Friday, March 8, 2019

திருமூலர் திருமந்திரம்

“தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”
-------திருமூலர்------திருமந்திரம்--------

வாழ்க்கை மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது

ஒன்று : நினைத்தது நடக்கும்

இரண்டு : நினைத்தது நடக்காது

மூன்று : நினைக்காதது நடக்கும்

வாழ்க்கையில் எதிர்ப்படும் செயல்களை ,
வாழ்க்கையை கடந்து செல்லும் நிகழ்வுகளை,
வாழ்க்கையை பதம் பார்த்து விட்டு செல்லும் நினைவுகளை ,வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற வடுக்களை ,
வாழ்க்கையை கண்ணீர் கடலில் மூழ்க வைத்த இழப்புகளை ,
வாழ்க்கையை வெறுக்க வைத்த துயரங்களை ,
வாழ்க்கையை முன்னேற விடாமல் தடுத்த தடைக்கற்களை ,
வாழ்க்கையை நெருப்பாற்றில் நீந்த வைத்த துன்பங்களை ,
காலம் நம் வாழ்க்கையை ஆட்டு வித்த சோகத்தின் சின்னங்களை ,
மட்டும் நினைவு கூர்வது மட்டுமில்லாமல் ,
மதிப்பின் உயர்வுகளை ;
உயர்வுகளின் அதிகாரங்களை ;
அதிகாரங்களின் அரியணைகளை ;
அரியணைகளின் அரசாட்சிகளை ;
அரசாட்சிகளின் ஆளுமைகளை ;
ஆளுமைகளின் இன்பங்களை ;
இன்பங்களின் சுவைகளை ;
சுவைகளின் மகிழ்வுகளை ;
மகிழ்வுகளின் நினைவுகளை ;
நினைவுகளின் அர்த்தங்களை ;
உணர்ந்து கொள்வோமாகில்
சிந்தித்து சீர் துாக்கி பார்ப்போமாகில்
வாழ்க்கையில் சோகத்தின் ஆட்டங்கள் மட்டுமல்ல
இன்பத்தின் களியாட்டங்களும் நடை பெற்று இருப்பதை
உணர்ந்துகொள்ள முடியும் .

இன்னும் வாழ்க்கையை
நன்றாக ஆராய்ந்து பார்த்தோமாகில்
வாழ்க்கை மூன்று நிலைகளில்
இயங்கிக் கொண்டிருப்பதை ,
நடந்து கொண்டிருப்பதை ,
சுழன்று கொண்டிருப்பதை ,
உணர்ந்து கொள்ள முடியும் .

மற்ற அனைத்து நிகழ்வுகளும்
இந்த மூன்றுக்குள் தான் அடங்கும் .

ஒன்று : நினைத்தது நடக்கும்
******************************

நாம் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் .

மருத்துவம் படிப்பதற்கான சீட்டும் கிடைத்து
மருத்துவம் படித்து மருத்துவராகி விடுகிறோம் .

இது நினைத்தது நடப்பது .

இரண்டு: நினைத்தது நடக்காதது
*********************************

நாம் அயல்நாடு சென்று
மருத்துவ பணி புரிய ஆசைப்படுகிறோம் .

அதற்காக முயற்சி செய்கிறோம் .

ஆனால் , நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும்
நாம் வெளிநாடு சென்று மருத்துவ பணி
புரிவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை ;
அந்த நிகழ்வு நடக்கவில்லை ;
இது நினைத்தது நடக்காதது .

மூன்று: நினைக்காதது நடப்பது
*******************************

நான் இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறோம் ;
நிதானமாக செல்கிறோம் ;
சாலை விதிகளை கடை பிடித்து பயணிக்கிறோம் ;
அளவான வேகத்தோடு நிதானமாக கவனமாக செல்கிறோம் ;
ஆனால் லாரி ஒன்று நம் வாகனத்தில் மோதியதால்
வண்டியும் , நாமும் விபத்துக்குள்ளாகிறோம் .

அடிபபட்டு காலில் கட்டு போட்டு
எழுந்திருக்க முடியாமல் ,
நடக்க முடியாமல் ,
படுக்கையில் படுத்திருக்கிறோம் .

நம் அன்றாட கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள
இன்னொருவர் உதவியை நாடுகிறோம்
இயங்க முடியாமல் நம் கடமையை
செய்ய முடியாமல் தவிக்கிறோம் .

நான் நினைத்து கூட பார்க்கவில்லை
இதெல்லாம் நடக்கும் என்று
மற்றவருடைய உதவியை நாடி
என் அன்றாட கடமைகளை முடிப்பேன் என்றும்
இது போன்ற ஒரு விபத்தில் சிக்கி
என் நிம்மதியை இழப்பேன் என்றும்
நான் நினைத்து கூட பார்க்கவில்லை
என்று புலம்புகிறோம்
இது நினைக்காதது நடப்பது .

வாழ்க்கை இந்த மூன்றுக்குள் தான் நடந்து கொண்டிருக்கிறது
நினைத்தது நடந்தால்
அது என் முயற்சியால் கிடைத்தது என்றும் ;
அது என் கடின உழைப்பால் கிடைத்தது என்றும் ;
நினைத்தது நடப்பதற்கு
முயற்சி என்று பெயரிடுகிறோம் .

நினைத்தது நடக்க வில்லை எனில்
எவ்வளவு முயற்சி செய்தேன்
எவ்வளவு கஷ்டப் பட்டேன்
எவ்வளவு உழைத்தேன்
நான் விருப்பப்பட்டது கிடைக்கவில்லையே
எல்லாம் என் தலைவிதி என்று
விதியின் பெயரால்
நினைத்தது நடக்காததை
விதி என்று
பெயரிட்டு அழைக்கிறோம் .

நினைக்காதது நடந்தால்
அது நல்லதாக இருந்தால்
அதிர்ஷ்டம் என்றும் ,
அது கெட்டதாக இருந்தால்
துரதிர்ஷ்டம் என்றும் ,
பெயரிட்டு அழைக்கிறோம் .

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை
மூன்று வெவ்வேறு பெயர்களில்
முயற்சி ,
விதி ,
அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம்
என்ற பெயர்களில் அழைக்கிறோம் .

நடக்கும் நிகழ்வுகளை நமக்கு ஏற்ற வகையில்
நமக்கு பொருந்தும் வகையில்
பெயரிட்டு அழைத்துக் கொள்கிறோம் .

நடக்கும் நிகழ்வு ஒன்று தான்
அதை நம்முடைய வசதிக்கு
ஏற்ற வகையில்
பெயரிட்டு அழைத்துக் கொள்கிறோம் .

நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது ;
நிகழ வேண்டியது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ;
மலர வேண்டியது மலர்ந்து கொண்டே இருக்கிறது ;
நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடக்க வேண்டிய நேரத்தில்
நடந்து கொண்டே இருக்கிறது .

நடப்பது ஒன்று தான் ;

நிகழும் நிகழ்வும் ஒன்று தான் ;

செயல்படும் செயலும் ஒன்று தான் ;

அதை நாம் புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் ,
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை
நமக்கு ஏற்றவாறு பெயரிட்டு அழைத்து
சந்தோஷப் பட்டுக் கொள்கிறோம்
அல்லது
துக்கப்பட்டுக் கொள்கிறோம் .

நாம் மருத்துவராக வர வேண்டும்
என்று இருக்கிறது ,
அதை நினைத்ததால் நடந்து விட்டது என்கிறோம் .

நாம் வெளிநாடுசென்று மருத்துவ பணி ஆற்றும் நிகழ்வு
நம் வாழ்க்கையில் இல்லை
அதை நாம் நினைத்தது நடக்க வில்லை என்கிறோம் .

நாம் நினைக்காதது
அதிர்ஷ்டமாகவோ , துரதிர்ஷ்டமாகவோ வருகிறது
நாம் நினைக்கவில்லை நடந்தது என்கிறோம்.

வாழ்க்கையின் தத்துவத்தை ,
பிரபஞ்ச ரகசியத்தை ,
மறைபொருளின் சூட்சுமத்தை ,
கர்மவினையின் தாக்கத்தை ,
புரிந்து கொண்டால்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்வை புரிந்து கொள்ள முடியும் .

ஆறு ஓடுகிறது
ஆற்றத்தின் ஓட்டத்திலேயே பயணம் செய்தால்
நாம் பயணிக்க முடியும்
இது நாம் நினைத்தது நடப்பது .

ஆற்றின் ஓட்டத்திற்கு எதிர் திசையில்
பயணிப்பது என்பது பயணத்தின்
குறிக்கோள் நிறைவடையாது
இது நாம் நினைத்தது நடக்காதது .

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவிக்கப்பட்டு
அதை பயன்படுத்தி நாம் பயணத்தை மேற்கொண்டால்
அது நினைக்காதது நடப்பது .

நாம் நினைத்தது நடக்கிறது என்றால்
நாம் நினைத்த அனைத்தும் நடந்திருக்க வேண்டும் ;
நாம் நினைத்தது நடக்க வில்லை என்றால்
நாம் நினைத்த அனைத்தும் நடவாது இருந்திருக்க வேண்டும்;
நாம் நினைக்காதது நடந்தது என்றால்
தொடர்ந்து அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ நடந்து
இருக்க வேண்டும் .

ஆனால் ,

நாம் நினைப்பது சில சமயங்களில் நடக்கிறது ;
நாம் நினைப்பது சில சமயங்களில் நடப்பதில்லை ;
நாம் நினைக்காதது சில சமயங்களில்
அதிர்ஷ்டமாகவோ அல்லது துரதிர்ஷ்டமாகவோ நடக்கிறது .

இதலிருந்து ஒன்றை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்
அவ்வாறு நாம் யோசித்துப் பார்த்தோமாகில்
ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது
அதை நாம் புரிந்து கொள்ளாமல்
நாம் வாழ்க்கையில் தடுமாறுகிறோம்
தள்ளாடுகிறோம் .

அந்த ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்
மனம் தெளிவு பெற வேண்டும் என்றால்
உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் ;
இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் ;
இறைவனுடன் நெருங்கி இருக்க வேண்டும் ;
இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் ;
பிறப்பு - இறப்பு சுழற்சி நடப்பது என்பது
கர்ம வினையின் அழுத்தத்தை பொறுத்தது
கர்மவினை இல்லை என்றால் பிறப்பு இறப்பு இல்லை .

கர்மவினை இருக்கும் வரைக்கும் பிறப்பு இறப்பு இருக்கும்
கர்மவினை இல்லை என்றால் பிறப்பு இறப்பு இருக்காது .

கர்மவினையை
சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம்
என்று மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள் .

முன் வினை :

முன் செய்த வினை என்பது ,
பிறப்பதற்கு முன் செய்த வினை ஆகும் .

பிறப்பதற்கு முன் செய்த வினை
சஞ்சித கர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது .

சஞ்சித கர்மம்

சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர் முதல்
பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம்
கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள்
அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள்
சஞ்சித கர்மம் என்று அழைக்கப்படுகிறது .

பின் வினை:

பின் செய்த தீவினை என்றால்
பிறந்த பின் செய்த தீவினை என்று பொருள் .

பின் செய்த தீவனை என்பது பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம் ஆகிய
இரண்டு கர்ம வினைகள் ஆகும் .
பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள்
பிராரப்த கர்மம் என்று அழைக்கப்படுகிறது .

நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும்
செயல்களின் விளைவுப் பதிவு
தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை
நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப
ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை
பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம் .

ஆகாம்ய கர்மம்

ஆ என்றால் ஆன்மா என்று பொருள் .

காம்யம் என்றால் இச்சை என்று பொருள் .

ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது
ஆகாம்ய கர்மம் எனப்படும் .

சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் ஆகிய
இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய
செயல்களின் பதிவுகளால்
இனி என்ன செய்ய வேண்டும் என்று
துாண்டப்படும் எண்ணங்களும் , செயல்களும்
ஆகாம்ய கர்மம் எனப்படும் .

சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம்
இந்த மூன்றும் சேர்ந்த கர்மவினையே
முன் வினை , பின் வினை என்று
சொல்லப்படக் கூடிய இந்த இருவினையே
நம் பிறப்பு - இறப்பு சுழற்சியை உண்டு பண்ணுகிறது .

இந்த கர்ம வினையை கழித்து
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுத்து
இறைவனுடன் இரண்டறக் கலந்து
இறைவனை உணர வேண்டும் .

ஆன்மாவை அறிந்து ,
ஆன்மாவின் பேராற்றலை அறிந்து
அதில் உள்ள இருப்பு நிலையை அறிந்து ,
தன்னை உணர்ந்து
தன் தலைவனை உணர்ந்தவனால் மட்டுமே
முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்க முடியும் .

முன்னை வினை என்றால் ,
முன் வினை என்று பொருள் .

முன் வினை என்று அழைக்கப் படுவது சஞ்சித கர்மம் .

ஒரு அடி நீளமுள்ள கயிறுகள் 7 எடுத்துக் கொள்வோம் .
ஒவ்வொரு கயிறும்
ஒரு பிறவியாக கற்பனை செய்து கொள்வோம் .

ஒரு கயிறின் ஒரு முனை பிறப்பு என்றும் ,
மறுமுனை இறப்பு என்றும் முடிவு செய்து கொள்வோம் .

கயிறுகள் தனித்தனியாக இருக்கும் போது ,
எதை குறிப்பிடுகிறது என்றால்
ஒருவர் பிறக்கிறார் இறக்கிறார் என்பதைக் குறிக்கிறது .

இப்பொழுது 7 கயிறையும் முடிச்சு போட்டு இணைக்க வேண்டும்
எப்படி இணைக்க வேண்டும் என்றால் ,
ஒரு கயிறின் இறப்பு முனையுடன் மறு கயிறின்
பிறப்பு முனையுடன் இணைத்து முடிச்சு போட வேண்டும் .

இவ்வாறே 7 கயிறையும் ஒன்றாக இணைக்க வேண்டும்
இது எதைக் குறிப்பிடுகிறது என்றால்
பிறக்கிறோம் இறக்கிறோம் என்று தொடர்ச்சியாக
பிறவி பெருங்கடல் நீள்வதைக் குறிக்கிறது .

நாம் நான்காவது பிறவியில் இப்பொழுது இருக்கிறோம்
என்று முடிவு செய்து கொள்வோம் .

நான்காவது பிறவியுடன் நம் பிறவி முடிந்து விட வேண்டும்
என்று முடிவு செய்தால் ,
நான்காவது கயிறின் இறப்பு முனையுடன்
முடிச்சு போடப்பட்டிருக்கும்
ஐந்தாவது கயிறின் பிறப்பு முனையை அவிழ்த்து விட வேண்டும் .

இதனால் ஐந்தாவது ,ஆறாவது , ஏழாவது என்ற
பிறவிகள் ஏற்படாமல் தடுத்து விடலாம் .

தொடர்ச்சியாக பிறவிப் பெருங்கடல் நீள்வதற்கு காரணம்
மூன்று கர்மங்களில் சஞ்சித கர்மம் முக்கிய
பங்கு வகிக்கிறது .

சஞ்சித கர்மம் தான் பிறவிப் பெருங்கடல்
நீள்வதற்கு காரணம் என்பதை உணர்ந்தவர்கள்
சஞ்சித கர்மத்தை கரைப்பார்கள்
அழிப்பார்கள் .

முன்வினை என்று சொல்லப்படக்கூடிய
சஞ்சித கர்மத்தை கழித்து விட்டால்
கயிறின் தொடர்ச்சி அறுபட்ட காரணத்தால்
முடிச்சு அவிழ்க்கப்பட்ட காரணத்தால்
பிறப்பு இறப்பு சுழற்சி அறுபடுகிறது .

பிறப்பு இறப்பு சுழற்சி தடைபடுகிறது .

நீளமான ஒரே கயிராக இருக்கும் போது
கயிறில் தொடர்ச்சி இருக்கும்
முடிச்சை அவிழ்த்து விட்டால்
கயிற்றில் தொடர்ச்சி இருக்காது
அறுந்த கயிறாக இருக்கும் .

அதைப் போல நீளமான
நம் பிறப்பு இறப்பு தொடர்ச்சியில்
முடிச்சை அவிழ்த்தால் நம்முடைய
பிறப்பு இறப்பு சுழற்சி இருக்காது
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

சஞ்சித கர்மத்தை கழித்து விட்டாலும்
பின்வினை என்று சொல்லப்படக்கூடிய
பிராரப்த கர்மத்தால் , ஆகாம்ய கர்மத்தால்
மீண்டும் பிறப்பு இறப்பு நடைபெற வாய்ப்பு உண்டு .

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்
அதனால் பின் வினை ஆராயப்பட வேண்டும்
பிராரப்த கர்மம் மற்றும்
ஆகாம்ய கர்மம் உணரப் பட வேண்டும் .

களிமண்ணால் செய்யப்பட்ட
ஒரு உருவத்தை எடுத்துக் கொள்வோம் .

அது உருவமாக இருக்கும் வரை தான் உருவம்
அதில் சிறிது தண்ணீர் கலந்து பிசைந்து விட்டால
உருவம் இல்லாமல் போய் விடும் .

ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருமாறி விடும் .

அதைப்போல பிராரப்த கர்மத்தையும்
ஆகாம்ய கர்மத்தையும் கழித்து விட்டால்
அழித்து விட்டால் பிறப்பு இறப்பு சுழற்சியை
நிறுத்தி விடலாம் .

ஆக சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம்
கொண்ட இருவினைகளை
அழிப்பதன் மூலம் ; கரைப்பதன் மூலம் ;
பிறப்பு இறப்பு சுழற்சியை நிறுத்தி விடலாம் .

பிறப்பு இறப்பு சுழற்சியை அறுத்து
இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் .

இந்த நிலையை
எல்லோராலும் அடைய முடியாது
உண்மையை உணர முடியாது .

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்
குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறு ஆதாரங்களைத் துளைத்து
ஆறு ஆதாரங்களின் சக்தியைப் பெற்று
ஆறு ஆதாரங்களைக் கடந்து
ஓன்பது வாசலை அடைத்து
பத்தாவது வாசலை திறந்து
சக்தியை சிவனுடன் சேர்க்க வேண்டும்
அமிர்தம் பருக வேண்டும்
இறைவனுடன் கலக்க வேண்டும் .

இந்த நிலை அடைந்தால் மட்டுமே
உண்மையை உணர முடியும்
வாழ்க்கையில் என்ன நடக்கிறது
என்பதில் தெளிவு பெற முடியும் .

வாழ்க்கையில் நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடந்து கொண்டிருக்கிறது .
அதை நாம் பல்வேறு கோணங்களில் பார்க்கிறோம்
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் .

நடந்து கொண்டிருக்கும் உண்மையின் சூட்சுமத்திற்கு
முயற்சி , விதி , அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம்
என்று பெயரிட்டு அழைக்கிறோம் என்பது புரியும் .

இல்லை என்றால்
நடக்கும் உண்மை புரியாவிட்டால்
நடக்கும் நிகழ்வுகளுக்கு
நாம் வெவ்வேறு பெயரிட்டு அழைத்து
கொண்டு தான் இருப்போம் .

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் அர்;த்தம்
நமக்கு தெரிய வேண்டும் என்றால்
உண்மையை உணர வேண்டும் ;
உண்மையை உணராதவர்களுக்கு வாழ்க்கையில்
நடக்கும் நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தெரியாது.

உண்மையை உணர்ந்தவர்களுக்கு
இறைவனை உணர்ந்தவர்களுக்கு
இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்களுக்கு
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அர்த்தம் தெரியும்
பிரபஞ்ச ரகசியம் வெளிப்படும்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...