Tuesday, July 3, 2018

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார்.
அவரது பக்தி மனம பதறியது.

அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில்,

கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது.

யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை.......?

நாள்தோறும் இரவு,

கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார்.

மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால்,

கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம்.

எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது....!

யாரிடம் போய்ச் சொல்வது இதை..!

பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே...!

யார் உள்ளே வந்து இப்படி செய்கிறார்கள்...?

அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே,
 
""கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா...?

கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே.....!

அதையும் வீட்டில் என தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன்.

அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது......?

உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன்.

காலையில் வந்து பார்த்தால் ,

உன் காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்.....!

ஏன் இப்படி?''
என்று அரற்றினார்...!!

இரவு கோயிலைப் பூட்டும் போதுதான் பார்த்தார்.

நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள்.

தளர்ந்த தேகம்.

கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் அப்படியொரு பரவசம்.

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.

பல ஆண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.

அர்ச்சகர் பிரியத்தோடு கேட்டார்:

""பாட்டி!
    இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?''

""நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான்.
 
  அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டேன்.

அர்ச்சகர் சிரித்தார்.

  ""அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?''

""எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது....?

போகப் போகிற கட்டை.

என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா!

ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான்.

அவனது வலது கை வலிக்காதோ!

  இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை.

நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்?

அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம் கொண்டாடிக் கேட்கிறது.

நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன்.

எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி,

அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!''

அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இவள்.

படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி.

ஆனால் எத்தனை பக்தி!

நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன்,

எப்படி பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும்.

அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.

மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு,

தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.

அன்றிரவு,
  
அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல்,

புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை.

   கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.

""அர்ச்சகரே!

உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை.

என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் ,
  நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.

அதன் மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள்.

மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று நடப்பதைப் பாருங்கள்.

பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!

மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க,

அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது.

மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.

அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.

பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள்.

அதற்கு முன் தோத்திரங்களைச் சொன்னபடி,

அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.

   மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது.

  "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!' என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள்,

சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.

என்ன ஆச்சரியம்!

அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

சாணம் பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து ,

   கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.

நன்கு உறங்கிய அவள்,

  அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.

""கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா?

நேற்று குளிர் அதிகம்.

போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?''
  
என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.

வாய் கொப்பளித்து,
   முகத்தைத் தூய்மை செய்து கொண்டு வந்தாள்.

""தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா.

   உடம்புக்கு ஆகாது.

நீ வெது வெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள்.

  இன்று உனக்காக புள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,''

என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள்.

ஒவ்வொரு புள்ளி வைக்கும் போதும்

"கிருஷ்ணா! முகுந்தா! முராரே!'

என்று கண்ணன் திரு நாமங்களைச் சொல்லிக் கொண்டே புள்ளிவைத்தாள்.

பின் கண்ணனைப் பற்றிய தோத்திரங்களைச் சொல்லியவாறே,

இழையிழுத்துக் கோலம் போட்டாள்.

  தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி,

அடுப்பு மூட்டிச்
சமைக்கலானாள்.

உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.

நடந்ததெல்லாம் கனவா , நனவா...?

அன்றும் கோயிலுக்குப் போனார்.

கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப் பார்த்ததும் ,

அவரது மனம் பக்தியில் தழதழத்தது.

அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி,

    வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார்.

அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.

ஆனால் அவள் வரவில்லை.

அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:

""அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.

ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.

இனி அது கிடைக்காது''.

ஏன்?-
வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.

""நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது.

இன்று அவளுக்கு உடல் நலமில்லை.

அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.

நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக,

நீங்கள் அவள் இல்லம் செல்லுங்கள்.

அங்கே மக்கள் கூடியிருப்பார்கள்.

மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும்.

சுயநலமின்றி,

தாய்ப்பாசத்தோடு

என்னை நேசித்த அவள்,

பக்தியின் பெருமையை நாளை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்!''

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.

அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை.

மறுநாள் காலை மூதாட்டியின் இல்லத்திற்கு விரைந்தார்.

   கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.

பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல,

     விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.

கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.

""இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு?

என் பிள்ளை கண்ணனை,

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அது போதும் எனக்கு!''

மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன்,

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.

""என் தாய் அல்லவா நீ!....!!!

எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?'' என்ற கண்ணன்,

அந்த ஆன்மாவை,

"இரு குண்டலங்களாக்கி"

தன் செவிகளில் அணிந்து கொண்டான்.

குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.

அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு,

அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார்.

கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.

எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ ,

அந்த இடத்தில் இப்போது,

" இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன"....!!

சுயநலமற்ற ஏழைக் கிழவியின் பக்தியை அங்கீகரித்த ,

கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது....!!

" சர்வம் கிருஷ்ணார்ப்பணம்."

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...