Friday, March 8, 2019

பிரித்விராஜன்

கிபி 1191ம் ஆண்டு , பாரதத்தின் மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது

ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைப்பற்றிய பின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர் கொண்டான் பிரித்விராஜன்

மிகக் கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிகப் பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை

ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துப் பிடித்தான் பிரித்வி

அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்ப்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி

அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்

இம்முறை வலுவான குதிரைப் படையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைப்படை  வலுவாக இருந்தது என்பதால் அரபுக் குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி

இம்முறை கோரியினை விடவேக் கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களைத் திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்

ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவச் சென்றவர்களையும் தடுத்தான். ஆயினும் களம் கண்டான் பிரித்வி

உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களைச் செய்தான் ஜெயசந்திரன்

தன் இரு பெரும் எதிரிகளைத் தனியாக சந்தித்தான் பிரித்வி,

போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினைக் கோரியினால் வெல்ல முடியவில்லை. ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்குப் பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது

யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமானப் போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினைப் பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டான் பிரித்வி.

கடந்த முறை தனக்கு உயிர்ப்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களைக் குருடாக்கினான் கோரி.

எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள். அவளோடு பல பெண்கள் செத்தனர்.

டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களைப் போல கொள்ளை அடித்து விட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனைத் தன் பிரதிநிதியாக அமர்த்தினான்.

அத்தோடு மிக முக்கியமான காரியத்தைங் செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனைக் கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கப்படி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும்.

ஜெயசந்திரன் கணக்கு இது தான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான்.

குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது.

பைபிளில் சாம்சன் எனும் மாவீரனை மொட்டை அடித்து பிலிஸ்தியர் கண்களைக் குருடாக்கி கட்டிப் போட்டு வித்தை காட்டினர் அல்லவா?

அதே காட்சிகள்.

பலசாலி அகப்பட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனைத் தடுமாற வைத்து ரசித்துப் பழி வாங்கும் கொடூர பழக்கம் அன்று இருந்திருக்கின்றது.

குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானப்படுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று.

"ஒரு நாள் நீ தான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் கோரி

தன்னால் ஒலி வரும் இலக்கினை துல்லியமாகத் தாக்க முடியும் என்றான் பிரித்வி

அரை போதையில் இருந்த கோரி,  அவன் கையில் வில்லைக் கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அது தான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டது தான் தாமதம்.

மிகச்  சரியாக கோரியின் மேல் அம்பைச் செலுத்தினான் பிரித்வி

ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிகச்  சரியாக அம்பு விட்டுக் கொன்றான் பிரித்வி.

அதன் பின்பு பிரித்வி கொல்லப்படுகின்றான், அவனுக்கு வயது 24

24 வயதிற்குள் மங்காப் புகழ் பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே.

இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும். ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டான் மாவீரன் பிரித்வி. அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழி தீர்த்த நுட்பமும் மங்கா காவியப் பாடல்களாயின.

இன்றும் வட இந்தியாவின் கிராமியப் பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு.

ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகணைக்குச் சூட்டியது

ஆம் இந்தியா தன் ஏவுகணைக்கு "பிரித்வி " என‌ அவன் பெயரையே சூட்டியது

இதைக் கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகணை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு "கோரி" எனப் பெயரிட்டு வைத்திருக்கின்றது

900 ஆண்டுகளைக் கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகணைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்

நிச்சயம் பிரித்வி இனி தோற்க மாட்டான், காரணம் அன்று அவனுக்குத் துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது.

பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது.

அதில் பிரித்விராஜன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...