ஸ்ரீ காயத்ரி மந்திரம்
ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
காயத்ரி மந்திரம்:-
"ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"
"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.
நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment