Sunday, January 22, 2023

முதலில் தாயார் பிறகு பெருமாள் ஏன்?

|| கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன் ||

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்.

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ஸ்ரீராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.

அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ஸ்ரீராமபிரானை தரிசித்த பிறகு, சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.

சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியைபார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ஸ்ரீராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 

ஸ்ரீராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.

ஸ்ரீராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 

ஸ்ரீராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.

ஸ்ரீராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.

பராக்ரமசாலியே ! ஸ்ரீராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ஸ்ரீராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.

சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை. இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன் 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன், என்றாள் சீதாதேவி.

பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.

தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.

ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.

தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே ' என்று கோபப்படுவார்.

தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.

மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.

'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.

"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.

நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன ' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே!

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'.
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருளாலே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...