Tuesday, July 3, 2018

வேதத்தில் ராமனைப் பற்றி?

ஒரு முறை ஸ்ரீ மடத்தில் தங்கியிருந்த ஒரு பக்தர் பெரியவா விடம் அடுத்த நாள் அதிகாலையில் ஊர் திரும்புவதாக் கூறி உத்தரவு கேட்டு நின்றார்.. பிரசாதமும் அருள வேண்டினார்...

இவர் அடுத்த நாள் காலை என்று சொன்னது ஸ்ரீ ராம நவமி..

உடனே பெரியவா, " நாளைக்கு ராம நவமி யாச்சே! வந்தது வந்தே, ஒண்ணு இங்கேயே மடத்திலே ராமர் பூஜைக்கு இருந்துட்டு போ.. இல்லாட்டா இன்னைக்கு சாயங்காலமே ரயில் பிடிச்சு நாளைக்கு ஊருக்குப் போய் ஆத்துல பூஜை பண்ணு.. அதுவும் இல்லாம, இங்கேயும் இல்லாம, நாளைக் காலம்பர போகணும் னு சொன்னா எப்படி? " என்று கேட்டார்..

அந்தப் பக்தர் யாரிடம் பேசுகிறோம் என்பதை மறந்தவராய் ஸ்ரீ பெரியவாளிடம்," நான் வேதத்தில் சொல்லி இருக்கிறதை மட்டுமே பண்ணுவேன்... வேதம் தானே நமக்கு எல்லாம்? வேதத்திலே ராமனைப் பற்றியோ, கிருஷ்ணனைப் பற்றியோ எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பற்றியவா தானே அவாளும்? அதனால் ராமர், கிருஷ்ணர் சமாசாரமெல்லாம் நான் எடுத்துக்கிறதில்லை.. ராம நவமியும் பண்றதில்லே.. ராமர் படமும் ஆத்திலே கிடையாது " என்று சற்று அதிகப் பிரசங்கமாகவே சொல்லி நின்றார்...

புரு புரு புருவென்று ஒரு வேகம் ஏற எதிரே பேசுவது கருணாசாகரரா என்று வியப்புறுமாறு ஸ்ரீ பெரியவா விளாச ஆரம்பித்து விட்டார்..

" ஓஹோ! வேதத்திலே இல்லாத எந்த ஒண்ணும் நீ பண்றதில்லையாக்கும்... சரி அப்ப கார்த்தால எழுந்த உடனே டூத் பேஸ்ட், அப்புறம் காபி இதெல்லாம் வேதத்திலே இருக்கா? சோப்பு தேய்ச்சுண்டு குளிக்கறியே, அந்த சோப்பைப் பத்தி வேதத்திலே இருக்கா? உன் ஆம்படையாள் கிரைண்டர்லே அரைச்சு, ஃப்ரிட்ஜில வைச்சு சாப்பிடுறாயே, கிரைண்டர், குக்கர் வேதத்திலே சொல்லியிருக்கா? எல்லாத்தையும் விட ஆபிஸ் னு ஜீவனம் செய்யறதுக்கு போறயே சூட் போட்டுண்டு, அது வேதத்தில இருக்கா?

வேதத்திலே பிராமண ஜாதிக்காரனை ஆபிஸ் உத்யோகம் பார்க்கச் சொல்லிருக்கா? ஆபீஸூக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ பிடிச்சு போறயே, அந்த வாகனாதிகள் எந்த வேதத்திலே இருக்கு? " என்று ஆரம்பித்து மின் விளக்கு, மின் விசிறி, சினிமா, கிரிக்கெட் என்று அந்த நபரின் அத்தனை அனுபவத்தையும் அடுக்கி அவையெல்லாம் வேதத்தில் இருக்கிறதா எனத் தொடர்ந்து கேட்டார்..

முடிவாக, " வேதத்திலே எங்கேயும் ஒரு அத்வைத சன்யாசி மடம் னு ஒண்ணு வைச்சுண்டு, 'பப்ளிக்' பூஜை பண்ணின்டு, பூஜை பிரசாதம் குடுக்கலாம் னு இருக்கிறதா தெரியலேன்னு கூட உன்னை மாதிரி மேதைகள் ஆராய்ச்சி பண்ணிப் பேசலாம்.. அதனால் நீ இப்ப என் கிட்ட கேக்கற பிரசாதமே வேதத்திலே சொல்லாதது தான் னு ஆகறது.. போய்ட்டு வா " என்றாரே பார்க்கலாம், இந்த விதண்டாவாதி ஆடிப் போய் விட்டார்..

பரமேஸ்வரரிடம் இத்தனையளவு தன் அர்த்தமற்ற வாதத்தை எடுத்துரைத்து விட்டோமே, அவர் சர்வ வல்லமை பெற்ற மா பெரும் தவ சேஷ்டர் அல்லவா என்பதை உணர்ந்தவராய் தடாலென்று விழுந்து, தண்ட நமஸ்காரம் செய்து தன்னை மன்னித்து நல்லறிவு தர வேண்டி நின்றார்..

மகான் மேலும் பேசலானார்... இப்போது பெருமானின் பேச்சில் குளுமை மிகுந்திருந்தது..

" வேத காலத்திற்குப் பின்னாலும், வேதத்தில் கூறியுள்ளவைகளை அனுசரித்தே அந்த விருட்சத்தின் புதுப் புது கிளைகளாக அனேக சம்பிரதாயங்கள் வளர்ந்து விட்டன.. அவையெல்லாமும் நாம் வேதமாகப் போற்றி அனுசரிக்க வேண்டியவைகளே... வேதத்திலே சொல்லாத உப கரணங்களைப் பிற்காலத்தில் கண்டு பிடிச்சுண்டே வந்திருக்கா..

அத்யயனம், பூஜை, ஜபம், தியானம் முதலான அனுஷ்டானங்கள் பண்றதைப் பத்தி மட்டும் வேதத்திலே சொல்லி நிறுத்திடலை... காலை எழுந்ததும் பல் தேச்சுக்கறது, ஸ்நானம் பண்றது, சாப்பிடறது, ஸ்வதர்ம கர்மா பண்ணி சம்பாதிப்பது, வாழ்க்கை நடத்த அங்கே, இங்கே பிரயாணம் பண்றது, கொஞ்சம் உல்லாசமாயிருக்கிறது எல்லாம் வேதத்திலே சொல்லப்பட்டு அனுமதிச்சிருக்கிற காரியங்கள் தான்...

"ஆனா அந்தக் கார்யங்களை நடத்த அன்னிக்கிருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம்.. அன்னிக்கு குதிரை மேலேயோ, மாட்டு வண்டியிலோ பிரயாணம் பண்ணினான்னா, இன்னிக்கு ஸ்கூட்டர், எலக்ட்ரிக் டிரெயின் னு வந்தாச்சு.. வேதத்திலே சொல்லவில்லை என்பதற்காக இவைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை...

"பிராமணன் வைதிகத் தொழிலை விட்டுட்டு ஆபிஸ், கம்பெனி னு உத்யோகம் பார்க்கறது எல்லாம் சந்தர்ப்பக் கொடுமையாலே தவிர்க்க முடியாத அநாசாரமாயிடுத்து.. ஆனாலும் என்ன பண்ணலாம்? பெரிய உத்யோகம் பண்ணி வாரி, வாரிக் குவிச்சி இன்னும் அதிகமாச் சேர்க்கணும் னு பறக்காம பகவான் கிட்டே மன்னிப்பு கேட்டுண்டு வாழ்க்கையோட அத்யாவசியத் தேவைக்கு மட்டும் சம்பாதிக்கணும்.. நேரம் கிடைக்கும் போது வேத அத்யனங்களையும், அனுஷ்டானங்களையும் பண்ண ஆரம்பிக்கணும்.. ரிடையர் ஆனப்புறம் வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணனும்...

"ராம நவமி, கோகுலாஷ்டமி, ஹரி கதை, பஜனை எல்லாம் வேத வழியிலே நாம் சேர்க்கிறதுக்கு ரொம்ப ஒத்தாசை பண்றவை தான்... இந்த மாதிரியானவைகளுக்கு வேதம் தான் மூலம்.. நமக்கெல்லாம் உற்சாகப்படுத்தற இது மாதிரி சமாசாரங்களும் மனசுக்கு ரஞ்ஜகமான முறையில வேத வழிக்கு, கொண்டு சேர்ப்பவை தான்.. வாஜபேயி யாகத்திலேர்ந்து, நாம சங்கீர்த்தனம் வரை ஒரே சனாதன தர்மத்தின் வேரிலிருந்து தோன்றிய கிளைகள் தான்...

"நீயும் ஸ்ரீ ராம நவமி பூஜை மாதிரி சின்னதா ஆரம்பிச்சு வாஜபேயி ஆகிற வரைக்கும் மேலே மேலே அபிவிருத்தியாவாயாக! நாளைக்கு இங்கேயே வழக்கமாக மடத்து பூஜையோட, ராமர் பூஜையும் பாரு.. ரெண்டு பிரசாதமும் தரேன்.. சந்தோஷமாகப் போய்ட்டு வா.."

தாயினும் மேலான அன்புடன் ஸ்ரீ பெரியவா இப்படி ஒரு நீண்ட பிரசங்கத்தில் எதிரே இருந்த பக்தருக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் மனதில் படிகிற மாதிரியான அருளுரை தந்து அனுக்ரஹித்தார்...

விதண்டாவாதம் செய்த அந்தப் பக்தர் உருகிப் போய் உண்மை விளங்கப் பெற்றவராய் பெருமானை நமஸ்கரித்து எழுந்தார்.. அவர் மனம் தெளிந்திருந்தது...

பரமேஸ்வரா... பெரியவா சரணம் சரணம்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...