Monday, July 15, 2019

கவிஞர் கண்ணதாசனின் தத்துவ வரிகள்!

ஆறு மனமே ஆறு;
அந்த ஆண்டவன் கட்டளை     ஆறு:
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு,
தெய்வத்தின் கட்டளை ஆறு.

1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி;
(பேச்சு மாறாமல் ஒன்றையே பேசுபவர், அந்த பேச்சின்படி நடப்பவர் உள்ளத்தில் எப்பொழுதும் அமைதி நிறைந்திருக்கும்.)

2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி.
(இன்பமாக இருக்க வேண்டிய சமயத்தில் துன்பம் நேரிடுவதும்,
துன்பம் ஏற்பட்ட சமயத்தில் அந்த இடற் களைந்து இன்பம் ஏற்படுவதும் இறைவன் வகுத்த நியதி.)

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்;
வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்.
(சொன்னச் சொல் மாறாமல் சொல்லின்படியே செய்கையும் கடைப்பிடிப்பது பொன் போன்றதாகும்.
அவ்வாறு இருந்தால், வந்தடையும் இன்பத்தில் துன்பம் மறைந்துப் போய்விடும்.)

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்.

3. உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்;
(உண்மை பேசி நல்லவைகளை செய்தால் இந்த உலகத்தார் உனக்கு மதிப்பளிப்பார்கள்.)

4. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
(உயர்ந்த நிலையை அடையும் போது அகந்தை இல்லாமல் எவரிடத்திலும் பணிவுடன் நடந்து கொண்டால் மற்ற உயிரினங்கள் கூட உன்னை வணங்கும்.)

உண்மை என்பது அன்பாகும்;
பெரும் பணிவு என்பது பண்பாகும்.
(உண்மை என்பது கள்ளமில்லாத அன்பிலிருந்து பிறக்கக் கூடியது. பணிவு என்பது அன்பிலிருந்து பிறக்கும் பண்பு ஆகும்.)

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

5.  ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்;
(பேராசை, கடுங்கோபம், களவு இந்த மூன்று குணங்களும் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் ஆவான்.)

6.  அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்.
(அன்புடைமை, நன்றியுடைமை, கருணையுடைமை என்ற மூன்று குணங்களும் கொண்டவன் மனித உருவில் வாழும் தெய்வம் ஆவான்.)

இதில் மிருகம் என்பது கள்ள மனம்;
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்.
(இதில், கள்ள மனம் கொண்டவன் மிருக குணம் உடையவனாவான்.
குழந்தை மனம் கொண்டவன் உயர்ந்த தெய்வ குணம் உடையவனாவான்.)

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...