Sunday, July 8, 2018

இலக்கியங்களில் திருமாலும், திருமகளும்

திருமால்

மால்  என்ற சொல்லே    "திரு"  என்ற அடைமொழியைப் பெற்று திருமால் என்றானது.   "திரு"   என்ற  அழகியத்  தமிழ்ச்சொல்     செல்வத்தின் தலைவியைக் குறித்தது. அத்தலைவியை உடையவன் என்றே  "மால்",   திருமால் ஆனார்.  மாயோன்  எனத் தமிழிலக்கியங்கள் போற்றியதும்  இவரையே.   கண்ணன் என்ற சொல்லும் "கரியவன்" என்ற பொருளில்  திருமாலையே  குறித்தது. வேதங்களைவிடவும் பழமையானது திருமால் வழிபாடு. ஆதிநாராயணன் என்றும் விஷ்ணு என்றும் இவர்  அழைக்கப்படுகிறார்.  மிகவும் பழமையான சங்க இலக்கியங்களிலும்  மால்,  மாயோன் என்ற சொற்கள் பயின்று வருகின்றன.  முல்லைப்பாட்டில் "மால்" என்ற சொல்லும், மதுரைக்காஞ்சியில் "மாயோன்"  என்ற சொல்லும் வருகிறது.
                  காடும், காடு சார்ந்த இடமுமாகத்  தொல்காப்பியர்   வரையறுத்த  "முல்லை"  நிலத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவர் திருமால். காடு என்றாலே பசுமையும், அடர்ந்த இருளுமே; அதுவே   காடுறை தெய்வமாம்  திருமாலின்  நிறமுமாகவும் இருப்பது  மிகப் பொருத்தமே.   அழகிய நீலமணி வண்ணனாகவும், கருடக்கொடியை உடையவராகவும் திருமால்   புறநானூற்றில் புகழப்படுகிறார்.

'மண்ணுறு  திருமேனி  புரையுமேனி
விண்ணுயர்  புட்கொடி  விறல்வெய்யோன்'

பூவைப்பூ வண்ணனாக விளங்கும் கண்ணனையும்  அவரது அண்ணன் பலராமரையும் போல   இருபெரு வேந்தர்களும் இணைந்து நிலைபெறுக! என பறநானூற்றில்  காவிரிப்பூம்பட்டினத்துக்   காரிகண்ணனார்  வாழ்த்துகிறார்.

" பானிற உருவிற் பனைக்கொடியோனும்
  நீனிற உருவின் நேமியோனும் என்று  
    இருபெரு தெய்வமும்......
     ...............
    இசை வாழியவே"    __   ( புறநா.   58)

"மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்"   ( நற்_ 32)

"காந்தளஞ் சிலம்பில் நீடுகலைக் களிறுபடிதந்  தாங்குப்
  பாம்பணைப்  பள்ளி  அமர்ந்தோன்"   __(பெரும் பாணாற்றுப் படை_ 371_373)

பாம்பணையின் மேலே பள்ளிக்கொண்ட பெருமாள் எனத்  திருமாலைப் போற்றும் இலக்கியம் பெரும்பாணாற்றுப் படை .

"நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முகன் ஒருவன் பயந்த"   
( பெரும்பா.  _ 402_ 403)

  "இருநிலங் கடந்த திருமறு மார்பின்
     முந்நீர் வண்ணன்"   _( பெரும்பா. _ 29_ 30)

முந்நீர்= கடல்

எட்டுத்தொகையுள்  ஒன்றான  நற்றிணையின்  கடவுள் வாழ்த்தே   பழந்தமிழரின்  தெய்வமாம் திருமாலுக்கே.

  பாரதம் பாடிய  பெருந்தேவனாரோ,   இப்பேருலகையே  மாயோனாக உருவகப்படுத்தியுள்ளார்.

" மாநிலம்  சேவடி யாகத் தூயநீர்
   வளைநல் பௌவம் உடுக்கையாக
  .................
வேத முதல்வன் என்ப
தீதுஅற விளங்கிய  திகிரி யோனே"    பௌவம்= கடல்

வேதமுதல்வன் எனத் திருமாலைப் போற்றுகிறார்  பாரதம் பாடிய பெருந்தேவனார்.

  காக்கும் கடவுளாம்  திருமாலைப் பற்பலவிதமாகச்   சங்க இலக்கியங்கள்  போற்றி புகழ்கின்றன.

திருமகள்:  
    
திருமால்  அரவணையில்  அறிதுயில் கொள்வதாகப்  போற்றும் இலக்கியங்கள்,  மாயோனின் மனைவியான   திருமகளையும்  போற்றுகிறது. 
     திருமாலின் திருமார்பில் உறைபவளாக  இலக்குமி போற்றப்படுகிறாள்.    
நகரத்தின் காவல் தெய்வமாகவும் திருமகள் போற்றப்படுகிறாள்.  திருமகள் நாட்டைவிட்டு நீங்கினால்   எதிரிகளின் வசப்பட்டு  நாடு அழியும்! என மக்கள் நம்பினர். வீடுகளிலும்  திருமகளின் உருவம்  எழுதப்பட்டிருந்ததாம்.

' திருத்துஞ்சும் திண்காப்பு'   
( பட்டினப்பாலை  _41)

'திரு நிலைஇய பெருமன்னெயில்'
  ( பட்டினப்.  291)

   திருமாலின் மார்பில் உறையும் திருமகள்   நாடாளும் அரசர்களின்  இதயத்திலும் இருப்பாள்! எனக்  கவிஞர்கள் போற்றியிருக்கின்றனர்.

'திருவளர் மார்ப'    __( மலைபடுகடாம்_ 356)

நன்னன் என்ற   மன்னனின் மார்பில் உறைந்திருப்பவளாக  மலைபடுகடாம் திருமகளைப்   போற்றுகிறது.

வீட்டின் வாயில் நிலைகளில்  திருமகளின் உருவம் வரையப்பட்டிருந்ததாக நெடுநல்வாடை போற்றுகிறது.

" ஓங்குரிலை  வாயில் திருநிலை பெற்ற தீதுதீர்  சிறப்பு" __(நெடுநல்.88_89)

திருமகளின் திருவுருவம் செதுக்கப்பட்ட மதிற்கதவுகளைப் பற்றி  மதுரைக்காஞ்சி  கூறுகின்றது.

    
"தொல்வலி நிலைஇய அணங்குடை  நெடுநிலை  (மதுரைக்கா. _353)

  __  இதுவரைப்  பார்த்தத்  தகவல்களின்படி  "திரு"   என்பது  செல்வத்தின்  அதிபதியாகிய  திருமகளைக்  குறிக்கிறது; பழந்தமிழ்  இலக்கியங்கள்   திருமகளைப்  போற்றுகிறது. 
__உமா  ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...