Thursday, July 5, 2018

மூன்று வகையான மனிதர்கள்

ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான ஒரு அரக்கனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் அந்த அரக்கனை பார்த்து கேட்டார், இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர்?

சற்றும் யோசிக்காமல் அரக்கன் சொன்னான், மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகாப் ப்ரபு.

மகாவிஷ்ணு, என்ன மூன்றுவிதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்றுவிதமான மக்கள்தானா உள்ளார்கள் என்று கேட்டார்.

ப்ரபோ, ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை?
     ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்றுவிதமான மக்கள்தான் உள்ளனர் என்று வினயத்துடன் கூறினான் அரக்கன்.

அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம் என்றார் மகாவிஷ்ணு.

அரக்கன் சொன்னான் ப்ரபோ:-
ஒரு வகையினர் :  பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர் : பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்  : கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.

அவ்வளவுதான் என்றான்.

மகாவிஷ்ணு விடுவாரா?
     சற்று விளக்கமாக புரியும்படி சொல் என்றார்.

சொல்ல துவங்கினான் அரக்கன்,

முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் என்றால், பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டுவிடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும்  தன வாயில் ஊட்டப்படும் உணவுதான் தெரியும், தன தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்துபோன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவுதான், இந்த வகை மனிதர்கள் இதுபோலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப்பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும்வரை.  அவ்வளவுதான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்..,

பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால்தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால்தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வரமுடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் என்றால்.,

     முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் இறைவனை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு இறைவனை காண முற்படும் வேளையில், நாங்கள் உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று எங்களை மாற்றிக் கொள்கிறோம், முதலில் எங்களை வெறுக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம்

ஆக மூன்றுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளனர் என்றான்,

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு அவனை தன்னுள் ஏற்றுக்கொண்டார்.

Wednesday, July 4, 2018

பட்டினத்தாரின் ஊசி..

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர்
பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார்,அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக
முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக
தற்பெருமை பேசுகிறீர்களே….

ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.
          
வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்...

Tuesday, July 3, 2018

கோயிலை காவல் காக்கும் முதலை...!

இதுவரை புரியாத புதிர் 150 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் அதிசயம் !கோயிலை  காவல் காக்கும் முதலை...!

ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோயில், மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு.

அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோயிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. இந்த கோயிலில் என்ன தனித்துவம் இருக்கிறது என கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

அனந்தபுரா கோயில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிரதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பச்சைப் பசேல் என்று இருக்கும் இந்த கோயில் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இதை அங்குள்ள மக்கள் பபியா என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது.

அதோடு இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.

இதில் என்ன விசேஷம் என்றால், பொதுவாக முதலை இனமானது அசைவ வகையைச் சார்ந்தது. ஆனால், இந்த முதலையோ குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடாது.

இந்த முதலைக்கு கோயில் குருக்கள், உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்த உருண்டைகளை சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு முசலி நைவேத்யா என்கிறார்கள்.

கோயில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கள்களை இதுவரை பபியா தாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக பிரசாதம் வழங்கப்படும் வேளைகளில் இந்த முதலை குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் எவரும் கண்டதில்லை.

ஒரு முதலை இறந்து விடுமேயானால், மறுதினமே இன்னொரு முதலை தென்படுமாம். அருகில் வேறு ஆறுகளோ, குளங்களோ இல்லாத நிலையில் எப்படி இந்தக் கோயில் குளத்திற்குள் முதலை வந்தது என்பது எவருக்கும் புதியாத புதிர் என்கிறார்கள்!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார்.
அவரது பக்தி மனம பதறியது.

அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில்,

கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது.

யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை.......?

நாள்தோறும் இரவு,

கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார்.

மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால்,

கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம்.

எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது....!

யாரிடம் போய்ச் சொல்வது இதை..!

பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே...!

யார் உள்ளே வந்து இப்படி செய்கிறார்கள்...?

அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே,
 
""கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா...?

கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே.....!

அதையும் வீட்டில் என தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன்.

அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது......?

உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன்.

காலையில் வந்து பார்த்தால் ,

உன் காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்.....!

ஏன் இப்படி?''
என்று அரற்றினார்...!!

இரவு கோயிலைப் பூட்டும் போதுதான் பார்த்தார்.

நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள்.

தளர்ந்த தேகம்.

கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் அப்படியொரு பரவசம்.

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.

பல ஆண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.

அர்ச்சகர் பிரியத்தோடு கேட்டார்:

""பாட்டி!
    இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?''

""நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான்.
 
  அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டேன்.

அர்ச்சகர் சிரித்தார்.

  ""அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?''

""எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது....?

போகப் போகிற கட்டை.

என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா!

ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான்.

அவனது வலது கை வலிக்காதோ!

  இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை.

நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்?

அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம் கொண்டாடிக் கேட்கிறது.

நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன்.

எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி,

அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!''

அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இவள்.

படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி.

ஆனால் எத்தனை பக்தி!

நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன்,

எப்படி பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும்.

அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.

மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு,

தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.

அன்றிரவு,
  
அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல்,

புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை.

   கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.

""அர்ச்சகரே!

உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை.

என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் ,
  நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.

அதன் மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள்.

மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று நடப்பதைப் பாருங்கள்.

பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!

மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க,

அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது.

மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.

அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.

பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள்.

அதற்கு முன் தோத்திரங்களைச் சொன்னபடி,

அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.

   மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது.

  "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!' என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள்,

சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.

என்ன ஆச்சரியம்!

அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

சாணம் பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து ,

   கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.

நன்கு உறங்கிய அவள்,

  அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.

""கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா?

நேற்று குளிர் அதிகம்.

போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?''
  
என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.

வாய் கொப்பளித்து,
   முகத்தைத் தூய்மை செய்து கொண்டு வந்தாள்.

""தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா.

   உடம்புக்கு ஆகாது.

நீ வெது வெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள்.

  இன்று உனக்காக புள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,''

என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள்.

ஒவ்வொரு புள்ளி வைக்கும் போதும்

"கிருஷ்ணா! முகுந்தா! முராரே!'

என்று கண்ணன் திரு நாமங்களைச் சொல்லிக் கொண்டே புள்ளிவைத்தாள்.

பின் கண்ணனைப் பற்றிய தோத்திரங்களைச் சொல்லியவாறே,

இழையிழுத்துக் கோலம் போட்டாள்.

  தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி,

அடுப்பு மூட்டிச்
சமைக்கலானாள்.

உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.

நடந்ததெல்லாம் கனவா , நனவா...?

அன்றும் கோயிலுக்குப் போனார்.

கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப் பார்த்ததும் ,

அவரது மனம் பக்தியில் தழதழத்தது.

அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி,

    வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார்.

அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.

ஆனால் அவள் வரவில்லை.

அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:

""அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.

ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.

இனி அது கிடைக்காது''.

ஏன்?-
வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.

""நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது.

இன்று அவளுக்கு உடல் நலமில்லை.

அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.

நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக,

நீங்கள் அவள் இல்லம் செல்லுங்கள்.

அங்கே மக்கள் கூடியிருப்பார்கள்.

மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும்.

சுயநலமின்றி,

தாய்ப்பாசத்தோடு

என்னை நேசித்த அவள்,

பக்தியின் பெருமையை நாளை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்!''

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.

அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை.

மறுநாள் காலை மூதாட்டியின் இல்லத்திற்கு விரைந்தார்.

   கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.

பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல,

     விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.

கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.

""இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு?

என் பிள்ளை கண்ணனை,

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அது போதும் எனக்கு!''

மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன்,

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.

""என் தாய் அல்லவா நீ!....!!!

எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?'' என்ற கண்ணன்,

அந்த ஆன்மாவை,

"இரு குண்டலங்களாக்கி"

தன் செவிகளில் அணிந்து கொண்டான்.

குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.

அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு,

அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார்.

கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.

எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ ,

அந்த இடத்தில் இப்போது,

" இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன"....!!

சுயநலமற்ற ஏழைக் கிழவியின் பக்தியை அங்கீகரித்த ,

கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது....!!

" சர்வம் கிருஷ்ணார்ப்பணம்."

திறமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.

அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

நம்மை சுற்றி பல குரங்குகளும் சிங்கங்களும்  இருக்கலாம்,
அவற்றை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"

மனிதன் தீய வழியில் ஏன் செல்கிறான்

துறவி  ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.

இளைஞன் ஒருவன் வந்தான் 

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.

ஆனால் இன்றும்
மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்......??? என்று கேட்டான்.

துறவி  அவனிடம் சொன்னார்......

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய்.

"ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை.

நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும்.

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி  அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி.

இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன்,
என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க.....???

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்  "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி  கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,  அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்....!

கீதை 2.14

இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலபோக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடைகுளிர் காலங்கள் தோன்றி மறைவதை போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன.  எனவே இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ள கற்றுக்கொள்.

ஹரிஓம்.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...