Monday, July 23, 2012

போதையில் தள்ளாடும் மிருகங்கள்


னிதன் மட்டும்தான் போதைக்கு அடிமையாகி மரணம் வரை போகிறான் என்றால், மிருகங்களும் அதற்கு விலக்கல்ல. அவைகளும் போதைக்கு அடிமையாகி மரணத்தை தழுவுகின்றன. பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் கூட இந்த போதைப்பட்டியலில் இடம் உண்டு.
மிருகங்கள் வெறும் தாவரங்களை உண்டு சாத்வீகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு நிச்சயம் இது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாகவே உள்ளது.

மான்கள்

மான்கள் வெகுதூரம் துள்ளிக்குதித்து ஓடி மலைகளை கடந்து காட்டின் மையப் பகுதிக்கு போவது பசிக்கு இரை தேட மட்டும் அல்ல. “ஏமைநிதா மஸ்கைரியா” என்று சொல்லக்கூடிய ஒரு வகை போதை தரும் காளான்களை தேடியும் செல்லும். வட அமெரிக்க காடுகளில் இந்த வகை காளான்கள் செழித்து வளர்கின்றன. மழைக்காலத்திற்கு பிறகு அந்த சிகப்புநிற காளான்கள் மீது வெள்ளை நிற பூஞ்சைகள் வளரும். அத்தகைய காளான்கள் மிகுந்த போதையைத் தரும் சக்தி கொண்டது.
மான்கள் அதனை தேடிச் சென்று தின்று விட்டு தன்னிலை தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தன்னை நெருங்கி வரும் ஆபத்தைக் கூட உணராமல் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கும். அவைகளுக்கு உலகமே சுழன்று காற்றில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். தன் இருப்பிடம் திரும்பக் கூட வழி மறந்து காட்டில் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும். அப்போது எளிதாக எதிரி மிருகங்களுக்கு இரையாகிவிடும்.

குதிரையின் போதை

“லோகோவிட்” எனப்படுவது, ஒருவகை செடி. வட அமெரிக்க காடுகளில் மழையில் செழித்து வளரும் இந்த தாவரத்தை குதிரைகள் போதைக்காக விரும்பி சாப்பிடும். எத்தனை செடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் இதனை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் திறமை குதிரைகளுக்கு உண்டு. கிட்டத்தட்ட அதேபோன்று தோற்றமளிக்கக் கூடிய 20 வகை தாவரங்கள் உள்ளன. ஆனாலும் குதிரை ஏமாறாது. தனக்கு விருப்பமான அந்த போதை தாவரத்தை எப்பாடுபட்டாவது சரியாக கண்டுபிடித்து விடும். அது போதைத்தன்மையோடு விஷத்தன்மையும் கொண்டது என்பது அதற்கு தெரியாது. அதை குதிரை உண்டதும், மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பிக்கும். அதைத் தின்பதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உணவு உட்கொள்ள முடியாமல் குதிரை பலகீனமாகும். அதிக மன அழுத்தம் ஏற்பட்டு கத்திக் கொண்டே இருக்கும். மற்ற குதிரைகளுடன் முட்டி மோதி காயத்தை ஏற்படுத்தி ரகளையில் ஈடுபடும். அப்போதும் அதுவிடாமல் அந்த தாவரத்தை தேடிப் போகும். முடிவில் மரணத்தை தழுவும். போதையினால் ஏற்படும் பாதகங்களை தெரிந்த ஆறறிவுள்ள மனிதனே போதையை மறக்க முடியாமல் தவிக்கும் போது மிருகங்கள் எம்மாத்திரம்! போதையால் இறப்பு உறுதி என்பதை மனிதனுக்கு உணர்த்தும் விதத்தில் குதிரையின் வாழ்க்கை முடிகிறது.

யானையும், பூனையும்

ஆப்பிரிக்க காடுகளில் உலவும் யானைகள் ஒரு குறிப்பிட்ட சீசனில் அங்குள்ள “மைரூலா” என்ற பழ மரத்தை நோக்கி படையெடுக்கும். அந்த மரத்தை முற்றுகையிட்டு அதன் அருகிலேயே காலத்தை கழிக்கும். காரணம் அந்த மரத்தில் போதை தரும் பழங்கள் இருக்கின்றன. யானைகளை மட்டுமல்ல, ஆப்பிரிக்க கருங்குரங்குகள் போன்ற இனங்களும் அந்த மரங்களின் கீழே காவல் கிடக்கும். அந்த மரம் பூப்பூத்து, பிஞ்சு விட்டு, காயாகி கனியாகி, அந்தக் கனிகள் நன்கு கனிந்து தானே பூமியில் உதிரும் வரை அந்த மிருகங்கள் அனைத்தும் பொறுமைகாக்கும். கீழே விழுந்து அது அழுகியதும் அதனை உண்கின்றன. அது யானைக்கு அதிக போதையைத் தரும் கனியாக இருக்கிறது. அந்த அழகிய கனியை பொறுக்கித் தின்று போதையை ஏற்றிக் கொண்டு அவை போடும் ஆட்டத்தில் ஆப்பிரிக்க காடே அதிர்ந்து விடும். தொண்டை கிழிய பிளிறிக் கொண்டே காடு முழுவதும் ஓடி, ஓடி மண்ணில் புரண்டு ஆட்டம் போட்டு களைத்துப் போய் போதை தெளியும் வரை உயிரற்ற ஜடம்போல் விழுந்து கிடக்கும். அவைகள் விட்டுச் சென்ற மீதியை குரங்குகளும், மற்ற மிருகங்களும் உண்டு ஆட்டம் போடும்.

புலியை மிரட்டும் பூனை

போதையில் யானைக்கு பூனை சளைத்ததல்ல. “கேட்ஷிப்” என்ற ஒரு வகை தாவரத்தை பூனைகள் விரும்பிச் சாப்பிடும். சாப்பிட்டவுடன் குஷியில் துள்ளிக் குதித்து ஓடும். `நான் பூனையல்ல புலி’ என்பதுபோல் வேகமாக பாய்ந்து வந்து நகங்களை நீட்டி மற்ற மிருகங்களை வம்புக்கு இழுக்கும். இந்த போதையின் உச்சத்தில் மற்ற மிருகங்களை நகத்தால் பிராண்டி ஒருவழியாக்கி விடும். அந்த நேரத்தில் நிஜப் புலியே நேரில் வந்தாலும் பயப்படாது. அத்தனை அசட்டுத்தனமான தைரியம் அதற்குள் உருவெடுக்கும். போதை அடங்கும் வரை அதன் அட்டகாசம் தாங்காது. அந்த நேரத்தில் யாரும் அதை நெருங்கக்கூடாது.

ஆடும் – மாடும்

புல்லினங்களிலும் போதை தரும் “புல்” வகைகள் உண்டு. அதனைத் தேடி கண்டுபிடித்து ஆடுகளும், மாடுகளும், பன்றிகளும் தின்னும். அந்தப் புல்லைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அவை செல்லும். ஆபத்தான மலைச் சரிவுகளைக் கூட பொருட்படுத்தாமல் அந்த புற்களைத் தேடித் தின்றுவிட்டு தள்ளாடிய படி புகலிடம் திரும்பும். தன்னை வேட்டையாடும் நோக்கில் பின் தொடரும் ஓநாயைக்கூட பொருட்படுத்தாமல் ஒருவகை ஆனந்தத்தில் லயித்தபடி வரும்.
“கவுபி பீன்ஸ்” என்ற போதை தரும் தாவரத்தையும் ஆடுமாடுகள் விடுவதில்லை. காட்டுக்குள் அவை வளரும் இடங்களை தேடிப்பிடித்து சாப்பிட்டு போதை ஏற்றிக்கொள்ளும்.

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவிகள் “எனகசியா” என்ற ஒருவகை மரத்தை சுற்றி வந்து மகிழ்கிறது. காட்டில் எந்த மூலையில் இந்த மரம் இருந்தாலும் சிட்டுக் குருவிகளின் கூட்டம் அந்த மரத்தை முற்றுகையிட்டிருக்கும். அங்கே தான் கூடு கட்டும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இரை தேடும். காரணம் அந்த மரத்திலிருந்து கிடைக்கும் ஒருவகை இனிய ரசம். குருவிகள் அதை உண்டு போதையில் தலைகால் புரியாமல் கத்திக் கொண்டிருக்கும்.
இப்படி போதைக்கு சுயமாகவே அடிமையாகும் மிருகங்கள், பறவைகள் ஒருபுறம். மறுபுறம், மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக பல மிருகங்களை போதைக்கு வலுக்கட்டாயமாக அடிமையாக்குகிறார்கள். தங்கள் பிழைப்பிற்காக வாங்கும் குரங்குகளும், குதிரைகளும் தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக அவற்றை போதைக்கு அடிமையாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...