Wednesday, May 22, 2019

அறம் வெல்லும் பாவம் தோற்கும்

"அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்று ஒரு எளிய, அற்புதமான வரி கம்பராமாயணத்தில் வருகிறது. கடல்தாவி வந்த அனுமன் சிறு குரங்கு வடிவெடுத்து இலங்கை நகருக்குள் புகும்போது நுழைவாயிலில் காவல் காக்கும் இலங்கிணி என்ற இலங்காதேவி, “அடா, யார் நீ? எதற்காக வந்தாய்?” என்று அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். ”இந்த அழகான நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். இந்த எளியவன் உள்ளே போவதால் என்ன பெரிய நஷ்டம் வந்து விடப்போகிறது உங்களுக்கு?” என்கிறான் அனுமன் (’அளியான் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்; எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு? ‘என்றான்). கோபமுற்ற இலங்காதேவி பயங்கர ஆயுதங்களால் தாக்கத் தொடங்க, அனுமன் அவள் மார்பில் ஒரே ஒரு குத்து விடுகிறான். அவள் நிலைகுலைந்து கீழே விழுந்து விடுகிறாள். பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுந்து அவள் பேசும்போது கூறுவது தான் அந்த வரி.

”அன்னதே முடிந்தது ஐய!
'அறம் வெல்லும் பாவம் தோற்கும்'
என்னும் ஈது இயம்ப வேண்டும்
தகையதோ? இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம் முற்றும்,
உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன்நகர் புகுதி” என்னாப் புகழ்ந்து
அவள் இறைஞ்சிப் போனாள்.

- சுந்தர காண்டம், ஊர்தேடு படலம்.

(அன்னதே - அவ்வாறே; ஈது - இது; உன்னிய எல்லாம் - நினைத்ததெல்லாம்; முற்றும் - நிறைவேறும்; புகுதி - புகுவாய்; இறைஞ்சி - தொழுது)

”ஒரு சாபத்தால் தெய்வ நிலையிலிருந்து கீழிறங்கி, பிரம்ம தேவனால் இப்பணியில் அமர்த்தப் பட்டேன். எத்தனை காலம் இந்த நகரைக் காவல் காப்பது? இதற்கு விமோசனமே இல்லையா? என்று கேட்டேன். அரக்கர்களின் ஆணவமும் அகந்தையும் அதர்மமும் அத்துமீறிப் போகும். அப்போது ஒரு குரங்கு உன்னை அடித்து வீழ்த்தும். அதன்பின், இந்த நகரமே அழியும் என்றான். அவன் சொன்னவாறே முடிந்தது” என்றாள் இலங்காதேவி.

அனுமனிடம் பிரார்த்திக்கும்போது பக்தர்கள் கூறும் பிரபலமான சுலோகம் ஒன்று உண்டு.

அஸாத்4ய ஸாத4க ஸ்வாமின் அஸாத்4யம்’ தவ கிம் வத3 |
ராமதூ3த க்ரு’பாஸிந்தோ4 மத்கார்யம்’ ஸாத4ய ப்ரபோ4 ||

“உன்னால் உன்னிய எல்லாம் முற்றும், உனக்கும் முற்றாதது உண்டோ?” என்பது தான் இந்த சுலோகத்தின் முதலடியாக வந்திருக்கிறது. கம்பனின் வாசகத்தை அப்படியே இந்த சுலோகத்தைப் புனைந்த ஆஞ்சநேய பக்தர் எடுத்தாண்டிருக்கக் கூடும்.

சென்ற சனிக்கிழமை சுந்தரகாண்ட சொற்பொழிவுக்கு முன்னால் சும்மா புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கவனத்தைக் கவர்ந்தது இந்தப் பாடல். இப்படித் தான் ஒவ்வொரு முறை ராம காவியத்தை வாசிக்கும் போதும் புதிய புதிய மாணிக்கங்கள் அகப்பட்டுக் கொண்டே இருக்கும். அதுவே அதன் வீச்சும் வசீகரமும்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...