Thursday, July 19, 2018

பிரதோஷ காலங்களின் வகைகள்

திவ்யபிரதோஷம்:

துவாதசி திதியும், திரயோதசி திதியும் சேர்ந்து வரும் பிரதோஷம் திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிசேகம் செய்தால் முன்வினைகள் நீங்கும். தீராத வியாதிகள், வழக்குகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோக சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து மேற்கண்ட பலனை அடையலாம்.
மகா பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம் எனப்படும். அன்று முறையான பிரதோஷ விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வயது எண்ணிக்கை இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வணங்கினால் இப்பிறவியில் இப்போதைய வயது வரை செய்த எல்லா பாவங்களும் நீங்கும்.
சப்தரிஷி பிரதோஷம்: பிரதோஷ காலத்தில் முறையாக விரதம் மற்றும்ம் வழிபாடுகளை முடித்த பின்பு, வெட்ட வெளியில், வடக்கு திசையில் வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்த ரிஷி மண்டலம் எனப்படும் விண்மீன் கூட்டம் தெரியும். அந்த ஏழு ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிகள் கிடைக்கும். வானம் தெளிவாக தெரியாவிடில் கிழக்கு திசை நோக்கி நின்று சப்த ரிஷிகளை மனதில் துதித்து வணங்கினால் எல்லா நலங்களும் உண்டாகும்.
ஆட்சரப பிரதோஷம்: ஒரு ஆண்டில் ஐந்து மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு ஆட்சரப பிரதோஷம் என்று பெயர். தாருகா வனத்து முனிவர்கள் தான் என்ற அகந்தை கொண்டு சிவபெருமானை எதிர்க்க, சிவபெருமான் பிட்சாடனர் வடிவத்தில் வந்து அவர்களின் அகந்தையை அழித்தார். தங்கள் பிழை உணர்ந்த முனிவர்கள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றார்கள். அறிந்தே பிழைகள் செய்தவர்கள் இந்த பிரதோஷத்தினை பின்பற்றலாம்.
கந்த பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன்பாக வேல் வேண்டி சிவபெருமானை சிக்கல் என்னும் தலத்தில் வழிபட்ட பிரதோஷம் ஆகும். கந்தவேளின் அருள் பெற நினைப்பவர்கள் இந்த கந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்யலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம்: ஒரு ஆண்டில், ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும். அன்றைய தினம் விரதமிருந்து சிவாலயம் சென்று “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி சிவபெருமானுக்கு வழிபாடு செய்தால் கோடி தோஷங்கள் நீங்கும்.
அர்த்தநாரி பிரதோஷம்: ஒரு ஆண்டில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் விரதமிருந்து சிவாலயம் சென்று சிவ வழிபாடு செய்தால் கர்ம வினைகள் நீங்கி மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கருத்து வேற்றுமை நீங்கும். தம்பதிகளிடையே அன்பும், பாசமும், ஒற்றுமையும் மேலோங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பிரம்ம பிரதோஷம்: பிரம்மா, திருவண்ணாமலையில் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக, ஒரு ஆண்டில் வரும் நான்கு சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து திருவிரிஞ்சிபுரத்தில் சாப விமோசனம் பெற்றார். நாமும் இதனை கடைபிடித்தால் நம் முன்னோர்களின் கர்ம வினையும், நம்முடைய கர்ம வினைகளும், முற்பிறவி சாபங்களும் நீங்க பெறலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...