Saturday, April 3, 2021

சனீஸ்வரர் பரிகாரத் தலங்கள்

திருக்கொள்ளிக்காடு -பொங்குசனி திருத்தலம்
சனீஸ்வரனுக்கு முற்பிறவிகளில் பாவச் செயல்களில் ஈடுபட்ட ஜீவன்களுக்கு அவற்றின் மறுபிறவிகளில் தயங்காது தண்டனை அளிக்கும் கடமை தரப்பட்டிருந்தது. இதனால் மக்கள் தன்னை ஏசுவதை நினைத்து அதிக மனவேதனை ஏற்பட்டு சிவபெருமானை வணங்கி, பாவத்திற்குத் தண்டனையளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க மனமுருக வேண்டினார்.தவறு செய்பவர்களைத் தண்டிப்பதன் மூலம் தர்மத்தை நிலைநாட்டுவதால் அஞ்சற்க என்று சிவபெருமான் ஆறுதல் கூறி அருள்புரிந்தார். சனி பகவான் சமாதானம் அடையாமல் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி அக்னீவனம் என்னும் திருத்தலத்திற்கு வந்து பல்லாயிரம் ஆண்டுகாலம் கடும் தவமியற்றியபோது, இறைவன் அக்னி உருவில் தரிசனம் அளித்து சனி பகவானை பொங்கு சனியாகத் தன் இரண்டாவது அவதாரம் எடுக்கச் செய்து அவரைத் தரிசிப்பவருக்கு, எத்தகைய கொடிய பாவத்தைச் செய்திருந்தாலும் அவர்களது பாவங்களை அடியோடு நிவர்த்தி செய்து தண்டனை இல்லாமல் தவிர்த்துவிடும் சக்தி அளித்து அனுக்கிரக சனியாக அருள் புரியச் செய்தார்.

சனி பகவானின் சோகத்தை தீர்த்த சக்தி வாய்ந்த திருத்தலம் அக்னீஸ்வரம். அக்னிபுரி, அக்னிவனம் எனும் சீரளத்தூர். இத்தலம் திருக்கொள்ளிக்காடு எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சனி பகவான் சதூர் புஜத்துடன் வலதுகரம் அபயஹஸ்தமாகவும், ஒரு கரத்தில் கலப்பை ஏந்தியும், தனிச்சன்னிதியில் எதிரில் மகாலெட்சுமி சன்னிதி அமையப் பெற்று விளங்குவதால் பொங்குசனி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனை தரிசித்து பொங்குசனி பகவானை பூஜிப்பவர்களின் பாவங்கள் அந்த விநாடியே அக்னீஸ்வரரால் எரிக்கப்பட்டு நீண்ட ஆயுளையும், தொழில் முன்னேற்றத்தையும் அடைவதாக கூறுகிறது புராதனமான தல வரலாறு. இங்கு நவக்கிரஹங்களுக்குத் தண்டனை அளிக்கும் பொறுப்பு இல்லாததால் தங்கள் மாறுபட்ட குணங்களை விட்டு ஒரே வரிசையில் “ப” வடிவில் நின்று தரிசனம் அளிப்பது சிறப்பாகும். இறைவன்-அக்னீஸ்வரன். இறைவி-மிருதபாதநாயகி. இத்தலத்தில் 3 தலவிருட்சங்கள் உள்ளன. வன்னிமரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலையைப் போக்குகிறது. சரக்கொன்றை மரம், கொன்றைப்பூ கொத்துக் கொத்தாதப் பூப்பது போல் குடும்பத்தில் மனவேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையை அளிக்கிறது. இத்தலம் மன்னார்குடியிலிருந்து கிழக்கே 22கி.மீ. திருவாரூரிலிருந்து தென்மேற்கே 25 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து வடமேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. இது சுமார் 2,300 ஆண்டு பழமையானது என்பது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கணிப்பாகும்.

திருநாரையூர் ஸ்ரீ இராமநாத சுவாமி திருக்கோயில் மங்கள சனீஸ்வரர்
கும்பகோணம்-திருவாரூர் வழித்தடத்தில் திருநாரையூர் எனும் சித்தீஸ்வரம் என்கிற சேத்திரத்திற்கு எதிரில் அரசாங்க மருத்துமனைக்கு அருகில் இராமநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.இத்தலத்தில் கஷ்டங்கள் ஏற்பட்டு இறைவனை வணங்கினார். அவரது வேண்டுதலை ஏற்று சித்தர்கள் வாழ்ந்த இத்தலத்தில் இராமநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து மங்களம் அளிக்கும் சனீஸ்வரர் சன்னிதியையும் ஏற்படுத்தி சனிதோஷம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சனீஸ்வரர் தனிசன்னிதியில் தனது இரண்டு தேவியர்-மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடன் தனது இரண்டு குமாரர்கள்-மாந்தி, குளிகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக மங்களம் அளிக்கிறார். தசரதர் வழிபட்டதற்கு ஆதாரமாக மங்கள சனீஸ்வரர் சன்னிதியில் தசரத மகாராஜா வணங்கி பூஜிக்கும் நிலையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு கோஷ்டத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது சிறப்பாகும்.

 

புதுக்கோட்டை ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடாரம் கொண்ட சோழபுரம் பேரூர் ஆண்டான் என்று அழைக்கப்பட்டு தற்சமயம் ஆலங்குடி என்று வழங்கப்படுகிற திருத்தலத்தில் ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் சைவ, வைணவ ஒருமைப்பாட்டினை உணர்த்தி அருள்புரிவது சிறப்பாகும். காசி வில்வம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். புதன்கிழமைகளில் வரும் பிரதோஷம் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விஷ்ணுவையும், பிரம்மாவையும் தரிசிக்கலாம். புதனுக்கும், சனீஸ்வரனுக்கு அதிதேவதையாக மகாவிஷ்ணு விளங்குகிறார்.இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கினால் சனி மற்றும் புதன் கிரஹ தோஷங்கள் நீங்குகின்றன.இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு நெற்றியில் திருநாமம் இடப்பட்டிருப்பது காரணமாக இந்த கோயில் பெருமான் நாம புரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள காலபைரவர், சூரியன் மற்றும் குழந்தை வடிவாகத் திகழும் பால சனீஸ்வரர் தனிச்சன்னிதிகளில் அருள் புரிவதால் இம்மூவரையும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். புதன் கிரஹத்திற்குரிய பரிகாரத்தலமும் ஆகும்.

 

திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு
கயத்தாறு சேத்திரம் திருவாறைத்தலம் என்று வழங்கியது. இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
அகத்தியர், ஸ்ரீ ராமர், அனந்த குணபாண்டியன், ராஜசேகர பாண்டியன் ஆகியோர் பூஜித்துத் திருவருள் பெற்ற தலம். ஆலயத்தின் கிழக்கே கயத்தாறு (யானை நதி) ஆலயத்தினுள் கோடி தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள். சுவாமி ஸ்ரீ கோதண்டராமேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வரன் ஆவுடையார் மீது காகவாகனத்துடன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது பிரத்யேக சிறப்பம்சமாகும்.
சனி பகவான் மானிடர்களின் உயிரைக் காக்கும் ஆயுள்காரக கிரகமாதலால் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். ஜாதகத்தில் அஷ்டமச்னி,கண்டச்சனி, ஏழரைச்சனி ஆகியவற்றாலும், இதர கிரக தோஷங்களினாலும் ஆயுளுக்கு ஆபத்து வரும்போது இத்தலத்தில் தொடர்ச்சியாக 9 வாரம் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து, நெய் தீபமேற்றி ஆராதித்தால் யம பயம் நீங்கும். சித்திரைவிஷூ அன்று சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது விழுவது ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள அற்புத நடராஜப் பெருமான் சிலை தரிசனம், நதிக்கரையில் உள்ள ஸ்ரீ ராமர் பாதம், நவக்கிரஹங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக உட்பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஆகியவை இத்தலத்தில் சிறப்பம்சமாகும்.

 

சென்னை பொழிச்சலூர் -சனீஸ்வரர் மற்றும் நாகதோஷ நிவர்த்தி திருக்கோயில்
சென்னை புறநகர்ப் பகுதியான பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் வடதிருநள்ளாறு என்னும் பெருமைக் குரியதாகும். சனீஸ்வரர் பிறருக்குத் துன்பம் அளித்ததால் தனக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து நீங்குவதற்காக இத்தலத்திற்கு வந்து ஆனந்தவள்ளி ஸமேத அகஸ்தீஸ்வரரை வணங்கித் தண்னைப் பிடித்த பாவங்களிலிருந்து விமோசனம் பெற்றார் என்பது தலவரலாறு.

 

தனிச்சன்னிதியில் குடிகொண்டுள்ளாள் சனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கு அருகில் உள்ள சனீஸ்வரரின் குருநாதரான பைரவர் ஆகிய இருவரையும் சனிக்கிழமைகளில் விளக்கேற்றியும், அர்ச்சித்தும் வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நிச்சயம்.

 

அகஸ்தீஸ்வர் கோயிலின் கருவறை முன்மண்டபத்தில் மேற்புறமுள்ள கல்லில் நாகத்தின் புடை சிற்பம் இருப்பதால் இது நாக தோஷ பரிகாரத்தலம் என்று கூறப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் நாக கற்கள் அருகில் விளக்கேற்றினால் நாகதோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் 3 நாட்கள் லிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் விழுவதால் சூரியன் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது.

 

மங்கம்மாபேட்டை மங்கள சனீஸ்வரர்
அரக்கோணத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் மங்கம்மாபேட்டை எனும் நீலதேவி ஸமேத சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பிரமிடு வடிவ குகைக்குள் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருக்கும் சனி பகவானைஎண்ணிக்கொண்டு எள் தீபம் ஏற்றி வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் சனீஸ்வரரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து தீபத்தை அவ்விடம் வைத்து இங்கு மூலவரை அர்ச்சித்து 27 முறை வலம் வந்து 5 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இம்முறையில் 47.27 அல்லது 11 சனிக்கிழமைகள் வழிபட்டு கடைசி வாரம் அபிஷேக ஆராதனைகள் செய்தால் திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, வியாபார மேன்மை ஆகிய கோரிக்கைகள் அனைத்தும் மேற்கண்ட பரிகார பூஜையால் நிவர்த்தியாகும். இந்த ஆலய வழிபாட்டால் நாகதோஷம், காலசர்ப தோஷம், செவ்வாய் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சனீஸ்வரர் கல்யாண கோலத்தில் அருள்பாலிப்பதால் இங்கு ஷஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி போன்ற நிகழ்ச்சிகள் செய்தால் நற்பலன் கூடும்.

 

சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் ஆலயம்
மக்களுக்கு ஏற்படும் தோஷங்களில் மிகக்கொடிய தோஷம் கலியுக பைரவ தோஷம் எனப்படும். ஆலயங்களை சீரழித்து, ஆலய சொத்துகளை அபகரித்தல், பெண்களின் நிராதரவான நிலைமையை பயன்படுத்தி அவர்களைக் கற்பழித்தல், பெற்ற தாய்க்குச் சமமாக பூஜிக்கப்பட வேண்டிய பசுக்களை வதை செய்வது போன்ற பாவங்கள் செய்பவர்களை கலியுக பைரவ தோஷம் பீடிக்கும். இத்தகைய கலியுக பைரவ தோஷத்திற்கு பரிகார தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் சிவாலயமாகும். 64 பைரவ சக்திகளுக்கும் தனித்தனியான யாகசாலைகளுடன். மிகக்கடுமையான செய்வினை தோஷங்களை வேரோடு அறுக்கும் சக்தி கொண்டது. தொடர்ந்து 7 நாட்களுக்கு இடைவிடாது இச்சன்னிதியில் தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கொடிய நாக தோஷங்களானாலும் நீங்கும். இதற்காகவே “பின்னற்பிறையால்” என்ற வகையிலான விசிறித் தட்டு அகல்கள் போன்ற அபூர்வமான தீப்பிறைகள் இத்திருக்கோயிலில் இருந்துள்ளன.மேலும் சென்ற வினை, வந்துள்ள வினை, இனி வரப்போகும் வினை ஆகிய 3 வினைகளையும் களைந்தெறியும் வினைதீர்த்த சனீஸ்வர பகவானும் சூட்சம் உருவில் இருந்து அம்பிகை ஸ்ரீ சிவாபூரணியையும் ஸ்ரீ கைலாச நாதரையும் பூஜிப்பதால் சனீஸ்வர பரிகார தலமாகவும் சோழபுரம் விளங்குகிறது.

 

தஞ்சாவூர் மாவட்டம் கட்டுமாவடி அருகில் விளங்குளம்
தஞ்சாவூர் மாவட்டப் பேராவூரணிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கட்டுமாவடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் விளாங்குளம் உள்ளது. இங்கு அருள்மிகு பூசம் ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 

சனீஸ்வர பகவானின் நடசத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய தலமாகும். சனீஸ்வர பகவான் யமனால் துண்டிக்கப்படட்டு ஊனமானார். ஊனமான கால்களுடன் மனித உருவில் வாழ்ந்தபோது சுரைக்காய்க் குடுவையில் பிச்சையெடுத்து தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்கினார். வரும்போது விளம் என்னும் மரவேர் தடுக்கி எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்தார். அப்போது அக்குளத்தில் ஞானவாவி என்னும் ஞானதீர்த்தம் உற்பத்தியாகி சனீஸ்வர பகவானின் ஊனம் நீங்கியது. அவர் செய்த அன்னதானமே அப்பலனைத் தந்தது. ஊனம் நீங்கிய நாள் பூசம், சனிக்கிழமை, அட்சய கிருதியை ஆகிய மூன்றும் இணைந்த நாள்.

 

விளம் மரத்தின் வேர் தடுக்கிக் குளத்தில் விழுந்ததால் விளமும் குளமும் இணைந்து விளங்குளம் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் அட்சய புரீஸ்வரராகக் காட்சியளித்து சனீஸ்வர பகவானுக்கு திருமணம் நடக்க வரம் அளித்தார். அந்த வரத்தின்படி சனீஸ்வரர் மந்தா, ஜேஷ்டா என்ற இரு பத்தினியரைத் திருமணம் செய்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. சனீஸ்வர பகவான் விழுந்தபோது ஊனம் நீங்கியதால் ஊனம் உள்ளவர்கள் வழிபட்டால் ஊனம் நீங்கும் என்பது ஜதீகம். குடும்பத்தில் குழப்பம் உள்ளவர்களும், பாவம் போக்கவும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். இக்கோயிலின் முக்கிய தினமே சனீஸ்வர பகவானே நேரில் வரும் சனிக்கிழமை, பூசம், அட்சய திருதியை மூன்றும் சேர்ந்த நாளாகும்.

 

தேனி மாவட்டம் -குச்சனூர்
சனீஸ்வர பகவான் தல நாயகனாக, முதல் மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித்தெய்வமாக கோவில் கொண்டிருப்பது குச்சனூரில் மட்டுமே. இவ்வூர் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுரபி நதி ராஜா வாய்க்காலின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஆழ்ந்த பக்தியோடு வழிபட்ட சந்திரவதனனுக்கு சனி பகவான் அருள்பாலித்த இடமே குச்சனூரில் கோயில் கொண்டுள்ள இடமாகும். மூலஸ்தானத்தில் மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். லிங்க வடிவில் சற்று அகன்றுள்ள இவரது தோற்றம் காண்போர் மனதைக் கவரும் தன்மையுடையது. சனி பகவானுக்குரிய கருமையும், அழகும் கொண்டது. மூலவருக்கருகில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ளார். ஆண்டுக்கொருமுறை பவனி வருபவர் உற்சவ மூர்த்தியே ஆவார். குச்சனூரில் நிலைத்திருக்க விரும்பிய சனீஸ்வர பகவான் தனது உண்மைத் தொண்டராகிய லாட சன்னியாசியை இங்கே இருத்தித் தம் திருவடி கமலங்களில் ஐக்கியமடையச் செய்து துணைத் தெய்வங்களுள் ஒன்றாக அமைத்துக் கொண்டார். சனீஸ்வர பகவான் விரும்பிக் குடிகொண்டிருக்கும் இத்தலத்தின் பெருமையே பெருமை. தீர்த்தம் சுரபி நதி எனும் புகழ் பெற்ற சுருளி நதி. இதில் வருடம் 365 நாட்களும் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

 

ஈஸ்வரன் கட்டளையின்படி இடத்தலை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து மனநிறைவு பெற்று மகிழ்வுடன் வீற்றிருக்கும் இடம் இத்திருத்தலம் ஆகும்.இப்போதும் இம்மரம் மூலஸ்தானத்திற்கு பின்னால் செழிப்பாக இருப்பதை நாம் காணலாம். விடியற்காலம், உச்சிக்காலம், சாயங்காலம் ஆகிய 3 வேலைகளிலும் நாள்தோறும் தவறாமல் பூஜை நடைபெறுகிறது. உச்சிகால பூஜையானவுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாகிய காகத்திற்குத் தளிகை அளித்த பின்னரே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் காகம் தளிகை ஏற்காவிடில் அப்படியே அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்து பக்கதர்களும், பூசாரிமார்களும் பகவான் சன்னிதானத்தில் தாழ்பணிந்து தங்கள் குற்றங்களுக்கு மன்னிப்பு வேண்டி மன்றாடியபின் காகம் தளிகை ஏற்று வருவது இன்றும் நடைபெறும் அதிசயங்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் எள் பொங்கல் படைப்பது சிறப்பாகும். ஒவ் வொரு வருடமும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் தோறும் திருவிழா நடைபெறுகிறது. ஐந்து சனிக்கிழமைகளில் மூன்றாவது சனிக்கிழமையே மிகவும் விசேஷமானது. கோயிலை வலம் வரும்போது ஓம் மந்தாய நம: என்று சொல்லி வலம் வருவது விசேஷம். தேனி மாநகரத்திலிருந்து தெற்கே 20 கி. மீ. தூரத்தில் குச்சனூர் அமைந்துள்ளது.

 

திருநள்ளாறு
ஸ்ரீ சனீஸ்வர பகவான் பூஜை செய்த தலங்களுள் தலையாயது திருநள்ளாறு என்னும் திருத்தலமாகும். ஒருவருக்குப் பொங்கு சனி தசை வந்து விட்டால் பொன் கொழிக்கும். மங்கு சனி தசை வந்துவிட்டால் அஷ்ட தரித்திரம் கூத்தாடும். பல நோய்களும் வரும். சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஸகஸ்ர நாமார்ச்சனை செய்தால் கெடுதல்கள் விலகிப் பலவகை நன்மைகள் உண்டாகும். இத்தலம் பேரளம்-காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. இந்த சேத்திரத்திற்கு ஆதி புரி, நகவிடங்கபுரம் , நலேச்சுரம் என்று பல பெயர்கள் உண்டு. திருநள்ளாறு என்பது காரணப் பெயராகும். நளனுக்கு நல்ல வழியைக் கொடுத்ததால் நள்+ஆறு என்ற பெயர் பெற்று அதுவே மருவி நள்ளாறு என்று ஆயிற்று. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளதாக தலவரலாறு கூறுகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பிரம்மன் தன்னுடைய தண்டாயுதத்தால் அமைத்த தீர்த்தத்தை பிரம்ம தீர்த்தம் என்கின்றனர்.

 

இது கோயிலுக்கு நேர்கிழக்கில் உள்ளது. இதில் நீராடுவோர் பிரம்மபதம் அடைவர். அம்மன் சன்னிதிக்கு எதிரே மதிலை ஒட்டி சரஸ்வதி தீர்த்தம் (வாணி) உள்ளது. இதில் நீராடுவோருக்கு எல்லாக் கலைஞானங்களும் கிட்டும். கோயிலுக்கு வடக்கு முகமாகச் சென்றால், அன்னதீர்த்தத்தையும், அகஸ்திய தீர்த்தத்தையும் காணலாம்.
கோயிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நள தீர்த்தத்தில் ஸ்தானம் செய்தால் சகலவிதமான தோஷங்களும், பீடைகளும் அனலிடைப்பட்ட மெழுகுபோல் மறைந்துவிடும். நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை இந்த இடத்தில் வரவழைக்கப் புராணம் போற்றும். இதை அனைவரும் ஸேவிக்கின்றனர். இதில் நீராடுவதில்லை. ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவனுக்கு ஸ்ரீ ஆதிமூர்த்தி, ஸ்ரீ நகவிடங்கர், ஸ்ரீ நள்ளாறர் என்ற பல திருநாமங்கள் உண்டு. ஸோபன மண்டபத்திற்கருகில் அம்மன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. ஸ்ரீ போக மார்த்த போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ பிராணேஸ்வரி என்பவை அம்மனின் திருநாமங்கள். அம்மன் சன்னிதிக்கு முன்புறம் கிழக்குப் பக்கமாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சங்க புஷ்பம் (பாலாடை புஷ்பம் அல்லது காக்காட்டான் புஷ்பம் ) போன்ற நீல நிறமுடைய புஷ்பங்கள், மற்ற புஷ்பங்களுடன் வன்னிபத்ரமும், வில்வ பத்ரமும் சேர்த்து அர்ச்சனை செய்யப்படுகிறது. வைகாசி மாதத்தில் உத்திரட்டாதியில் துவஜாரோகணமாகி 18 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. தனுர்மாத பெளர்ணமியில் பலர் வந்து அன்னதானம் செய்கிறார்கள். எல்லா மதத்தினருக்கும் சம்மதமானவர் இவர். எல்லா மதத்தவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை துதித்து உய்வோமாக!
துயர்கள் நீங்கித் தூயவராக தொல்வினைகள் தொலைந்து போக, பிறப்பும், இறப்பும் அற்றுப்போக. தீராப்பிணிகள் தீர்ந்து போக, வாக்குவன்மை வளமாய்ப் பெருக சரஸ்வதி தீர்த்தத்திலும், சகல பாவங்களும் விலகத் திருக்குளம் மூன்றிலும் தீர்த்தமாட வேண்டும். புத்திர பாக்கியம் பெற 3 தீர்த்தங்களிலும் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் , ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ நளநாராயணப்பெருமாள் இவர்களை துதிப்போருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சிவபெருமானுக்கு தும்பை மாலை சாற்றினால் சாற்றும் ஒவ்வொரு மலருக்கும் கோடி வருஷ சிவலோக வாசம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...