Sunday, June 2, 2019

துறவும் தாய்மையும்

நம் இந்தியக் கலாசாரத்தில் அன்னைக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்தக் கலாசாரத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்தியக் கலாசார மரபின் சிறப்பு என்னவென்றால், ஒரு மனிதன் இந்த உலகின் எல்லா விஷயங்களிலிருந்தும் துறவு மேற்கொண்டாலும்கூட, தாயிடமிருந்து துறவு என்பது இல்லை என்பதே.

இதை இந்திய ஆன்மிக வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இருவர் இதை நிலைநிறுத்திவிட்டுப் போனார்கள்.

ஒருவர்  ஆதி சங்கரர், மற்றொருவர்  பட்டினத்து அடிகள்..

ஆதி சங்கரர் சிருங்கேரியில் இருக்கும்போது, தனது அன்னைக்கு காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாகக் காலடி திரும்புகிறார். அங்கிருந்த பழமைவாதிகள் சங்கரருக்கு அவருடைய வீட்டுக்குள்ளே நுழைவதற்கான அனுமதியை மறுக்கிறார்கள்.

ஆனால், தாயோடு ஓர் உயிருக்கு ஏற்பட்ட உறவு, துறவினால் அழிக்க முடியாதது என்று கூறி ஆதி சங்கரர் தன்னுடைய காவி உடையை நீக்கிவிட்டு, அன்னைக்குப் பணிவிடை செய்கிறார்.

பிரம்மத்தை உணர்ந்த ஞானி தன்னுடைய மகன் என்பதை உணர்ந்திருந்த அந்த அன்னை ஆர்யாம்பாள், ஆதி சங்கரரிடம் தனக்கு பிரம்ம ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று உயிர் பிரியும் தருவாயில் கேட்கிறாள்.

உடனே சிவ புஜங்கம் மற்றும் விஷ்ணு புஜங்கம் ஆகிய ஸ்லோகங்களை ஆதி சங்கரர் பாடுகிறார். அதைக் கேட்டுக் கொண்டே அந்தத் தாயின் உயிர் பிரிகிறது.

எல்லா உணர்ச்சிகளையும் கடந்திருக்க வேண்டிய ஞானியாகிய ஆதி சங்கரர் அந்த ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி, அன்னையின் சிதைக்குத் தீ மூட்டி 5 ஸ்லோகங்களைப் பாடுகிறார்.

அவைதான் உலகப் புகழ் பெற்ற மாத்ரு பஞ்சகம் ஆகும். அந்த 5 ஸ்லோகங்களின் பொருள் பின் வருமாறு:

(1) தடுக்க முடியாத பிரசவ வேதனை ஒருபுறம் இருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருட காலம் மல மூத்திரம் நிறைந்த படுக்கை ஆகியவற்றோடு கூடிய கர்ப்ப காலத்தில் ஓர் அன்னை படும் துயரத்தையும், பாரத்தையும் கொஞ்சமாவது தீர்க்க முடியாதவன் ஆகி விடுகிறானே பிள்ளை என்பவன். தனக்காக அந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.

(2) தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலத்துக்கு வந்து, கனவில் நான் சன்யாசம் பூண்டதாகக் கண்டு உரக்க அழுதாயே, அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படிப்பட்ட உன்னை உனது கால்களில் விழுந்து வணங்குகிறேன்.

(3) தாயே, மரிக்கும் தருணத்தில் தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. மரித்த தினத்தில் சிரார்த்தம் கொடுக்க முடியாமல் இருந்தது. உன் மரண வேளையில் தாரக மந்திரம் கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என் மீது இணையற்ற தயை காட்ட வேண்டும், தாயே.

(4) என் முத்தல்லவா, என் கண்கள் அல்லவா, என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே. அத்தகைய வாயில், சாரம் இல்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன்.

(5) அன்று பிரசவ காலத்தில் அம்மா, அப்பா, சிவா என்று உரக்கக் கத்தினாய் அல்லவா, தாயே, இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.

மேற்கண்ட பொருள் கொண்ட மாத்ரு பஞ்சகம் ஆதி சங்கரர் போன்ற ஒரு துறவியின் மனதுக்குள் இருந்தும், தாய்ப் பாசத்தை மீட்டெடுக்கச் செய்த பாடல்கள் ஆகும்.

கேரளத்தில் ஓர் ஆதி சங்கரர் போலவே, தமிழகத்தில் பட்டினத்தாரும் தன்னுடைய துறவுக் கோலத்தைத் துறந்து தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விடுகிறார்.
இவ்வுலக வாழ்க்கையில் எதிலும் சாரம் இல்லை என்றும், அணிந்திருந்த அரை வேட்டி உள்பட எல்லாப் பந்தங்களும் சுமையாகப் போய்விட்டன என்றும் பற்றற்ற நிலையில் பாடிய பட்டினத்தாருக்கும் தனது தாயின் மரணம் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது.

அப்போது அவர் பாடிய 10 பாடல்கள் கேட்பவர் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டவை. அதில் ஒரு பாடல்..

"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை
தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி"

என்று பட்டினத்தார் பாடுகிறார்.

ஆதி சங்கரருக்கு ஆறாம் நூற்றாண்டிலும், பட்டினத்து அடிகளுக்கு பத்தாம் நூற்றாண்டிலும் ஏற்பட்ட அதே துயரம், இன்னொரு துறவிக்கும் ஏற்படுகிறது.

1900-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுவாமி விவேகானந்தர் தனது தாயிடம் சிறிது காலம் போய் இருக்க விழைகிறார். அப்போது ஆதி சங்கரரை நினைவில் கொண்டு சுவாமி விவேகானந்தர் கூறினார்:

1884-இல் என் தாயாரை நான் விட்டு வந்தது பெரும் துறவு. இப்போது திரும்பவும் என் தாயாரிடம் போவது அதை விடப் பெரிய துறவு என்று எனக்கு இப்போது காட்டப்படுகிறது. ஒரு வேளை அன்று ஆதி சங்கரருக்கு எந்த அனுபவத்தைக் கொடுத்தாளோ அதே அனுபவத்தை நானும் பெற வேண்டும் என்று தேவி விரும்புகிறாள் போலும்.

எனவே, நமது நாட்டைப் பொருத்த அளவில் ஆதி சங்கரர், பட்டினத்து அடிகள், சுவாமி விவேகானந்தர் போன்ற பிள்ளைகள் பிறக்கும் நாள் எல்லாம் அன்னையரை போற்றும் நாளாக அமையும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...