Thursday, July 12, 2018

மகாபாரதத்தில்

நாம் யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
பாரதப்போர் நடந்து கொண்டிருக்கிறது.அர்ஜுனனை கொல்ல கர்ணன் நாகாஸ்திரத்தை நிச்சயம் பயன்படுத்துவான் என்று கிருஷ்ணனுக்கு தெரியும்.அதனால் அதற்கு முன்பே அவர் குந்தியிடம் கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்பதை சொல்லிவிடுகிறார்.அது மட்டுமல்ல இதை கர்ணனிடம் போய் சொல்லுமாறும், கூடவே அவனை கவுரவர்களை விட்டு பிரிந்து பாண்டவர் அணியில் சேருமாறு கேட்கவும் சொல்கிறார். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க அவனிடம் வரம் வாங்குமாறும் கூறுகிறார்.குந்தியும் உடனே கர்ணனை சென்று பார்த்து தான்தான் அவன் தாய் என்று சொல்லி அழுகிறாள்.கர்ணன் இதைக் கேட்டு மகிழ்கிறான்.பிறகு குந்தி அவனை பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கிறாள். அதற்கு கர்ணன் உறுதியாக மறுத்துவிடுகிறான்.அதனால் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று அவனிடம் குந்தி கேட்க அவனும் சம்மதிக்கிறான்.
போர்க்களம். பார்த்த சாரதியான கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார் "அர்ஜுனா! இன்றைய போரில் நீ கர்ணனை கொல்ல வேண்டும்".அர்ஜுனன் சம்மதிக்கிறான். கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் கடும் போர் நடக்கிறது. இருவரும் சிறந்த வீரர்கள் என்பதால் ஒரு முடிவு வரவில்லை.பொறுத்துப் பார்த்த கர்ணன் நாகாஸ்திரத்தை எடுக்கிறான். கர்ணனின் தேரோட்டி சல்லியன். தேரோட்டுவதில் நிகரற்றவன்.அவன் கர்ணனிடம் சொல்கிறான் , "கர்ணா! நீ நாகாஸ்திரத்தை எடுத்துவிட்டாய். மகிழ்ச்சி. அதை அர்ஜுனனின் மார்புக்கு குறி வை." கர்ணன் சொல்கிறான், "சல்லியா! மாட்டேன். அர்ஜுனன் ஒரு வீரன். நான் ஒரு வீரன். அதனால் நான் அவன் கழுத்துக்கு குறி வைப்பேன்". சல்லியன் மீண்டும் சொல்கிறான், "கர்ணா! நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறி வை. கழுத்துக்கு வைக்காதே". கர்ணன் எரிச்சலடைகிறான்."சல்லியா! ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்கு தான் தெரியும். நீ கேவலம் ஒரு தேரோட்டி.நீ எனக்கு அறிவுரை கூறாதே!" என்று சொல்கிறான். சல்லியன் மீண்டும் சொல்கிறான், "கர்ணா! ஒப்புக் கொள்கிறேன். ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்கு தான் தெரியும். அதுபோல் ஒரு தேரோட்டியைப் பற்று இன்னொரு தேரோட்டிக்கு தான் தெரியும்.அர்ஜுனனின் தேரோட்டியான கிருஷ்ணன் மாயவன்.அவன் எதாவது சூழ்ச்சி செய்வான். நீ தயவு செய்து அர்ஜுனனின் மார்புக்கு குறிவை". கர்ணன் இதை காதுகொடுத்து கேட்கவில்லை.எடுத்தான் வில்லை. தொடுத்தான் நாகாஸ்திரத்தை.எய்தான் அர்ஜுனனை நோக்கி. சீறிப் பாய்கிறது அம்பு.அர்ஜுனனை நெருங்குகிறது.கிருஷ்ணர் தனது காலால் தேரை ஒரு அழுத்து அழுத்துகிறார். தேர் சில அங்குலம் பூமியில் அமிழ்கிறது.பார்த்தன் கழுத்தை நோக்கி பாய்ந்து வந்த அம்பு இதனால் அவன் தலையில் உள்ள மகுடத்தை சாய்த்து செல்கிறது.
(இதில் இருந்துதான் "தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனது" என்ற பழமொழி உருவானது.) அர்ஜுனன் தப்பித்தான். கர்ணனுக்கு பெரிய ஏமாற்றம்.சல்லியன் சொல்கிறான், " கர்ணா! பார்த்தாயா நடந்ததை. இதற்கு தான் நான் அர்ஜுனனின் மார்பை குறிவைக்க சொன்னேன். பரவாயில்லை. மீண்டும் ஒருமுறை அந்த அஸ்திரத்தை பிரயோகி. இந்த முறை அவன் மார்புக்கு குறி வை" . கர்ணன் என்ன செய்வான்? அவன் தன் தாய் குந்தியிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டானே! அதனால் அதற்கு மறுத்துவிடுகிறான்.சல்லியனும் " நான் சொன்னதை கேட்காமல் நீ என்னை இழிவுபடுத்திவிட்டாய் . இனி நான் உனக்கு தேரோட்டமாட்டேன்" என்று சொல்லி சென்றுவிடுகிறான்.
கர்ணன் சல்லியன் சொன்னதை காது கொடுத்து கேட்டிருந்தால் போரின் முடிவே மாறியிருக்கும்.மாறாக அவனை தேரோட்டிக்கு என்ன தெரியும் என்று அலட்சியப்படுத்தியதால் அவனது நோக்கம் நிறைவேறவில்லை. இந்த சம்பவம் யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...