Wednesday, March 6, 2019

கீதை காட்டும் பாதை

கீதையை நன்கு புரிந்து கொள்ள விரும்பினாள் ஒரு மஹாராணி.

எத்தனை ஸ்லோகங்கள் என்று கீதையில் பாண்டித்யமுள்ள ஒரு பண்டிதரை வரவழைத்துக் கேட்டாள்.

எழுநூறு ஸ்லோகங்கள் என்றார் அவர்.

தனாதிகாரியை வரவழைத்த மஹாராணி, “700 பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள். கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் நம் பண்டிதர் சொல்லச் சொல்ல அவருக்கு ஒரு பொற்காசு தர வேண்டும். ஆக எழுநூறு ஸ்லோகங்களுக்கு எழுநூறு பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள்” என்றார்.

பண்டிதருக்கு மஹா ஆனந்தம். 700 பொற்காசுகளா?

வீடு சென்ற அவர் ஏராளமான நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

மஹாராணிக்கு விளக்க வேண்டுமே?
மறுநாள் சபை ஆரம்பமானது.

700 பொற்காசுகள் குவியலாக இருக்க பண்டிதரின் கண்கள் அதை நோட்டம் விட்டன.

‘கடவுளே! மஹாராணிக்கு கீதையைப் புரிந்து கொள்ள அருள் செய்வாயாக! கண்ணபிரானே நீயே துணை.’

கம்பீரமாக முதல் ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.

‘தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’

மஹாராணிக்குக் கண்களில் நீர் வழிந்தது.

“நிறுத்துங்கள்!” என்று பண்டிதரை நோக்கிக் கூவினாள்.

பண்டிதர் திடுக்கிட்டார்.

மஹாராணி மந்திரியை அழைத்துப் பல்லக்கைத் தயார் செய்யுங்கள், கிளம்பலாம் என்றார்.

‘அட 700 காசுகளும் போச்சே’ என்று பண்டிதர் வருந்தினார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணியாரே! இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லையே” என்று இழுத்தார்.

“அட என்ன அற்புதமான விளக்கம்; நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன், கீதா தாத்பர்யத்தை. இதோ, இந்தாருங்கள் 700 பொற்காசுகள்; ஒரு கணமும் இனி தாமதிக்க மாட்டேன்; இதோ நீங்கள் கூறியபடியே செய்யப் போகிறேன்.”

மஹாராணி இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவருக்குத் தலை சுற்றியது.

“நான் என்ன விளக்கினேன்?” அழாக் குறையாக அவர் கேட்டார்.

அது தான் அழகாகச் சொல்லி விட்டீர்களே; கீதா தாத்பர்யத்தை! தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே –

அதை எப்படிப் பிரிக்க வேண்டும்? ‘க்ஷேத்ரே க்ஷேத்ரே தர்மம் குரு!’ என்று.

க்ஷேத்ரே க்ஷேத்ரே -க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகச் சென்று அதாவது ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று- தர்மம் குரு – தர்மத்தைச் செய்- அதாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். அது தானே கீதை காட்டும் பாதை! கீதையின் போதனை! இதோ தர்மம் செய்யக் கிளம்பி விட்டேன்” என்றாள் ராணி.

பண்டிதர் தன் ஆயுளிலும் அறியாத ஒரு பெரிய உபதேசத்தை கால் ஸ்லோகத்தில் – முதல் நான்கு வார்த்தைகளிலேயே – ராணி அறிந்து விட்டாரே என்று மகிழ்ந்தார்.

இத்தனை நாள் படித்தும் தமக்கு கீதா போதனை ஏறவில்லையே என்று வருந்தினார்.

‘மஹாராணியாரே! உங்களிடமிருந்து கீதா பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் பொற்காசுகளை என் சார்பாக நீங்களே தர்மத்திற்குச் செலவிடுங்கள்; இதோ உலகைத் துறக்கிறேன். என் வழியில் போகிறேன்’  என்று சொல்லி விட்டுத் தவம் புரியச் சென்றார்;பின்னர் பெரும் மஹான் ஆனார்.

கண்ணன் அருளிய கீதையின் முதல் ஸ்லோகத்தின் கால் ஸ்லோகம் பார்த்தாலும் கூட நாடு முழுவதும் தர்மம் பெருகும்; தழைக்கும்!

கீதை காட்டும் பாதையை முழுவதுமாகப் படித்து அறிவோம்; உயர்வோம

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...