தமிழக அரசியல் கட்சிகளின் அவல நிலைகளையும் சிறிய கதைகளாக
டாக்டர் ராமதாஸ் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக MP க்களின் நிலையை குறித்து கற்பனை கதையாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த கற்பனை கதையில் கூறியிருப்பதாவது.
போதுமடா சாமி!
வேட்பாளராக விருப்ப மனு தாக்கல் செய்ததுமே
பதற்றம் என்னைத் தொற்றிக் கொண்டது. நேர்காணலுக்கு
அழைக்கப்பட்ட போது தான் முன்பணமாக ரூ.5 கோடி
செலுத்தும்படி செல்லமாக ஆணையிட்டது கட்சித் தலைமை.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன்
எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
பிறகு தான் தெரிந்தது… அப்போது
மட்டும் தான் மகிழ்ச்சி என்பது.
வேட்பாளர் தோரணையுடன் தொகுதிக்குள்
நுழைந்ததுமே தொடங்கியது தொல்லை.
‘‘அண்ணே…. தொகுதி முழுக்க உங்க பேரையும்,
நம்ம சின்னத்தையும் வரையணும்னே’’ என்றான் நிர்வாகி.
‘‘ஆஹா…. பேஷா வரையுங்க’’ என்று நான்
சொன்னது தான் பெரும் குற்றம் போலிருக்கிறது.
அதற்கு அடுத்த நாளே நிர்வாகிகள் வந்தனர் என்னை நாடி
சுவர் விளம்பரச் செலவாக அவர்கள் கொடுத்த பில்லோ ரூ.2 கோடி.
விளம்பர பில்லை கட்டுவதற்காக என் வீட்டை விற்றேன்
அடுத்த நிமிடமே பணம் தீர்ந்தது;
செலவு மட்டும் தீரவே இல்லை
அடுத்தக்கட்டமாக முதல் கட்ட பூத் செலவுக்கு ரூ.4 கோடி
அந்தப் பணத்தைத் திரட்ட வயலையும், தோட்டத்தையும் விற்றேன்
வாக்கு சேகரிக்கவும், அதற்காக வந்தவர்களுக்கு
சரக்கு வாங்கவும் தினமும் செலவு தலா ரூ.10 லட்சம்.
அந்த வகையில் 20 நாட்களுக்கு ரூ.2 கோடி காலி
இடைக்கால பூத் செலவுக்கு இன்னும் ஒரு 2 கோடி.
என்னடா இது…. பணம் தண்ணியாக கரைகிறதே என்று நிர்வாகியிடம்
புலம்பிய போது தான் தம்பி தண்ணிக்கு தனி செலவு உண்டு என்றார்.
ஆம். தலைவர் ஓட்டு கேட்டு வந்த போது கூட்டத்திற்கு ஆள்பிடிக்க
தலைக்கு ஒரு குவார்ட்டர், பிரியாணி, ரூ.200 என ஒரு கோடி காலி
செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறிய போது
என் மீது இறங்கியது அடுத்த பேரிடி.
‘‘அண்ணே ஒரு ஓட்டுக்கு ரூ.500 என்றால், குறைந்தது
12 லட்சம் ஓட்டுக்கு ஒரு 60 கோடி எடுத்து வையுங்கண்ணே’’
அடப்பாவிகளா…. ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும்
60 கோடியில் பாதி கூட தேறாதேடா’’ எனக் கதறினேன்.
‘‘அண்ணே… மத்தியில் அடுத்து நாம தான். விட்டதையெல்லாம்
6 மாசத்துல அள்ளிடலாம்னே’’ எனத் தேற்றினான் அடிப்பொடி.
ஒரு பக்கம் பகுத்தறிவு தடுத்தாலும், இன்னொரு பக்கம்
பேராசை தூண்டியதால் வட்டிக்கு வாங்கி ஓட்டுக்கு தந்தேன்.
அத்துடன் எல்லா செலவும் முடிந்தது என நினைத்திருக்க,
அதெல்லாம் முடியலண்ணே என்றார் தலைமை நிர்வாகி.
கட்சிக்காரர்கள் எல்லாம் கிருஷ்ணரைப் போன்றவர்கள் போலும்.
கர்ணனிடம் பிடுங்கியதெல்லாம் போதாது என தர்மத்தால் கிடைத்த
புண்ணியத்தையும் பறித்து சாகடித்ததைப் போல, கடைசி கட்ட பூத்
செலவுக்காக என்னிடம் நிர்வாகிகள் கேட்ட தொகை ரூ. 4 கோடி.
தேர்தலே முடிந்த போதிலும் செலவு மட்டும் முடியவில்லை.
விருந்துக்காக என்னிடம் பிடுங்கிய தொகை ரூ. 1 கோடி.
இவ்வளவு செலவு செய்தும் கிடைக்காமல் போகுமா வெற்றி?
ஏழரை லட்சம் ஓட்டு வாங்கி நாலரை லட்சம் மார்ஜினில் வென்றேன்!
பிறகு தான் தெரிந்தது நாங்கள் மட்டும் தான் வென்றோம்…
எங்கள் கூட்டணி படுதோல்வி அடைந்தது என்று!
மத்திய அமைச்சர் பதவி கனவோடு கலைந்தது…
வாங்கிய கடன் மட்டும் கழுத்தை நெறிக்கிறது.
வாங்கிய ஏழரை லட்சம் ஓட்டுக்கு
81 கோடி செலவு.
ஒரு ஓட்டின் சராசரி விலை ரூ. 1000-க்கும் மேல்
சொத்தை விற்றுக் கொடுத்தது ரூ.25 கோடி,
மீதமுள்ள 50 கோடிக்கு மாதா மாதம் வட்டி மட்டும் ரூ. 1 கோடி.
மக்களவை உறுப்பினருக்கான மாத ஊதியமோ ரூ.2 லட்சம்
கட்ட வேண்டிய வட்டியோ ரூ.1 கோடி. நான் என்ன செய்வேன்?
நான் எம்.பி. மட்டும் ஆகவில்லை… எம்ட்டியாகவும் (EMPTY) ஆனேன்.
அதனால் தொகுதிக்கும், பார்லிக்கும் செல்லாமல் தலைமறைவாகப் போகிறேன்!
அடேங்கப்பா….. போதுமடா சாமி!
No comments:
Post a Comment