Thursday, July 18, 2019

பொடி தோசை

சென்னையிலிருந்து விடிகாலை 1:00 மணிக்கு கிளம்பிய எமிரேட்ஸ் ஃப்ளைட் அதில் நான்.. துபாய் சென்று அங்கிருந்து நியூயார்கிற்கு இன்னொரு ஃப்ளைட் சேஞ்ச் செய்து செல்லவேண்டும்.

அம்மாவின் காரியங்கள் எல்லாம் ஆயிற்று. இந்தியாவுக்கும் எனக்குமான ஒரே இழை அம்மாதான். திடீரென்று என்னவெல்லாமோ நடந்தது. அடித்துப் பிடித்து வந்து.. இந்த இருபது நாட்களில் எல்லாம் முடிந்தேவிட்டது.

போர்டிங் பாஸை செக் செய்தேன் .. மனைவிதான் எனக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தாள். அவள் போன வாரமே கிளம்பிவிட்டாள். என் பெண்களுக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ்! புக் பண்ணும்போது மீல்ஸ் Indian vegetarian meal என்று செலக்ட் செய்து இருந்தது. அதை ரசித்துச் சாப்பிடுவேனா என்று தெரியாது.. ஆனாலும் நீண்ட பயணம், எதையாவது சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்!

ஏனோ அம்மாவின் பொடி தோசை நினைவுக்கு வந்தது. அவளிருந்தால் கையில் கட்டிக் கொடுத்திருப்பாள். எத்தனை தடவைகள் சலிக்காமல், அலுக்காமல்...

கோடை விடுமுறையில் அருகில் சொந்தக்காரர்கள் ஊருக்குச் செல்வதானாலும், ஸ்கூலில் எஸ்கர்ஷன் அது இது என்றாலும், இப்படி இந்த பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று தெரியாது.. ஆனால் நான் வெளியூர் சென்றாலே என் அம்மாவின் கைகளால் மெல்லிசாக வார்க்கப்பட்ட தோசை, அதன் மேல் சரியான அளவு தூவப்பட்ட இட்லி மிளகாய்ப் பொடி, சரியான அளவு எண்ணெய் விட்டு.. ஓரு இன்டோலியம் டிஃபன் பாக்ஸில் வைத்து என்கூடவே பயணித்து வரும் அந்த பொடித் தோசை!

அம்மாவின் பொடித்தோசையில் அம்மாவின் மணம் இருக்கும், அதைப் பிரித்தால் அம்மாவே நேரில் வந்த மாதிரி ஒரு சுகம்.

கல்லூரியில் சேர்ந்த பின்பு, அம்மாவின் பொடி தோசை இன்டோலியம் பாக்ஸிலிருந்து வாழை இலை, நியூஸ் பேப்பர் வைத்துக் கட்டிய பொட்டலமாகியது. யூஸ் அண்ட் த்ரோ! படிப்பை முடித்து, முதல் பணியிடத்தில் செல்லும் ட்ராவல்களிலும் அம்மாவின் பொடி தோசைப் பொட்டலமும் என்னுடனே சேர்ந்து பயணிக்கும். அதை எடுத்துச் செல்வதால் சாப்பாட்டுக் காசு மிச்சம்.. வீட்டுத் தோசை என்பதால்.. அதை சந்தோஷமாக கையில் எடுத்துச் செல்வேன்.

பின்னர் அடுத்த கம்பெனியில் பதவி உயர்வு கூடவே ஆபீஸ் நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை, ட்ரெயினில் வரும் விதவிதமான உணவு வகைகளால் கவரப்பட்டும் அம்மாவின் பொடி தோசையின் மீது இருந்த ஆசை குறைந்து போயிருந்தது.

ஆனாலும் அம்மா நான் எத்தனை மணிக்குக் கிளம்பினாலும், தன் பங்கிற்கு வழக்கம்போல் இரண்டு பொடி தோசைகளை வாழை இலையில் வைத்து மேலே நியூஸ் பேப்பர் சுற்றி பாந்தமாக கட்டித் தருவாள்.

சில சமயங்கள் பயணத்தின் போது சாப்பிடாமல், வீட்டில் சாப்பிடலாம் என நினைத்து மறந்து போய் எவ்வளவு தரம் அவற்றைக் குப்பையில் வீசியிருப்பேன்?

அவ்வளவு ஏன், பல சமயம் ஏர்போர்ட்டில் உள்ள ட்ராஷிலும் வீசி எறிந்திருக்கேன்.

ஃப்ளைட் துபாயில் இறங்கியது. அங்கிருந்து நெடுந்தூரம் நடந்து, கனெக்‌ஷன் டெர்மினலுக்கு வந்து, ரெஸ்ட்ரூம் சென்று, முகம் கழுவியபோது முகத்தில் தாடியும் மீசையும் வளரத் துவங்கி இருந்தது. அம்மாவுக்காக மழித்தது.. அது ஒன்றைத்தான் நான் அம்மாவிற்குக் கொடுத்தேன் போலத் தோன்றியது.

அப்படியென்றால் அவள் செய்த அனைத்திற்கும்.. சிறு விஷயம், அவள் கட்டித் தந்த பொடித் தோசைக்குக்கூட பதிலாக நான் எதுவும் செய்யவில்லையே? ஏதோ தொண்டைக்குழியில் அடைத்தது. துக்கமா? அம்மாவின் நினைவா? தெரியவில்லை!

நியூயார்க் ஃப்ளைட்டிற்கு போர்டிங் அழைப்புவர, animated-ஆக சென்று அமர்ந்தேன். அசதியும், அம்மாவின் எண்ணங்களும் என்னை அப்படியே உறக்கத்தில் தள்ளியது..

தூக்கத்தில் ஒரு கனவு, அந்தக் கனவில் நான் ஒரு வெறியோடு ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகக் கவிழ்த்து, என் அம்மாவின் பொடி தோசைப் பொட்டலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய துரோகமாக விஸ்வரூபம் எடுத்த அந்தப் பொட்டலங்கள் ஏனோ கண்ணில் படவேயில்லை.

நான் விடாமல் அந்த பொடித் தோசைகளை ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகத் தேடிக் கொண்டிருந்த போது.. ஒரு உயரமான ட்ராஷ் கன்டெய்னர் கண்ணில் பட்டது. அதிலும் அம்மாவின் பொடி தோசையை விட்டெறிந்திருக்கிறேன். அந்த ட்ராஷ் கன்டெய்னர் மீது ஏறி உள்ளே குதித்தபோது அதற்கு அடிப்பகுதியே இல்லாமல்.. எங்கோ கீழே பாதாளத்தில்... நான் அதில் தலைகீழாய் விழுந்து கொண்டிருந்தேன். “Excuse me.. Sir.." என்ற குரல் கேட்டு கண் விழித்தேன்.

“Your breakfast!" பணிப்பெண் கனிவான குரலுடன்..

"Oh! Thank you!" என்றேன்..

என்ன ஒரு பயங்கரமான கனவு? அம்மா என்னை மன்னிப்பாயா? தெரியாமல் செய்த தவறு.. உடல் வீக்கானதுபோல் உணர்ந்தேன். எதுவுமே சாப்பிடவில்லை என்பது புரிந்தது..

எதிரே இருந்த Breakfast.. தட்டை பிரித்தால் உள்ளே சிரித்தது பொடி தோசை வித் மசாலா! நான் என் நிலை மறந்து கேவி கேவி அழ ஆரம்பித்தேன்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...