Saturday, January 13, 2018

பீஷ்மர் கூறிய காலகவிருக்ஷியர்


மகாபாரதத்தில் சொல்லப்படாத கருத்துக்களே இருக்க முடியாது. மேலாண்மை தத்துவங்கள், நாட்டு நடப்பு, அரசியல், தனி மனித வாழ்க்கை என்று எல்லா விஷயங்களையும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள, இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு கதையை படிப்போம்.
மகாபாரதத்தில் சண்டையெல்லாம் முடிந்து அம்புப் படுக்கையில் படுத்தவாறு பீஷ்மர், தர்மபுத்திரருக்கு கூறிய அறிவுரைகளில் ஒன்றுதான், சாந்தி பர்வத்தில் இடம் பெற்றுள்ள காலகவிருக்ஷியர் கதை.
‘தர்மா! காலகவிருக்ஷியர் என்பவர் கோசல நாட்டு அரசனுக்கும் மிகவும் நெருங்கியவர். ஆட்சியில் பல மோசடிகள் நடைபெறுகின்றன என்று கேள்விப்பட்டார். உண்மை நிலவரத்தை அரசனுக்கு எடுத்துச் சொல்ல நினைத்தார். பறவைகளை அடைக்கும் சிறிய கூண்டு ஒன்றை வாங்கினார். ஒரு காகத்தை பிடித்து அதில் அடைத்தார். அதை கையில் எடுத்துக் கொண்டு நாட்டிற்குள் சென்றார்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிக்குச் சென்று, அனைவரின் காதுகளிலும் விழும்படி உரக்க பேசினார்.
“காகங்களுடன் பேசுகிற வித்தை எனக்குத் தெரியும். ‘நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது', ஆகிய எல்லாவற்றையுமே காகம் என்னிடம் சொல்லிவிடும். இந்த ராஜ்யத்தில் நடக்கிற விஷயங்கள் எல்லாவற்றையும் இந்தக் காகத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்”, என்று சொன்னார்.
பிறகு, அங்கிருந்து கிளம்பி, அந்த தேசத்தின் பல பகுதிகளில் சுற்றி வந்தார். அதோடு மட்டுமில்லாமல் பலரிடம் பேசி, நாட்டில் நடக்கும் குற்றங்களையும், தவறுகளையும் தெரிந்து கொண்டார்.
அடுத்த நாள், நேராக அரசவைக்குச் சென்றார். அரசன் மட்டுமல்ல, எல்லோரும் கூடியிருக்கும் சபை அது. அங்கு அமர்ந்திருந்த ஒரு முக்கியமான அதிகாரியைப் பார்த்து பேசினார்.
“அதிகாரியே! ‘நீ எந்த இடத்தில், என்ன குற்றத்தைச் செய்தாய்', என்பதை இந்தக் காகம் என்னிடம் தெரிவித்துவிட்டது. நாட்டின் பொக்கிஷத்தில் நீ கை வைத்த விஷயத்தை இது என்னிடம் கூறி விட்டது. ஆகையால் இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்”, என்று தைரியமாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் மீதும் அவர் குற்றாம் சாட்டினார். அரச சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு சபை கலைந்தது.
அன்று காலகவிருக்ஷியர் ஓர் மடத்தில் தங்கினார். அவரால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்தனர். அன்றிரவு, கூண்டிலிருந்த காகத்தை கொன்றனர். பொழுது விடிந்தது. காகம் இறந்ததை அறிந்தார் முனிவர். வருத்தமடைந்தார். நேராக அரண்மனை சென்றார். அரசனை தனிமையில் சந்தித்தார்.
‘அரசனே! நான் சொல்லும் விஷயத்தை நீ பொறுமையோடு கேட்க வேண்டும்', என்ற பீடிகையுடன் பேசத் தொடங்கினார்.
“அரசனை நெருங்குவது நல்லதல்ல என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். பிழைப்பதற்கு வழியே அற்றவனுக்கும் கூட, அரசனை அண்டிப் பிழைப்பது என்பது தவிர்க்க வேண்டிய செயல். ‘அரசனை நெருங்கி வாழ்வது, பாம்புகளுடன் வாழ்வது போல', என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள். அரசனுக்கு நண்பர்கள், பகைவர்கள் என்று பலர் இருப்பதால், அரசனை அண்டிப் பிழைப்பவனுக்கு அவர்கள் அனைவரிடமிருந்தே கூட ஆபத்துகள் உண்டாகலாம். கருணை காட்டும் அரசனுக்கு கோபம் ஏற்படும் போது, தீயாக மாறி பொசுக்கி விடுவான். இவையெல்லாம் தெரிந்திருந்தும் கூட, நான் உன்னை அணுகியதற்குக் காரணம், உன் மீது இருக்கும் அக்கறையே! உன் தந்தையின் காலத்திலிருந்து உங்கள் குடும்பத்துடன் நட்பு பாராட்டியதால், ஆட்சி ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனால்தான் இங்கே நடக்கும் குற்றங்களை நான் எடுத்துரைக்க முயன்றேன். அதிகாரிகளைப் பற்றிய உண்மையை நான் உனக்குத் தெரிவித்தேன். ‘எனக்கு அந்த தகவல்களை கூறியது காகம்', என்று நம்பி, அதைக் கொன்றுவிட்டார்கள். அவர்களுடைய அடுத்த குறி நானாகத்தான் இருப்பேன். இனி உன் ராஜ்யத்தில் வசிப்பது எனக்கு நல்லதல்ல”.
“உன்னுடைய அதிகாரிகளை நீ சோதித்துப் பார்க்க வேண்டும். உனக்கு நல்லதைச் செய்ய விரும்புகிறவர்களை அவர்கள் அழிக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் உன்னால் விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள். என்னால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், வாலில் அடிக்கப்பட்ட பாம்பை போன்றவர்கள்! பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்”, என்று கூறி கிளம்பினார்.
வருத்தமடைந்தான் அரசன்.
‘ஐயா! எனக்கு நல்லது செய்ய விரும்பிய உங்களுக்குத் தீமையை நினைக்கிறவர்கள், இங்கு இருக்கத் தேவையில்லை. அவர்களை உடனே விரட்டி விடுகிறேன். நீங்கள் என்னுடன் இருந்து ஆட்சி செய்ய உதவ வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டான்', அரசன்.
காலகவிருஷியர் பேசினார்.
‘அரசனே! என்னால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும், உடனே நடவடிக்கை எடுத்துவிடாதே! குற்றம் செய்த பலர் ஒன்று சேர்ந்து கொண்டால், அவர்களுடைய கொடுமை தாங்க முடியாது. ஆகையால், அவர்கள் ஒன்று சேரும் வகையில் உனது நடவடிக்கை அமைந்து விடக்கூடாது. அவர்களை ஒவ்வொருவராக நீ அழிக்கவேண்டும். முதலில் அவர்களிடம் இருக்கும் செல்வத்தைப் பறிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால் அவர்கள் திருடிச் சேர்த்த செல்வத்தின் காரணமாகத்தான், அவர்களுடைய கர்வம் வளர்ந்திருக்கிறது. முதலில் அதைக் குலைக்க வேண்டும். குற்றம் செய்த அதிகாரிகளில் ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கக்கூடும். அந்த விரோதியை அனுப்பி, குற்றத்தைக் காட்டிக்கொடுத்து விடுவேன் என்று மிரட்டச் சொல்லி பொருளைப் பறிக்க வேண்டும். அதன் பின்னர் இருவரையும் முடிக்க வேண்டும். அவர்களில் சிலரிடம் நீ அன்பு காட்டுவது போல் நடிக்க வேண்டும். இது அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். தீய மந்திரியை, மற்றொரு தீய மந்திரியாலேயே அழிக்க வேண்டும். தீயவர்களிடம் அதிகாரம் அளிக்காமல், மக்களின் நன்மையைக் கருதி ராஜ்யத்தை நடத்தும் திறமை உன்னிடம் வளரவேண்டும்”.
காலகவிருஷியர் சொன்ன விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று இதுதான்:
‘அரசனே! சுலபத்தில் எரிந்து விடக்கூடிய புதர்கள், ஒரு மரத்தைச் சுற்றி வளர்கிறது. பிறகு அந்த மரத்தையே சார்ந்து வாழ்கிறது. காட்டுத் தீ ஏற்படும் போது, புதர்களில் பற்றுகின்ற தீ அந்த மரத்தையே அழித்து விடுகிறது. அதைப் போல உன்னைச் சார்ந்திருப்பவர்களாலேயே உனக்கு அழிவு வரும்', என்று அறிவுரை கூறினார்.
அரசன் உண்மை நிலையை உணர்ந்து கொண்டான். திறமையும், நேர்மையும் கொண்ட ஒருவரை மந்திரியாக்கினான். காலகவிருக்ஷியரை தனது புரோகிதராக அமர்த்திக்கொண்டான். அவரின் வழிகாட்டுதலின் பேரில், தீய அதிகாரிகளையும், மந்திரிகளையும் விலக்கினான். நல்ல முறையில் ஆட்சி செய்து புகழ்பெற்ற அரசனாக விளங்கினான்.
பீஷ்மர் கூறிய காலகவிருக்ஷியர் கதை முடிந்தது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...