Tuesday, December 10, 2013

கங்கா ஸ்நான மகிமை!



நம்நாட்டில் ஷேத்திரத்தின் தல புராணங்களில், "கங்கை காசிக்கு சமமானது அல்லது காசியை விட உகந்தது" என்றே இருக்கும். இப்படி ஒரு ஷேத்திரத்தை மற்ற எந்த ஷேத்திரத்தோடும் ஒப்பிடாமல் காசியுடன் ஒப்பிட்டிருப்பதால், காசிதான், "ஷேத்திர ராஜா" என்று தெரிகிறது.

இதேபோல் எங்கே ஸ்நானம் செய்தாலும், "இது கங்கையைப் போல் புனிதமானது அல்லது கங்கையை விட விஷேசமானது" என்று சொல்வர். இதிலிருந்து, கங்கா ஸ்நானம்தான் ஸ்நானங்களிலேயே தலை சிறந்தது என்பது விளங்கும்.

"எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தத்தை குடித்து, ஒரு தடவையாவது கிருஷ்ணருக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ, அவனுக்கு எமனிடம் விவகாரம் ஒன்றும் இல்லை..."என்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார் ஆதிசங்கரர். இந்த பஜகோவிந்த ஸ்லோகத்தின்படி கீதை, கங்கை, கிருஷணர் எமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள், "எம தீபம்" ஏற்றுகின்றனர்; தீபாவளியன்று எமனுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும்

குபேர பூஜையின் சிறப்பு!




தீபாவளி அன்றோ, அதற்கு மறுநாளோ, குபேர பூஜை நடத்த ஏற்ற நாட்கள். இந்த இனிய நாளில் குபேரனை வணங்கினால், செல்வ சிறப்பு தங்கியிருக்கும் என்பது ஐதீகம். உழைப்பவனை நோக்கியே குபேரன் அடியெடுத்து வைக்கிறான்.

குபேரனின் இரண்டு பக்கங்களிலும் சங்கநிதி, பதுமநிதி என்ற தெய்வங்கள் இருக்கின்றனர். இவர்கள் மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இருவர். இவர்கள் இருவரிடமும் ஏராளமான பொருட் செல்வம் இருக்கிறது. தன் பொருட்களை இவர்களிடம் ஒப்படைத்து வைத்திருக்கிறார் குபேரன். குபேரனை வணங்கும்போது இந்த சக்திகளையும் வணங்க வேண்டும்.

ராவணனின் சகோதரர் குபேரன். மிகச் சிறந்த சிவபக்தர். இதன் காரணமாகவே, குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்து, குபேர பட்டணம் என்ற நகரையும் அமைத்துக் கொடுத்தார் சிவபெருமான். இந்த நகரில் உள்ள அழகாபுரம் என்ற அரண்மனை மண்டபத்தில் தாமரைப்பூ, பஞ்சு மெத்தை ஆகியவற்றின் மீது மீனாசனத்தில் அமர்ந்தார் குபேரன். ஒரு கை அபய முத்திரை காட்டி இருக்கும். கஷ்டப்படும் காலத்தில் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் தத்துவம்.

குபேரனின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டப்பட்டிருக்கும். முத்துக்குடையின் கீழ் இவர் அமர்ந்திருப்பார். சங்க நிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். வலம்புரி சங்கு செல்வத்தின் அடையாளம், பதும நிதியின் கையில் தாமரை மலர் இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும், செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே குபேர பூஜையின் முக்கிய சிறப்பு.

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடுவது ஏன்?



மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையிலே சொல்கிறார்.அரச மரத்தை சிவ சொரூபமாகவும், வேப்பமரத்தை சக்தி சொரூபமாகவும் போற்றுகிறோம். அதனால் தான் அரசும் வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவ சக்தி உறையும் இடமாகக் கருதி வணங்கி வழிபடுகிறோம். மகமாயி மாரியம்மனுக்கு வேப்பிலைக்காரி என்றே பெயர்.

அம்மை நோயைத் தீர்க்கும் தெய்வம் மகமாயி . அவள் பெயரால்தான் அந்த நோயை அம்மை என்று குறிப்பிடுகிறோம். அம்மை நோய்க்கு இன்று வரை ஆங்கில மருத்துவத்தில் கூட மருந்து இல்லை. அம்மை வருமுன்னே தடுக்கக்கூடிய அம்மை நோய்த் தடுப்பு ஊசி (மருந்து) தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் வந்த பின் காப்பது அவள் அருள் ஒன்றே! அதனால் அம்மை நோய் கண்டவரது வீட்டில் வேப்பிலைக் கொத்து சொருகி வைப்பதும், அம்மை நோய் குணமாகி தலைக்கு ஊத்துதல் என்னும் பெயரில் நோயாளியைக் குளிப்பாட்டும்போது, அந்த நீரில் வேப்பிலையை ஊறப் போட்டு அந்த நீரால் குளிப்பாட்டுவதே இன்றும் வழக்கத்திலுள்ளது.

மரம் இல்லாவிட்டால் இன்றைய உலக வரைபடமே உண்டாகி இருக்காது. கொலம்பஸ், கேப்டன் குக், வாஸ்கோடகாமா போன்றவர்கள் மரக்கலம் ஏறி கடலில் பயணித்தே புதுப் புது நாடுகளைக் கண்டறிந்தனர். வாணிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு பரிவர்த்தனை ஆயின. இந்து மதத்திலிருந்து பிரிந்த புத்தர் ஒரு போதி மரத்தின் அடியில் அமர்ந்திருந்த போதுதான் ஞானம் பெற்றார் என்பதால் புத்த மதத்தினர் இன்றும் போதி மரங்களைத் தெய்வமாக வழிபடு கின்றனர். இயற்கை அன்னையை வணங்கியே தங்கள் ஆன்மிக சித்தாந்தத்தைத் தொடங்கிய பண்டைய பாரதமக்கள், இயற்கையின் முதல் அம்சமான மரங்களை வழிபடத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. இன்றும் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் இறைவனுக்கு அணிவிக்கும் சந்தனம், ஜவ்வாது உட்பட எல்லாமும் மரங்களின் கொடை.

மனிதன் உயிர் வாழப் பிராண வாயு தேவை. மரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடை) உட்கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிட்டு, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்த் துடிப்பைத் தொடர்ந்து நடத்துகின்றன. இந்தப் பேருண்மையை நம் மக்கள் ஆதிகாலத்திலேயே அறிந்து கொண்டதன் விளைவுதான் இந்த மரவழிபாடு! தல விருட்சத் தத்துவம்! உயிர் வாழ உணவுக்கும், உயிர் ஆபத்தான நோய்களிலிருந்து மனிதனைக் காக்கும் மருந்துக்கும் மரங்களே துணை செய்கின்றன. கைம்மாறு கருதாத சேவை. உப்பு நீரைப் பெற்றுக் கொண்டு இனிமையான இளநீரைத் தரும் மேன்மை; அசுத்தமான எருவை அடி உரமாகப் பெற்றுக் கொண்டு தூய்மையான மலரையும் சுவை மிக்க கனியையும் கொடுக்கும் கனிவு.

மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியதும் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள மரங்களை வெட்ட நேர்ந்தது; பின்னர் எரிபொருளுக்கும் அதுவே தேவையாயிற்று. மரங்களை இதற்கென வெட்டும் போது அவன் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ? இனி மரங்களை இயன்றவரை பாதுகாக்க வேண்டும் என எண்ணினான். என்ன வழி? எது ஒன்றை மனிதன் மதிப்புள்ளதாகக் கருதுவானோ, அதைத்தான் பாதுகாப்பான். அதனால் மரங்களை மதிப்பிற்குரியன ஆக்க, அதனை தெய்வ நிலையில் வைத்து போற்றலானான். மரங்கள் ஆராதிக்கப்பட்டன; ஆலயங்களிலும் வைத்து வழிபடப்பட்டன. மரம் செடி, கொடிகளை வெட்டுவதால் நமக்கு ருணா என்ற பாவம் வந்து சேர்வதாகவும், அவசியத்தின் பேரில் மரத்தை வெட்டும் முன், அதனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.

கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்




கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் மிகப் பழமையானதும் பக்தர்களுக்கு எல்லாம் நன்மைகளையும் வாரி வழங்கும் அற்புதமான திருக்கோயில் ஆகும். இத்தலம் சென்னை-கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றத்தில் அமைந்துள்ளது. இப்பெருமாளுக்கு கலியுக வரதன், கண்திறக்கும் பெருமாள், பக்தவத்சலன், பாகவதப் பிரியன் என்று பல திருநாமங்கள் உண்டு. ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவர், தனது இடது கையில் கதையுடன் சத்யநாராயணனாக காட்சி தருகிறார். இத்தல பெருமாள் யானைக்கு அருளியவர் ஆவார். ‘‘ஆதிமூலமே’’ என்றழைத்த கரி எனும் யானையை முதலையிடமிருந்து காப்பாற்றியதால் கரிவரதராஜப் பெருமாள் எனும் திருநாமம் ஏற்பட்டது.

முதலைக்கும் யானைக்கும் சாப விமோசனம் அளித்து மோட்சத்தையும் அளித்தார். நெல்வயல் நிறைந்திருந்த நெற்குன்றத்தில் எழுந்தருளியவர் இந்த நெற்குன்றம் வரதர். நெல் அதிகமாக குன்றுபோல் விளைந்து காணப்பட்டதால் இந்த ஊர் நெற்குன்றம் என்றாகியது. மூலவர் சந்நதிக்குமுன் துவாரக பாலகர்கள் ஜய-விஜயர்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்கள். கரிவரதராஜப் பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி-பூதேவி தாயார்கள் உபய நாச்சியாருடன் காட்சி தருகின்றனர். கோயில் பிராகாரத்தில் விஷ்வக்சேனர், விஷ்ணு துர்க்கை சந்நதிகள் உள்ளன. பெருமாளுக்கு எதிரே தனி சந்நதி கொண்டிருக்கும் கருடாழ்வார், நாகதோஷம் போக்குபவர்.

பெருமாளின் இடதுபுறத்தில் வெளிமண்டலத்தில் நம்மாழ்வார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கிறார். அனுமன் வரத ஆஞ்சநேயராக, வடக்கு நோக்கி வராஹமுகமாக கைகூப்பி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு வடைமாலையும் வெண்ணெயும் சாற்றி வழிபடுகின்றனர்.
இக்கோயிலின் சிறப்பே நேத்ர தரிசனம்தான். பெருமாள் நம்மை, தன் வெண் விழிக்கு நடுவே கருவிழி மூலம் நோக்குவது அற்புத காட்சியாகும். பெருமாளின் திருப்பார்வை நம்மைத் தீண்டும் அதிசயம்! சாதாரணமாக, கரிவரதராஜப் பெருமாளின் முன்பு நின்று பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பது போல் தோன்றுகிறது.

கருவறையிலுள்ள மின்சார விளக்குகளை நிறுத்தி விட்டு இருளில் நெய்விளக்கேற்றி ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்லத் திறந்து நம்மைப் பார்க்கும் அற்புதத்தை அங்குபோய் அனுபவித்தால்தான் உணரமுடியும். நேத்ர சேவை முடிந்ததும் மின் விளக்குகளை ஏற்றும்போது அவர் விழிகள் மூடிக்கொள்கின்றன! ஐந்தரை அடி உயரத்தில் காணப்படும் கரிவரதராஜப் பெருமாளின் இரு மேற்திருக்கரங்களில் சங்கு-சக்கரம், வலது கீழ் திருக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடது கீழ் திருக்கரம் கடிகஹஸ்தமாக உள்ளன. அழகான இந்தப் பெருமாளின் கண், மூக்கு, அதரம், நெற்றி, திருவடி என அனைத்து பாகங்களும் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

திருக்கையில் நாககங்கணம், தொப்புளின் கீழே சிம்மமுகம் உள்ளதும் மார்பின்மேல் தோள்பட்டை அருகில் ஸ்ரீவத்ஸம் உள்ளதும் விசேஷமாகும். இவரது திருமேனியைச் சுற்றி அழகாக பத்தாறு வஸ்திரம் அணிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மார்பில் இரு தாயார் உள்ளனர் என்பது கூடுதல் அதிசயம். கழுத்தில் சாளக்ராம மாலையும் மார்பில் பூணூலும் அணிந்து மிக அழகாக காட்சியளிக்கிறார். பெருமாள் சந்நதியில் கையில் வெண்ணெயுடன் காட்சிதரும் சந்தான கிருஷ்ணனை திருமஞ்சனம் செய்து வழிபட்டு பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். உற்சவர் சத்யநாராயணனாகத் திகழ்வதால், இங்கே பௌர்ணமிதோறும் சத்யநாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

திருக்கேதீஸ்வரம்-இலங்கை

இதுதான் ஈழத்தின் மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம். இது திருஞானசம்பந்தரால் திருப்பாடல் பாடப்பெற்ற திருத்தலமாகும். 2400 வருடங்களுக்கு முன் கட்டபட்ட இந்தச் சிவன் கோவில், போர்ச்சூழலில் பல அழிவுகளைச் சந்தித்த பின் திருத்தி அமைக்கப்பட்டதாகும்.




இலங்கை தலை மன்னாரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங்கையிலுள்ள புகழ் மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங்கப்படுகிறார்கள். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படைத்தது. பேச்சிழந்தவர்களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் என்கிறார்கள். கொழும்பிலிருந்து ரயிலில் செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்



ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

காக்கும் கடவுளான கருணை மிக்க மஹாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

சக்கராயுதம்- சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ் வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் என்பர். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார்.

குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார்.

மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும்

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங் களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார்

சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!

மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது.

அம்பரீச மன்னனுக்கு சுதர்சனர் அருளிய வரலாறும் உண்டு.

இந்திரத்யும்னன் என்ற மன்னன்அகத்தியரின் சாபத்திற்கு உள்ளாகி கஜேந்திரன் என்னும் யானையாக மாற நேர்ந்த்து.. ஒருநாள் தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு உடனே கருட வாகனத்தில் தோன்றினார். அப்போது திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது.

பொதுவாக சக்கரம் மஹாவிஷ்ணுவின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும்.

ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது

திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது.

"ஸ்ரீ ஸுதர்ஸன மகா மந்திரங்களை யார் ஒருவர் மன ஒருமைப் பாட்டுடனும், பக்தியுடனும், அன்புடனும் ஜபம் செய்து வருகிறாரோ அவருக்கு எல்லா விதக் கார்யங்களும் வெற்றியுடன் நடக்கும்" என்று கயிலை நாதரான ஸ்ரீ பரமேஸ்வரர் தமது பத்தினியான உமை அம்மையாருக்கு உபதேசம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்தனை மகிமை உள்ளது சுதர்சன மந்திரம்.

சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை, வியாழக் கிழமைகளில்,
கோலமிட்டு, ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு.

ஓம் நமோ நாராயணாய.

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்

சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்


கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம். இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு நடந்துவந்து உலகம் சமநிலை அடையச் செய்தார் என்பது புராணம். அப்படி அகத்தியர் தென் பகுதி நடந்து வந்தபோது, குற்றாலம் பகுதியில் ஒரு கோவில் முதலில் விஷ்ணு கோவிலாக இருந்ததைப் பார்த்தாராம் அகத்தியர். பின்பு அதனை சிவன் கோவிலாக மாற்றினார். அப்படி அகத்தியர் மாற்றிய கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகிலுள்ள திருகுற்றால நாதர் கோவில். தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 14 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சித்திர சபையில் தான் சிவன் நடனமாடினார் என்று கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் எல்லாம் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ தான் இருக்கும். இக்கோவிலின் வடிவம் மட்டும் சங்கு வடிவில் இருப்பது தான் இதன் சிறப்பு.

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!



தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.

சிவனின் சிறப்பு செய்திகள்



* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

* மகாராஷ்டிரா மாநில் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

பயனுள்ள தகவல்

1. வியாசரின் இயற்பெயர்........
கிருஷ்ண துவைபாயனர்

2. யாகம் செய்யும் நடைமுறையைக் கூறும் வேதம்......
யஜுர்

3. வேதபுருஷனின் கண்ணாக இருக்கும் சாஸ்திரம்......
ஜோதிடம்

4. 18 புராணங்களில் மிகப் பெரியது........
ஸ்கந்த புராணம்

5. விஷ்ணுபுராணத்தை எழுதியவர்........
பராசரர்

6. வால்மீகி ராமாயணத்திலுள்ள ஸ்லோகங்கள்.......
24,000

7. படைத்தல் தொழிலின் போது சிவன் ஆடும் நடனம்......
காளிகா தாண்டவம்

8. மரணத்தின் பின் மனிதநிலை பற்றி எமனுடன் வாதிட்டவன்......
நசிகேதன்

9. விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த உபநிஷதம்........
கடோபநிஷத்

10. முண்டக உபநிஷத்தில் உள்ள புகழ் மிக்க வாசகம்........
சத்ய மேவ ஜயதே(வாய்மையே வெல்லும்).

சமயபுரம் மாரியம்மன் ஸ்தல வரலாறு....



பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை `பச்சைப் பட்டினி' விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த பச்சை பட்டினி விரதம் ஆரம்பிக்கிறது.



பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த சமயபுரம் மாரியம்மன் முற்காலத்தில் `வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், கண்ணனூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார்.

போரில் வெற்றிபெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டார். அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சமயபுரம் கோவிலின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.

அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

போக்குவரத்து வசதி......

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...