Sunday, July 8, 2018

யார் இந்த தாமரைக் கண்ணான்

பழந்தமிழரின்  வாழ்விடமான  முல்லை நிலத்தின்( காடு)  தெய்வமாகப்  போற்றப்படுபவர்  திருமால்.   திருமாலைப் பற்றி சங்க இலக்கியங்களில்  நிறைய பாடல்கள் உள்ளன.  சங்க இலக்கியங்ளுள்  ஒன்றான பரிபாடலில் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன. அவற்றுள்  இருபத்தினான்கு பாடல்களே   நமக்குக் கிடைத்துள்ளன. அதில்   எட்டு பாடல்கள் திருமாலைப் பற்றி கூறுகின்றன.   வைணவம் என்ற சொல் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படவில்லை. ஆனால்   அதற்குப் பதிலாக "மாலியம்"  என்ற சொல்  எடுத்தாளப்பட்டுள்ளது. 
              முல்லைதிணையின்  தெய்வமாகத் திருமாலைச்   சங்க இலக்கியங்கள்   கொண்டாடினாலும்,    திணையைக் கடந்தத் தெய்வமாகத் திருமால்  அனைத்து இடங்களிலும் போற்றப்படுகிறார்.  திருமாலின் தசாவதாரத்தில்     முதலாவதான  மச்சம், இறுதியான   கல்கி தவிர ஏனைய  அவதாரங்களைச்    சங்க இலக்கியத்தின்  அக, புற பாடல்கள் காட்டுகின்றன.   பரிபாடலில்   ஆளரி என   நரசிம்மரையும்,   பன்றி என வராக அவதாரத்தையும்    குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
                      திருவள்ளுவரும்  ' அடியளந்தான்  தாவியதெல்லாம்' எனத்  திருமால்  வாமன அவதாரத்தில்   விண்ணையும், மண்ணையும்  அளந்ததைக்  குறிப்பிடுகிறார்.   பிறப்பிற்கும், வீடு பேறை  அடைவதற்கும்   இறைவனின் திருவடிகளே  துணை!   என்பதால் புலவர்களும் அதனையே போற்றி புகழுகின்றனர்.   திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்திலேயே   "தாள்",  "அடி"
என ஏழு இடங்களில்  குறிப்பிடுகிறார்.  பரிபாடலிலும்  ' மறுபிறப்பறுக்கும்   மாசில்  சேவடி'  என  இறைவனின்   தாளினைப் போற்றுகின்றனர்.    பரிபாடலில் கடுவன் இளவெயினனார்,  உன்னைவிட உனது பாதங்கள் பக்தர்களுக்குச்  சிறந்தவை!  என்பதை    'நின்னின்    சிறந்த   நின் தாளிணைவை'   __ எனத்  திருமாலை நோக்கிக்  கூறுகிறார்.
                          பரிபாடலில்  திருமாலின்   நிறத்தைப் புலவர்கள்,  கருமை, நீலம், பசுமை  என ஒவ்வொரு விதமாகப் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.  அவரது நிறத்திற்கு எட்டு உவமைகளைப் புலவர்கள் கையாண்டிருக்கின்றனர்;
காயாம்பூ, நீலமணி, கடல், கார்மேகம்,  இருள், தாமரையிலை, குன்று,  நீலமலர்   என்பனவே  அவை.    ' மண்ணுறு மணி',  ' திரை பாடவிந்த  முந்நீர்'( கடல்),
வருமழை இருஞ்சூல்'(  கார்மேகம்)  என்றெல்லாம் கடுவன் இள வெயினனார்   திருமாலின் திருமேனியின் நிறத்தைப் போற்றுகிறார்.   நல்லெழினியார் என்ற புலவரும் இவ்வாறே   போற்றுகிறார். 
                   திருமாலின்    திருமேனி  கார் மேகம் போல கருமையானது. அவரது கண்களோ தாமரை மலரைப் போல சிவந்தப் பெரிய கண்கள் எனத் திருமாலைப்  புலவர்கள்     அனைவரும்  போற்றுகின்றனர்.    செவ்வரியோடிய சிவந்த அழகியக் கண்கள் எனத் திருமாலை,  'செறா அச்செங்கண்' என்றும்  'செயிர் தீர் செங்கண்'  என்றும்,   " கண்ணே  புகழ்சால்   தாமரை" 
  என்றும்     புலவர்கள்   பரிபாடலில்  போற்றுகின்றனர்.    
திருவள்ளுவரோ   அனைத்தும்  மேலாகக்    காமத்துப்பாலில்,   இவ்வுலகையே 
'தாமரைக்கண்ணனது உலகு'  என்கிறார்.

"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு".
            குறள்__ 1103

[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

இதன்  பொருள்:

  தனது காதலுக்கு   உகந்தப்  பெண்ணின்  மெல்லிய தோளில் துயிலும் தூக்கத்தைவிட  அந்த தாமரைக் கண்ணையுடைய திருமாலின்  சொர்க்கமும் இனிமையாக இருக்க முடியுமா?
      ___ காதலியின் தோளில் தூங்கும் தூக்கமே,  தாமரைக்கண்ணாகிய  திருமாலின் உலகைவிட  இனிமையானது!  என்கிறார்  திருவள்ளுவர். திருமாலின் கண்ணழகைப் புகழ்ந்தே,  தாமரைக்கண்ணான்  என்கிறார்   திருவள்ளுவர். 
              ' தமிழை  ஆண்ட   கோதை  ஆண்டாளோ'   திருப்பாவையில் 
'கார்மேனிச்   செங்கண்   கதிர்மதியம்  போல்  முகத்தான்'   எனக்   கிருஷ்ணரின்   செவ்வரியோடிய சிவந்தத் தாமரை மலரனைய  கண்களைப்  பாடிப்  புகழுகிறார்;   சிவந்த அழகிய   பெரிய கண்கள் என்பதே இதன். பொருளாகும்.   எத்தனை பக்தர்கள் வந்து தன்னைத் தரிசித்தாலும்,  'பெற்ற தாயைப் போல   அருட் பார்வையைச் செலுத்திக் காக்கும் கண்கள்'   என்ற பொருளிலேயே   "விருந்தோம்புல்ல  விசாலாட்சம்"    என   மந்த்ராஜ பத ஸ்தோத்திரம்   நரசிம்மரது கண்களைப் போற்றுகிறது. நரசிங்கமாக வந்தாலும் பக்தர்களை நோக்குங்கால்  தாமரை மலரைப் போல தெய்வீகமாக குளிர்ந்து அருள்பொங்கும் விழிகளாகவே  இருக்கும்! என்பதே இதன் பொருள்; "அரவிந்த நயனம்"  என்பதும்   இதனாலேயே.  தமிழ், சமஸ்கிருதம் எனச்  சிவபெருமான் தந்த  இருமொழிகளிலுமே,  திருமாலின் கண்களைத் 'தாமரை மலர் போன்ற கண்கள்'   என்றே    புலவர்கள்  புகழ்ந்திருக்கின்றனர்.  

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...