியது. மண்ணில் விழுந்த உணவை மேலோட்டமாக எடுத்துச் சாப்பிட்டு விடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் மனது கேட்கவில்லை.

சிவதாசனுக்கு பசி போயிற்று. ஆனால் அழுகைதான் வந்தது. குமறிக் குமறி அழுதான். இவனது அழுகை அந்த பொட்டல்காட்டில் "ஒ"வென்று ஒலித்தது.

அப்போது,

"சாப்பாடிற்குதானே அழுகிறாய், இந்தா, இதில் உனக்கு வேண்டிய எல்லா சாப்பாடும் இருக்கிறது. ஆசை தீர சாப்பிடு!" என்று ஒரு வயதான சாமியார் தன் கையிலிருந்த பெரிய பொட்டலத்தைக் கொடுத்தார்.

வந்தவர் யாரென்று கூட கேட்காமல், பெரியவர் கொடுக்கிறாரே, என்று அதை பொறுமையாகச் சாப்பிடாமல் அவசர அவசரமாக அப்படியே முழுங்கினான். கடித்து சாப்பிடக் கூட அவனால் பொறுமை காட்ட முடியவில்லை.

சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பி பார்த்தான் சிவதாசன். சாப்பாடு கொடுத்த அந்த பெரியவரை காணவே இல்லை.

"சரி! ஏதோ வழிப்போக்கர் போலிருக்கிறது. என் நிலையைக் கண்டு இரக்கப்பட்டு சாப்பாடு கொடுத்திருக்கிறார், என்று எண்ணிக் கொண்டானே தவிர, வேறு சிந்தனை அவனுக்கு வரவில்லை.

​மறுநாள், வழக்கம்போல் ஆடு மாடுகளை அழைத்துக்கொண்டு, அந்த பொட்டல்காடு நோக்கிப் புறப்பட்டான். நேற்றைக்காவது அவன் தாய் தூக்கில் சாப்பாடு கொடுத்தாள்.  இன்றைக்கு முற்றிலும் அவளால் எழுந்திருக்க கூட முடியாமல் ஜுரத்தில் இருந்ததால், சிவதாசனுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க முடியவில்லை.

சிவதாசனுக்கு, ஒரு நம்பிக்கை. நேற்றைக்கு தனக்கு உணவளித்த அதே சாமியார் இன்றைக்கும் தனக்கு மதியம் சாப்பாடு தருவார், என்று நம்பினான். அதற்காக மதியம் வரை காத்திருந்தான்.

அதே பெரியவர், மத்தியான நேரத்தில், சிவதாசனுடைய இருப்பிடத்தை நோக்கி வந்தார். ஆனால் அவர் கையில் சாப்பாடு பொட்டலம் இல்லை.

இது சிவதாசனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வந்த, அந்த பெரியவர் சிவதாசனது ஏமாற்றத்தைக் கண்டு மெல்லியதாக சிரித்து, அவன் முகத்தைத் தட்டிக் கொடுத்தார்.

"பசியோடு இருக்கிறோம்! சாப்பாடு கொடுக்கவில்லை. மாறாக என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? என்று எரிச்சல் பட்ட சிறுவன், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

"தம்பி! சிவதாசா! உனக்கு என் மீது கோபமா?" என்றார் அவர்.

"ஆமாம்" என்று மாடுபோல் தலை ஆட்டினான்.

"எதுக்கு? நான் நேற்றைக்கு மாதிரி சாப்பாடு தரவில்லை என்பதற்குத்தானே!" ஒரு பச்சைக் குழந்தை போல் கேட்டார் அந்த பெரியவர்.

"ஆமாம்" என்று பலமாக தலை ஆட்டினான்.

"சரி கோபப்படாதே! இப்போ உனக்கு சாப்பாடுதானே வேணும்" என்றவர், ஏதோ கையையும், காலையும் அசைத்தார், ஜபம் பண்ணினார். கை பட தான் கொண்டுவந்த ஒரு "திருஓட்டை" எடுத்து கீழே வைத்தார். மரத்தின் சருகுகள் காய்ந்து கீழே கிடந்ததில், இரண்டு உதிரிச் சருகுகளை கொண்டுவந்தார்.

காலை மடக்கி அமர்ந்துகொண்டார்! ஏதோ த்யானம் செய்தார். அவரது வாயோ எதையோ நினைத்து முணுமுணுத்தது. சாமியாரின் இந்த செய்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிவதாசனுக்கு, இப்பொழுது பசி போயிற்று.

பேசாமல் அவனும் இந்த சாமியார் எதிரில் உட்கார்ந்துவிட்டான்.

சாமியார் கண்ணை திறந்து பார்த்தார். சிவதாசன் கையைக் கட்டிக்கொண்டு தன் எதிரே அமர்ந்திருப்பதை கண்டார்.

"ஒரு நிமிடம் பொறு. உனக்கு இலை, பாயாசத்தோடு சாப்பாடு வரும்" என்றார்
சிவதாசன் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டானே தவிர, அவனுக்கு இப்பொழுது அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

சட்டென்று ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து, காய்ந்து போன இலைச் சருகுகள் மீது தெளித்தார் அந்த சாமியார். அந்த நிமிடம் அந்தச் சருகு, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அந்த தீயின் மீது, தன் கையேடு கொண்டு வந்திருந்த திருவோட்டை வைத்தார்.  ஏதோ பிரார்த்தனை செய்தார். அந்த திருவோடு பெரிய மண் பானையாக மாறியது.

யாரோ வந்து அந்த மண் பானைக்குள் அரிசியையும், தண்ணீரையும் கொட்டுவது போல் தோன்றியது.  அடுத்த பத்தாவது நிமிடம் மண் பானை கீழே இறக்கப்பட்டது.

பின்னர் கையை மேலே தூக்கினார். மற்றொரு பாத்திரம் வந்தது. தொடர்ந்து பச்சைக் காய்கறிகள் வந்தது.  அதனை அப்படியே கொதிக்க அந்த தீயில் வைத்தார். அது காய்கறிகளை சமைத்து தந்தது.

அரைமணி நேரத்துக்குள், அந்த இடத்தில் அறுசுவை உணவு தயாராகிவிட்டது. வாழை மர இலையை கொண்டுவந்த அந்த சாமியார், "இந்தா! இந்த சாப்பாடெல்லாம் உனக்குத்தான், வயிறு நிறைய சாப்பிடு" என்றவர், அங்கிருந்து மறைந்து போனார்.

சிவதாசன் இதுவரை இப்படி ஒரு உணவை ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. கல்யாண வீட்டில் இப்படிப்பட்ட சாப்பாடு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். யாரும் இதுவரை சிவதாசனை கல்யாணத்திற்கு அழைத்ததே இல்லை, என்பதால் அந்த ஆசையை ஆரம்பத்திலேயே விட்டுவிட்டான்.

ஒரு மரத்தடியில் மதிய வேலையில் ஆனந்தமாக அறுசுவை உணவினை உண்டு கொண்டிருக்கிற சிவதாசனை அவ்வழியாக வந்த கிராமத்து மக்கள் பார்த்துவிட்டனர்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, பெரும்பாலான அந்த ஊர் கிராமத்து மக்கள் சிவதாசனை நோக்கி ஓடிவந்தனர். "இவனுக்கு எப்படி, இப்படிப்பட்ட அறுசுவை உணவு கிடைத்தது? இது யட்சிணி வேலையா? பேய், பிசாசு வேலையா? கேட்டால் "நேற்றைக்கும் இப்படித்தான் நடந்தது" என்கிறான் சிவதாசன் என்று ஆச்சரியப் பட்டார்கள்.

தாங்களும் அந்த அறுசுவை உணவை ருசி பார்க்க விரும்பினர். இதற்காக சிவதாசனுடன் போட்டி போட்டனர். அவன் கையிலிருந்த உணவை தட்டிப் பறித்தனர்.

ஒவ்வொரு தடவையும், ஒவ்வொருவரும் தட்டிப் பறிக்க, சிவதாசனுக்கு அமுதசுரபி போல் அவன் கையிலிருந்து பல்சுவை உணவுகள் வந்துகொண்டே இருந்தது.

இந்த அதிசயத்தைக் கண்டு, அங்குள்ள அனைவரும் வியந்து போனார்கள். அதோடு சிவதாசனை தேவப்பிறவியாகவும் நினைக்க ஆரம்பித்தனர்.

சிவதாசனுக்கு கூட ஏன் இப்படி நடக்கிறது ? யார் அந்த சாமியார்? எதற்காக என்னிடம் வந்து கொடுக்கணம்? என்று தெரியவில்லை.

யார் எதைக் கேட்டாலும், ஒரு சாமியார் வந்தார். அவர் தான் இப்படி எல்லாம் செய்தார், என்று சொன்னானே தவிர, வேறு எதுவும் சொல்லவில்லை.

எல்லோரும் நன்றாக அறுசுவையும் உண்டு கலைய ஆரம்பித்தனர். ஒரு சிலரோ ராத்திரி வரை சிவதாசனுடன் கூடவே இருந்து ராத்திரி வேளைக்கும் இருந்து சாப்பிட்டு போகலாம் என்று தங்கிவிட்டனர்.

ஆனால், அந்த சாமியார் வரவே இல்லை. எனவே, சிவதாசன் தன்னுடைய ஆடு மாடுகளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

மறுநாள் காலையிலிருந்தே, சிவதாசன் ஆடு மாடு மேய்க்கும் இடத்திற்கு அக்கம் பக்கக் கிராமத்திலிருந்து கூட நூற்றுக் கணக்கான மக்கள், அந்த அமுதசுரபி உணவிற்காக "நான் முந்தி, நீ முந்தி" என்று போட்டிப் போட்டுக் கொண்டு காத்திருந்தனர்.

சிவதாசனுக்கு தலை கால் புரியவில்லை.

மதிய நேரம் வந்தது.

மற்றவர்களை போல சிவதாசனும் அந்த திகில் சாமியாருக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. நேரம் ஆக ஆக பதற்றம்தான் அதிகரித்ததே தவிர, அந்த சாமியார் வரவே இல்லை.

நொந்து போன அந்த கிராமத்தார் சிவதானசனை நோக்கிப் பாய ஆரம்பித்தனர்.

காலையிலிருந்து, மாலைவரை நன்றாக உண்டு விட்டுப் போகவேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு பசி அதிகரிக்க அதிகரிக்க கோபமும், ஆத்திரமும்  ஏற்பட, அந்த கோபத்தில் எல்லோரும் சிவதாசனை சாற்று சாற்று என்று சாத்தினர். எல்லோராலும் அடிபட்ட சிவதாசன், அப்படியே மயங்கி விழுந்தான்.

சிவதாசன் இறந்து விட்டான், என்ற பயத்தில் அத்தனை பேர்களும் ஓட, தனித்து மயங்கிக் கிடந்த சிவதாசனை நோக்கி அந்த சாமியார் வந்தார்.

சிவதாசனது பரிதாப நிலையை கண்டு, உடனடியாக மூர்ச்சை தெளிவித்தார். அடுத்த வினாடி சிவதாசனை அழைத்து செல்வது போல், தன மாய சக்தியால் அவனை, தன்னோடு அணைத்தபடி சென்றார் அவர்.

தன் மகன் அடிபட்டு இறந்து போய்விட்டான், என்ற செய்தி கேட்டு சிவதாசனின் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு அந்த பொட்டல்காடு மரத்தடிக்கு ஓடிவந்தனர்.

அங்கே வந்து பார்த்தால், சிவதாசனை காணவில்லை.
தனால், மேலும் பதற்றமடைந்த அவர்கள், ஊரை கூட்டிக்கொண்டு பல இடங்களில் தேடினர்.

எங்கு தேடியும் கிடைக்காமல் உள்ளூர் கோயில் திண்ணையில் சோர்ந்து அமர்ந்திருதிருந்தபோது, அந்த கோயிலை திறக்க மாலை நேரத்தில் வந்த குருக்கள், "வாருங்கள், இங்குள்ள வைத்தீஸ்வரன் நிச்சயம் உங்கள் குழந்தையை வைத்தியம் செய்து உயிர் காப்பார்" என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குள்  நுழைந்தார்.

கோயில் கருவறையை திறந்தபோது, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து புன்னகையோடு, , உடல் ஆரோக்கியத்தோடு, காவி வேஷ்டி, முண்டாசு சகிதம் கையில் தண்டத்தோடு சிவதாசன் வெளியே வந்தான்.

இது சிவதாசனா? என்று பலரும் ஐயமுற்றனர்.

"எப்படி இந்த கோயிலின் கருவறைக்குள் வந்தான். இவன் தெய்வீக சிறுவனா? மந்திரவாதியா? என்று சிலர் முணுமுணுத்தனர், அடிபட்டு செத்துப் போனான் என்று எண்ணிக் கொண்டிருந்த சிவதாசன் உயிரோடு வந்திருக்கிறான் என்றால், இது வைத்தீஸ்வரர் பெருமாள் செய்த லீலைதான். வைத்தியமும் செய்து தன்னோடு அழைத்து ஞானத்தையும் போதித்திருக்கிறார். சிவதாசன் கொடுத்து வைத்தவன் என்று பெரியவர்கள் பலரும் முடிவெடுத்து, சிவதாசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டனர்.  சிவதாசன் முகத்தைப் பார்த்த பொழுது, தெய்வீககளை ஏறியிருந்தது. உடலில் ஒரு புதிய சக்தி உண்டாயிருப்பதால், கண்களில் ஞானம் பரவி இருந்தது.

கருவறையிலிருந்து வெளியே வந்த சிவதாசன், ஈன்றோரை பார்த்து "அன்றைக்கு எனக்கு அன்னமளித்ததும் இந்த வைத்தீஸ்வரரே! இன்றைக்கு மருத்துவ சிகிர்ச்சை செய்து , என்னை கைத்தாங்கலாக இந்த கருவறைக்குள் கிடத்தி , ஞானத்தை புகுத்தி, அவருக்கு அடிமையாக்கி, சித்தத் தன்மையை கொடுத்தவரும் இதோ இந்த வைதீஸ்வரர்தான். கண்கண்ட தெய்வமாக விளங்கும் இந்த வைத்தீஸ்வரப் பெருமாள் புகழ் இன்னும் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் புகழ் பெறப் போகிறது" என்றவன் "நான் தேசாந்திரம் சென்று மீண்டும் இதே கோவிலுக்கு திரும்புவேன். இங்கு ஒன்பது வகையான சித்தர்கள் ஜீவசமாதி நிலையில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவார்கள். இனி இந்த கோயில் சித்தர் கோயில் என்றும், காட்டிலே இருப்பதால், இதற்கு சித்தர் காடு என்றும் புகழ் பெறப் போகிறது" என்று சொன்னவன், அப்படியே வெளியே நடந்தான், யார் கண்ணிலேயும் பின்பு தென்படவே இல்லை.

சிவதாசன் சித்ததன்மையை அடைந்து வெளியேறிய பின்பு, அங்குள்ள சிலர், "அதெப்படி! ஏதோ ஒரு மந்திரஜாலம் மாதிரி நடக்கிறது. அடிபட்டவன் கருவறைக்குள் வருகிறான். உயிரோடு நடப்பது போல் நடக்கிறான். இது தோஷம் இல்லையா? எனவே சிவதாசன் சித்தன் அல்ல; செத்துப் போனவன்.  ஆவியாக இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறான். எனவே இந்தக் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது" என்று குரல் எழுப்பினர்.

பொதுமக்கள் இதை கண்டு குழம்பிப்போனார்கள்.

அன்றைக்கு ராத்திரி, திடீரென்று அந்த வைத்தீஸ்வரன் கோயில் ஆலயமணி வெகு வேகமாக அடித்தது.  இதைக் கேட்டு அந்த கிராம மக்கள் பதறியடித்து அரிவாள், கம்பு, கத்தியோடு கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள்.

உள்ளே சென்று பார்த்தால், வைத்தீஸ்வரன் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கிறது. மலர்களின் நறுமணம் எல்லோரையும் சுண்டி இழுத்தது.

கோபத்தோடும், ஆத்திரத்தோடும், பயத்தோடும் வந்த அந்த ஜனங்கள் பக்தி பரவசத்தால் தங்களையும் மறந்து கைகூப்பித் தொழுதனர். அப்போது ஒரு அசரீரி குரல் கேட்டது.

"சிவதாசன் முதற் பிறவியிலே சித்தத்தன்மை பெற்று, இங்குள்ள வைத்தியநாதனுக்கு தொன்டு செய்தவன். மறுபிறவியிலும் தொண்டு செய்ய விரும்பினான்.  தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவனுக்கு வைத்தியநாதசுவாமி அருள்பாலித்தார்.

அவன் இப்பொழுது இளம்வயது சித்தர். வடபுல யாத்திரைக்குச் செல்லும் சிவதாச சித்தன், இறையருளால் பல்வேறு அதிசயங்களைச் செய்து காட்டப்போகிறான். அவனால் இந்த சித்தர் காட்டில் குடியிருக்கும் கோயில் பெருமை படப்போகிறது.

சிவதாசன் வடபுலம் சென்றாலும், தினமும் இங்கு பறவையாக வந்து இறைவனுக்கு மலர் தூவுவான். கொழுந்துவிட்டு எரிகின்ற விளக்கின் அருகே காக்கையாக இருந்து நெய்தனை உண்டு மகிழ்வான்.

இந்த கோயிலுக்கு வருகின்ற உண்மையான பக்தர்களின் குறைகளை, தன் சித்தத்தன்மையால் தீர்த்து வைப்பான். சிவதாசன் இளம் சித்தன்தான், ஆனால் முழுமையான இறையருள் பெற்றவன், இதனை உங்களுக்கு எடுத்துச் சொல்லவே, இங்கு ஜீவா சமாதியான நாங்கள் நான்கு சித்தர்கள் உங்களை வரவழைத்தோம்" என்றது அந்த குரல்.

இதற்குப் பிறகுதான் அந்த கிராமத்து மக்கள் நம்பினார்கள், அதற்கேற்றபடி சில அதிசயங்களும் சித்தர் காட்டில் நடக்க ஆரம்பித்தது.

ஒவ்வொரு பிரதோஷம் தோறும் ஆந்தைகள் இரண்டு வரும். சுவாமி புறப்பாடு ஆகும்பொழுது வந்து அமர்ந்த அந்த இரண்டு (சித்தர்) ஆந்தைகள், பிறகு சுவாமி உள்ளே கொண்டு செல்லப்பட்டவுடனே சிறகடித்துப் பறந்துவிடும்.

இன்றைக்கும் கூடஇப்படிப்பட்ட காட்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் தோறும் சுவாமி சன்னதியில் ஏற்றுகின்ற நெய் விளக்கிற்கு அருகில் காக்காய் வந்து அமரும்.

விளக்கு எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த அகல்விளக்கு நெய்யை மட்டும் உண்டுவிட்டு, எரிகின்ற தீபத்திற்கு இடையூறு இல்லாமல் பறந்து சென்று விடும்.

மாலை நேரத்தில் பறவைகள் அடைக்கலமாகி விடுவதையும் தாண்டி காக்காய் வந்து இப்படிச் சாப்பிட்டு விட்டுப்போவது சிவதாசச் சித்தர் என்று சொல்கிறார்கள்.

யாரேனும் கோயிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்து விடாமலிருக்க கோயிலுக்கு வலப் புறத்தில் உள்ள ஜீவசமாதி ஆனா சித்தர்கள் வேத கோஷத்தோடு மாறி மாறி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், என்பதுகூட சிவசித்தர் செய்து காட்டும் அதிசயம் தான்.  அந்த கோயிலுக்கு இடது பக்கத்தில் நந்தவனத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒரு நாகப்பாம்பு அவ்வப்போது நடமாடிக் கொண்டிருக்கிறது, இதுவும் ஒரு சித்தர் என்றும், இதுவரை யாரையும் துன்புறுத்தவில்லை என்றும் பார்த்தவர்கள் சொல்வதையும் கேட்கலாம்.

இன்றைக்கு அந்த கோயிலுக்குச் சென்று சித்தர்கள் தூண்களைச் சுற்றி பிரார்த்தனை செய்தால், சிவதாசச் சித்தரே இன்ன இன்ன தோஷத்திற்கு இன்ன இன்ன நிவர்த்தி என்று எப்படியாவது, யார் மூலமாவது காட்டிவிடுவார், என்று எல்லோரும் உண்மையாகச் சொல்கிறார்கள்.

இது நமது கலிகாலத்தில் அன்றாடம் நடக்கக் கூடிய தெய்வீக நிகழ்ச்சி. சித்தர்கள் நமக்காக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவரவர்கள், நடக்கின்ற நிகழ்ச்சிகள் வழி நம்புகிறார்கள்.

​சிவதாச சித்தரின் தொகுப்பை படித்த அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த கோவில் எங்கு இருக்கிறது, ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டுமே என்று தோன்றும். அதை பற்றிய தகவல்களை கீழே தருகிறேன்.

அருள்மிகு ஸ்ரீப்ரசூன குந்தளாம்பிகா சமேத ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோவில், திருமணம் கிராமம், சித்துக்காடு. [Sri Thatheeswarar Temple, (Chithukadu), South Mada Street, 1/144, Thirumanam Village, Via Pattabhiram, Vayalanallur Post, Chennai - 600072.]

நன்றி சித்தன் அருள் இணையதளம்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...