ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான ஒரு அரக்கனிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் அந்த அரக்கனை பார்த்து கேட்டார், இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர்?
சற்றும் யோசிக்காமல் அரக்கன் சொன்னான், மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகாப் ப்ரபு.
மகாவிஷ்ணு, என்ன மூன்றுவிதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்றுவிதமான மக்கள்தானா உள்ளார்கள் என்று கேட்டார்.
ப்ரபோ, ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை?
ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்றுவிதமான மக்கள்தான் உள்ளனர் என்று வினயத்துடன் கூறினான் அரக்கன்.
அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம் என்றார் மகாவிஷ்ணு.
அரக்கன் சொன்னான் ப்ரபோ:-
ஒரு வகையினர் : பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர் : பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர் : கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.
அவ்வளவுதான் என்றான்.
மகாவிஷ்ணு விடுவாரா?
சற்று விளக்கமாக புரியும்படி சொல் என்றார்.
சொல்ல துவங்கினான் அரக்கன்,
முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் என்றால், பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டுவிடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன வாயில் ஊட்டப்படும் உணவுதான் தெரியும், தன தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்துபோன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவுதான், இந்த வகை மனிதர்கள் இதுபோலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப்பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும்வரை. அவ்வளவுதான்.
இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்..,
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால்தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால்தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வரமுடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.
மூன்றாவது கணவனும் மனைவியும் என்றால்.,
முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.
அது போல ஒரு சாரார் இறைவனை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு இறைவனை காண முற்படும் வேளையில், நாங்கள் உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று எங்களை மாற்றிக் கொள்கிறோம், முதலில் எங்களை வெறுக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம்
ஆக மூன்றுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளனர் என்றான்,
மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு அவனை தன்னுள் ஏற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment