Sunday, July 8, 2018

கம்பராமாயணம்

   திரு அவதாரப் படலம்
   
     கலைக்கோட்டு மாமுனிவரால் புத்திரகாமேஸ்டி  யாகம் செய்யப்பட்டு,   பிறந்தத் தெய்வீகப் புத்திரர்களான   இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்கனன்  ஆகியோரிடம் தசரதர்,  தன்னுயிரையே வைத்திருந்தார்.   இவர்களைகக் காணும் நாட்டுமக்கள் அனைவரும்,    தசரதரும், கௌசல்யாவும் எவ்வாறு  தங்கள் புதல்வர்களை  விரும்புவார்களோ, அதைப்போலவே  விரும்பினர்;  அவர்கள் நலமாக வாழ தினமும் இறைவனிடம் வேண்டினர்.
 
  ' மதி புனை அரன் நிகர் முனி தரவே'__வெண்மதி சூடிய  சிவனையொத்த வசிஷ்டர் என்கிறார் கம்பர். 
இத்தனை சிறப்புமிக்க   வசிஷ்ட மாமுனிவரே கோசல நாட்டின் மன்னர்களான  சூரிய குல  சக்ரவர்த்திகளுக்குக்  குலகுருவாக இருந்தார்.     'இவ்வளவினது'  என்று தனியாக  ஒரு வரம்பின்றி அழிவில்லாத  வேதங்களையும்,   அனைத்து சாஸ்திரங்களையும்   கற்று தேர்ந்தனர்  இராம, பரத,  இலட்சுமண, சத்ருக்கனர்கள்.   யானை ஏற்றம், தேர் ஏறுதல், குதிரை ஏற்றம்   ஆகிய  கலைகளை முறையாக கற்று,  படைக்கலப் பயிற்சிகளையும் பயின்று    'வானவர் தனிமுதல்   கிளையொடு வளர'_ தேவர்களுக்கு தனி முதல்வனான இராமன் தம்பியருடன் வளர்ந்து வந்தார் என்கிறார் கம்பர்.   
                               
   "அருமறை முனிவரும்  அமரரும் அவனித்
     திருவும் அந்நகர் உறை செனமும் நம் இடரோடு
     இருவினை   துணிதரும் இவர்களின் இவண்நின்று
      ஒருபொழுது   அகல்கிலம்  உறை என உறுவார்"  __(306)

____ அருமறை உணர்ந்த முனிவர்களும், தேவர்களும்     அயோத்தி  நகரத்தில்   வசிக்கும் மக்களும்  'இவ்வரச   குமாரர்களால்    நம் துன்பத்தோடு  இருவினைகளும்  அழியும்;  எனவே  இந்நகரத்தில்  வசிப்பதிலிருந்து  ஒரு பொழுதேனும் நீங்கிச செல்லமாட்டோம்'    என்று  நினைத்து அங்கேயே வாழ்ந்திருந்தார்கள்.
  
  நான்கு புத்திரர்களும்     இணைபிரியாது    நூலிழையைப் போல   இணைந்திருந்தனர்.      இலட்சுமணரும், சத்ருக்கனனும்  மகாஞானியான சுமத்திரைப் பெற்ற இரட்டையர்கள்.  ஆனால் கைகேயி பெற்ற மாணிக்கமாம்  பரதனும், சத்ருக்கனனும்    மிகச் சிறு வயதிலிருந்தே   இணைபிரியாது   வாழ்ந்திருந்தனர்.     அதைப்போலவே   நான்மறைகள் போற்றும்   மூலப்பரம்பொருளாம்  ஶ்ரீராமரும்,   ஆதிசேஷனின் அவதாரமாம்   இலட்சுமணரும்  இணைபிரியாது  வாழ்ந்திருந்தனர்.       
         

" எதிர்வரும்  அவர்களை    எமையுடை இறைவன்
   முதிர்தரு  கருணையின்  முகமலர் ஒளிரா
    எது வினை இடர் இலை  இனிதும் நும்  மனைவியும்
    மதி தரு குமரரும்    வலியர்கொல் எனவே".___(312)

         ___     எம்மை அடிமையாக உடைய இறைவனாம் இராமன்,  தன்னெதிரே    வரும்     அயோத்தி  மக்களிடம்,   மிகுந்தக்  கருணையோடு,   செந்தாமரை  மலர்  போன்ற  தன் முகம் ஒளிவீச, ' உமக்கு   நான்  செய்யத்தக்கச் செயல் ஏதாவது உள்ளதா? உங்களுக்குத்  துன்பம் ஏதுமில்லை அல்லவா?   உம் மனைவியும், புத்திசாலிகளான  குழந்தைச் செல்வங்களும்   சுகமாகவும், நோயற்றும், வலிமைப் பெற்றவராகவும் இருக்கின்றனரா? என்றெல்லாம் கனிவோடு  வினவுவார்  __  என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர்  கூறுகிறார்.

  ___  ஐயனே!     நீ    நினைத்தவாறே நாங்கள் நலமாக இருக்கின்றோம்;   தங்களது   தந்தையின் அரசாட்சியில் நாங்கள் நலமாக இருப்பது அரிய செயலல்ல;   எங்கள்  உயிரையும்,   ஏழுலுலகங்களையும்    இப்பிரமன்         அழியும் காலம் வரையில் ( ஊழிக் காலம் முடியும் வரை)  நீ ஆட்சி    செய்வாய்!    என்று அவர்கள் நன்கு வாழ்த்தி   விடையளித்தனர். (313 _ ஆம் பாடலின் பொருள்)

__   மும்மூர்த்திகளுக்கு   முதல்வனான   இராமர்__' முப்பரம் பொருளினும் முதல்வன்'   __  இவ்வாறு  அழகிய  அந்த   அயோத்தியில்  வாழும்  அனைவரும்  தனது   உண்மையான   புகழைக்  கூறவும்    வீரர்களாகிய  தம்பியர் மூவரும்  தன்  திருவடி  நிழலில் பொருந்திப் போற்றவும் இனிதாக வாழ்ந்திருந்தார்! என்று கம்பர்  திரு அவதாரப் படலத்தை இனிதுற முடித்துள்ளார்.
        (314  ஆம் பாடலின் பொருள்)

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...